கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு பணம் கொடுத்தது ஏன் என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் மல்லையாவிடம் விளக்கம் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
டிபி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி தந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கலைஞர் டி.வியின் பங்குதாரரும், திமுக எம்பியுமான கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
டிபி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு தந்த பணத்தை, வட்டியுடன் திருப்பித் தந்துவிட்டது கலைஞர் டிவி. ஆனால், அவ்வாறு அந்தப் பணத்தைத் திருப்பித் தர இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் விஜய் மல்லையாவும் உதவியதாக இப்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன், யு.பி. குரூப் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.
டிபி ரியாலிட்டி நிறுவனம் தந்த பணத்தை கலைஞர் டிவி செலவு செய்துவிட்ட நிலையில், அந்தப் பணத்தை திருப்பித் தர இந்தியா சிமெண்ட்ஸ், யுபி குரூப் நிறுவனம் ஆகியவை கலைஞர் டி.விக்கு பணம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே இது தொடர்பாக அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் தலைவரான சீனிவாசன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராகவும் உள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், சிபிஐ எங்களிடம் விளக்கம் கேட்கவுள்ளதா என்பது குறித்து எனக்குத் தெரியாது என்றார்.
யுபி நிறுவனத்தின் துணைத் தலைவரான பிரகாஷ் மிர்பூரி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் டிவிக்கு விளம்பரம் தந்த வகையில்தான் யுபி குரூப் நிறுவனம் பணம் கொடுத்துள்ளது. இதுதவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கும் எங்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இல்லை. இது தொடர்பாக சிபிஐ எங்களிடம் தொடர்பு கொண்டால், விளக்கம் தருவோம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment