தூத்துக்குடி - மதுரை இடையே 4வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தூத்துக்குடி மாநகர பகுதியையொட்டி சுங்கவரி வசூல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையம் நேற்று முன்தினம் இரவு முதல் செயல்பட தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் லாரி உரிமையாளர்கள் சாலை பணிகள் முழுமையாக முடிவதற்கு முன்பு வரிவசூல் செய்யக்கூடாது, அதே போன்று வரி வசூல்மையம் மாநகருக்கு மிகவும் அருகில் அமைந்து உள்ளது. இதனால் அதனை மாற்ற வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதை வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு சுங்கவரி வசூல்மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். லாரிகள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் துறைமுகத்தில் பலகோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கின. இதைத்தொடர்ந்து நேற்று மாலை லாரி உரிமையாளர் களுடனான பேச்சுவார்த்தை உதவி கலெக்டர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் தலைமையில் நடந்தது. இதில் பேசிய சப்-கலெக்டர், லாரி உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைக்கு கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு கூறினார்.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான இடம் தூத்துக்குடி சுங்கவரி வசூல் மையம்அருகே உள்ளது. அந்த இடத்தில் தனியாக ரோடு அமைத்து அதன் வழியாக லாரிகள் சென்று வரவும், அதன் வழியாக மற்ற வாகனங்கள் சென்று வர அனுமதிப்பது, சுங்கவரி வசூல் மையத்தை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் லாரி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் லாரிகள் வழக்கம் போல் ஓடத்தொடங்கின.
No comments:
Post a Comment