Friday, June 24, 2011

ரங்கநாயகி ! - கவிஞர் வாலி.




இலங்கையில்


இது காறும் நடந்தது -
போர் அல்ல;

தீவிரவாதப்
போக்கினை அறவே...
தூர்க்கவேண்டித்

துப்பாக்கிகளில் -
ரவைகளை நிரப்பியதாம்
ராணுவம்!
சொல்கிறார்

'சோ’ ;
நாம் நாணுவம்!

குலைகள் நடுங்கத் -
தம்
குடில்கள் வாயிலில்...

சம்மணம் இட்டுச்

சாதாரணமாய் இருந்தோரை -


அம்மணம் ஆக்கினான்; அதன்பின்

அவர்தம் ஆவி போக்கினான்;

முலை உரித்து - மதுரை
மூதூரெரித்த மரபினரின்-

கலை உரித்தான்;

கற்பை உரித்தான்; உயிர்

கவர்ந்து கொடுங்

காலனெனச் சிரித்தான்!...


இத்துணை

இழிசெயல்களை இயற்றியோன் -

சிங்களக் காடை; இராணுவச்
சீருடையணிந்த பேடை!

தீர்த்தம் குறையாத்
தேம்சு நதித்-
தீரத்திலிருந்து...

செயல்படும்

'CHANNEL 4’எனும்
தொலைக்காட்சி -
ஆவணப் படுத்தி
அகில மெங்கும் காட்டியது-

கொடுமை மலிந்த - மேற்சொன்ன
கோரம் மிகுந்த கொலைக்காட்சி!


இதுகண்டு
இதயம் கனத்து-
இங்கிலாந்துப் பிரதமரும்;
இதர பிரஜைகளும்...

'அச்சோ!’ என
அலறுவதை அறியாதவரா என்ன
இச் 'சோ’?

'சோ’ வைப்போல் - இச்
சோகத்தை...
அறிந்தும்
அறியாததுபோல்-
அறிதுயிலில்
அயர்ந்திருப்பவர்...


ஸ்ரீரங்கம் - அருள்மிகு
ஸ்ரீரங்க நாதர்; அவர்-

படுத்தபடி - இலங்கையைப்
பார்த்திருக்கிறார் என்று-

பாடுகிறார் - தொண்டரடிப்
பொடிகள் என்னும் தாதர்!

ஸ்ரீரங்கம் - தீவு;
ஸ்ரீலங்கா - தீவு;
தீவைப் பார்க்கிறது
தீவு;
ஆனால்
அக்கிரமத்திற்கொரு-
தீர்வைப் பார்க்க வேண்டாமா
தேவு?

அய்யா!
அரங்கநாதரே! - நீர்
பாம்பின்மேல்
படுத்து - வெறுமனே
பார்த்திருந்தால்
பயப்படுமா இலங்கை? அதன்காலில்-
பூட்டவேண்டாமா
'போர்க்குற்றம்’ எனும் விலங்கை?

'அருளாதாரம் இன்றித் - தமிழரை
அழித்தொழித்தார்க்குப்-

பொருளாதாரம் இன்றிப்
போகக் கடவது!’ - என்று...

விரைந்து - நீர்
விதித்திருக்க வேண்டாமா தடை?
தூங்கிக்கிடக்கவா - உமக்கு

தோசை; நெய்ப்பொங்கல்; வடை?

ரங்க நாதரே! - உங்கள்
ரங்க நாயகி...

உலக
உயிர்க்கெலாம் தாய்;
ஈழத் தமிழனும் -
அவள்
ஈன்றெடுத்த சேய்!

'பொறுத்தது போதும்’ எனப்
பொங்கி எழுந்தாள்;
அவள் தாள்தான் - இன்று
அனைத்துத் தமிழரும் தொழுந்தாள்!


சான்றோர்
சபையைக் கூட்டி-
'போர்க்குற்றம்’ எனக் கூறினாள்;
பொருளாதாரத் தடை கோரினாள்!

வாக்களித்த ஸ்ரீரங்கத்து மக்கள்
வாழ்த்துகிறார்கள் இன்று-
'எங்க நாயகி’தான் -
அந்த
ரங்க நாயகி என்று!

No comments: