Friday, June 24, 2011

பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் `சூயிங்கம்` உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்; அத்வானி வற்புறுத்தல்..



மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் உளவு பார்க்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான சர்ச்சை, பெரிதாகின்றது. பாரதீய ஜனதாக் கட்சி இதை இப்போது கையில் எடுத்துள்ளது.

நம்பமுடியாத, சிரிப்புக்கிடமான கதைகளைக் கூறி, மக்களை முட்டாள்களாக்க முயன்றால், அதை மக்கள் இலகுவில் புரிந்து கொள்வார்கள்.” என்றும் கூறியிருக்கிறது அந்தக் கட்சி.

இவர்கள் குறிப்பிடுவது, நிதியமைச்சரின் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்தது சூயிங்கம் என்ற கதையைப் பற்றித்தான்!

மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அலுவலகம் உளவு பார்க்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் உளவு பார்த்து இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். வெளிநாட்டில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், இதை செய்திருக்கலாம் என்று வேறு சிலர் கூறுகிறார்கள். எப்படி இருப்பினும், இது மிகவும் சீரியசான விஷயம். அதனால்தான், இதுபற்றி ரகசிய விசாரணை நடத்துமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதி உள்ளார். இதன்மூலம் அவர் இதை சீரியசாக கருதுவது தெரிகிறது.

இதை சாதாரண விஷயமாக கருதி இருந்தால், பிரதமரிடம் அவர் புகார் தெரிவித்திருக்க மாட்டார். இந்த விவகாரத்தை விசாரணை செய்த அதிகாரிகள், பிரணாப் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த பசை போன்ற பொருளை `சூயிங்கம்` என்று கூறுகிறார்கள். சூயிங்கத்தை விழுங்க முடியாது என்பதால், அதை யாரோ ஆங்காங்கே ஒட்டி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

பிரணாப் முகர்ஜி, மிகவும் புத்திசாலி. அவர் இதை நம்பக்கூடாது. ஒரு குழந்தை சூயிங்கம் சாப்பிட்டால், அதை ஒன்றிரண்டு இடங்களில் ஒட்டி வைக்கும். 16 இடங்களிலா ஒட்டி வைக்கும்? புத்திசாலியான பிரணாப் முகர்ஜி, நாட்டு மக்களும் புத்திசாலிகள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும்.

இந்த வெட்கக்கேடான விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய முழு உண்மைகளையும் பிரதமர் மன்மோகன்சிங் தெளிவுபடுத்த வேண்டும். இப்பிரச்சினையை பா.ஜனதா கூட்டணி, வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பும்.

இவ்வாறு அத்வானி கூறினார்.

No comments: