“தி.மு.க. தலைவரே, காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகக் குத்திக் காட்டிப் பேசலாம் என்றால், நாங்கள் பேச முடியாதா? பேசக் கூடாதா?” இந்தக் கேள்வியுடன் கொந்தளித்துக் கொண்டிருந்த சில தமிழக காங்கிரஸ் புள்ளிகளுக்கு, டில்லியிலிருந்து சிக்னல் வந்தேவிட்டது!
“நீங்களும் பேசலாம். ஆனால் ஆளாளுக்குப் பேசி, சிக்கலை உருவாக்க வேண்டாம். நாங்கள் சொல்லும் ஒரு நபர் மாத்திரம் தி.மு.க.வுக்கு எதிராகப் பேசட்டும்” என்று டில்லி, ஒருவரை நோக்கி கையைக் காட்டிவிட்டது.
அந்த ஒருவர், இளங்கோவன்!
மகள் கனிமொழியை திகார் ஜெயிலில் பார்த்துவிட்டுத் திரும்பியபின், பத்திரிகையாளர்களிடம் கருணாநிதி, “காங்கிரஸ் – தி.மு.க. உறவில் விரிசல் ஏதுமில்லை” என்று கூறியிருந்தார். அது, வெறும் வார்த்தைகள்தான் என்பது அவருக்கே நன்றாகத் தெரியும்.
உறவு, ஏதோ போனால் போகிறது என்று இன்னமும் முறியாமல் இருக்கிறது. எந்த நிமிடத்திலும் முறியலாம்.
இளங்கோவனையும் அதற்காகவே தயார் பண்ணிவிட்டது.
இளங்கோவனுக்கு இது ஒன்றும் புதிய அசைன்மென்ட் கிடையாது. ஏற்கனவே இதில் அனுபவசாலி அவர்.
2006-11ல் தி.மு.க. ஆட்சி செய்தபோது, அவர்களுக்கு ஆப்சலியூட் மெஜாரிட்டி கிடையாது. இது காங்கிரஸைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு சாதகமான அம்சம். ஆனால் தி.மு.க., மசியவில்லை.
அதுகூடப் பரவாயில்லை. காங்கிரஸ் கட்சியினரை ஆளுங்கட்சியினர் மதிக்கக்கூட இல்லை. இதனால், தி.மு.க.,வினர் மீது காங்கிரசார் கடும் அதிருப்தியில் இருந்தனர். அந்த நிலையில், தி.மு.க.,வையும், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சிப்பதில், முன்னாள் மத்தியமைச்சர் இளங்கோவன்தான் முன்னணியில் இருந்தார்.
சில சமயங்களில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய அவரது விமர்சனம் அ.தி.மு.க.வினரைவிட உக்கிரமாகவும் இருந்திருக்கிறது.
ஆனால், சட்டசபை தேர்தல் வந்தது. அதிலும் தி.மு.க.வுடனான கூட்டணிதான் தொடர்ந்தது. டில்லித் தலைமையின் அறிவுறுத்தல்படி தேர்தல் நேரத்தில், தி.மு.க. மீதான விமர்சனத்தை நிறுத்தினார் இளங்கோவன்.
இப்போது காட்சிகள் தலைகீழாக மாறிவிட்டன.
காங்கிரஸ் கட்சியுடனான உறவை, ‘கூடா நட்பு’ என, கருணாநிதியும் விமர்சனம் செய்தார். இந்த விமர்சனம் டில்லியை கோபப்படச் செய்தது. ஆனால், கருணாநிதியின் விமர்சனத்துக்கு டில்லியிலிருந்து பதில் வரவில்லை.
இந்த விளையாட்டை சாதுர்யமாக விளையாட விரும்பியது டில்லி. மாநில அளவில் கருணாநிதி முன்வைத்த விமர்சனங்களுக்கு, மாநில அளவிலேயே பதில் கொடுப்பதென முடிவானது. அதற்குத்தான் இருக்கவே இருக்கிறாரே, இளங்கோவன்.
அது ஒரு அழகிய நிலாக் காலம்!
ஈரோட்டில் நடைபெற்ற தென்னக ரயில்வே ஊழியர் சங்க மாநாட்டில் இளங்கோவன் பேசும்போது, “ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்தவர், கூடா நட்பு பற்றி பேசுகிறார். மகளுக்கு சொல்ல வேண்டிய அறிவுரைகளை மற்றவர்களுக்கு கூறுகிறார். இந்த கூடா நட்புதான், அவரது மகளை சிறையில் தள்ளியது” என்று அதிரடியாகப் பேசினார்.
அன்றுடன் நிறுத்தவில்லை அவர்.
கருணாநிதி காங்கிரஸ் கட்சியை ஒருபுறமாக விமர்சித்துக் கொண்டு, மறுபுறமாக அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை உடைக்காமல் இருப்பதையும் கிண்டலடிக்கத் தொடங்கியுள்ளார்.
“கருணாநிதிக்கு காங்கிரசுடன் கூட்டணி இல்லையெனில் என்ன நடக்கும்? கூண்டோடு சிறைக்குள் செல்ல வேண்டியிருக்கும். அதனால்தான், காங்கிரஸ் கூட்டணி தொடருமென பேசி வருகிறார்” என நேரடியாகவே அடித்திருக்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதியும், இளங்கோவனும் ஒரே மேடையில் காட்சியளித்தனர். அந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசும்போது, “இளங்கோவன் என் மடியில்தவழ்ந்து வளர்ந்த பிள்ளை” என்று பேசினார். அருகிலிருந்த இளங்கோவன் உணர்ச்சி வசப்பட்டு, கருணாநிதியின் மடியைத் தொட்டு வணங்கினார்.
இப்போது?
கருணாநிதியின் மடியில் தவழ்ந்து வளர்ந்த மகள் திகார் ஜெயிலில். மகளை ஜெயிலுக்கு அனுப்பாமல் காப்பாற்றிக் கொடுக்கவில்லையே என்ற கோபம் காங்கிரஸ்மீது. “கூடா நட்பு” என்கிறார்.
இதற்குப் பதிலடி கொடுக்க காங்கிரஸ், கருணாநிதியின் ‘மடியில் தவழ்ந்து வளர்ந்த பிள்ளை’ இளங்கோவனை தேர்ந்தெடுத்திருப்பதுதான் பிளாக் ஹியூமர்.
டில்லியின் கண்ணசைவு இல்லாமல் இளங்கோவன் இப்படிப் பேசத் தொடங்க மாட்டார் என்பது, கருணாநிதிக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், என்ன செய்வது? இளங்கோவனையோ, காங்கிரஸ் கட்சியையோ எதிர்த்துக் கொள்ளும் நிலையிலா அவர் இப்போது இருக்கிறார்?
திகார் ஜெயில் காவலாளியைக்கூட முறைத்துக் கொள்ள முடியாத நிலையில் அல்லவா இருக்கிறார், முன்னாள் முதல்வர்!
1 comment:
nallathu ... arasiyalil ellaam saaththiyam.. pakirvukku vaalththukkal
Post a Comment