சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மூடு விழா கண்டது.
அவசரகதியில் திறப்பு விழா கண்ட சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைக்கு, தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க, மத்திய அரசு கை விரித்து விட்ட நிலையில், மாநில அரசும் கண்டு கொள்ளதால் அதே அவசர கதியில் மூடு விழா கண்டது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் கருணாநிதியால், 2007 செப்.,14ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2010 ஆக.,20ல் திறப்பு விழா காணப்பட்டது. திறப்பு விழா நடந்து முடிந்து ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில், மே 12ல் சேலம் வந்த சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ், "மருத்துவமனை இன்னும் மூன்று மாதங்களில் முழுமையாக செயல்படும்' என, தெரிவித்தார்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மத்திய, மாநில அரசுகளின் சார்பில் 149 கோடியில் கட்டப்பட்டது. மருத்துவமனைக்கு மாநில அரசை விட, மத்திய அரசின் நிதியே அதிகம். திறப்பு விழாவில் மத்திய அரசின் சார்பில் அமைச்சர்களோ, அதிகாரிகளுக்கோ அழைப்பு இல்லை. அத்துடன் திறப்பு விழா கல்வெட்டிலும் மத்திய அரசுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை.
இதன் காரணமாக மத்திய அரசு, கூடுதல் நிதியை ஒதுக்கி தர மறுத்து விட்டது. மருத்துவமனை முற்றிலும் குளிர்சான வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியில் ஏ.சி., செயல்படாவிட்டாலும், மருத்துவமனையின் அனைத்து பகுதியும் முழுமையாக செயல்பட முடியாது.
அந்த வகையில் மருத்துவமனைக்கு மாதத்துக்கு மின்சார செலவு, ஜெனரேட்டருக்கான டீஸல் செலவுகளுக்கு மட்டும், 80 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது.
இந்த நிதியை மத்திய அரசு வழங்க மறுத்து விட்டது. அதே நேரத்தில் மாநில அரசும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி இதற்கு அனுமதி வழங்க வில்லை. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பாட்டை துவக்குவதில் சிக்கல் நீடித்தது.
மருத்துவமனை கட்டடத்தில் பொறுத்தப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ., - சி.டி.,ஸ்கேன், செயற்கை சுவாச கருவிகள் (வென்டி லேட்டர்) டையாலிஸிஸ் மெஷீன், கேத்லாக், சிறந்த இருதய அறுவை சிகிச்சை கருவிகள் பொருத்தப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது.
சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு செயல்படாததால், பல கோடி முதலீடு செய்து வாங்கப்பட்ட இந்த கருவிகள் அனைத்தும் வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்காக தமிழகத்தின் பல்வேறு மருத்துவ மனைகளில் இருந்து, இருதய சிகிச்சை பிரிவு உட்பட, 32 முக்கிய பிரிவுகளுக்கு தலா மூன்று சிறப்பு டாக்டர்கள் உட்பட மொத்தம், 102 பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர்.
கருவிகள் செயல்படாத காரணத்தால் இவர்களுக்கு பணி இல்லாமல் உள்ளனர். அத்துடன் இவர்களுக்கு மத்திய அரசின், பி.எஸ்.எஸ்.எஸ்.ஓய்., திட்டத்தின் கீழ் தான் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் போதிய நிதி இல்லாததால், பணி மாற்றம் செய்யப்பட்ட டாக்டர்களுக்கு, கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் அறுவை சிகிச்சை அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் அனைத்தும் முறையாக பொருத்தப்பட வில்லை என புகார் எழுந்துள்ளது.
மருத்துவமனையில் டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், மருத்துவமனையை இயக்க மாதத்துக்கு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தேவை உள்ள நிலையில், அதை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வராததால், 149 கோடி ரூபாயில் மக்கள் வரிப்பணத்தில், கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பாட்டை துவக்க முடியாமல் உள்ளது.
போதிய மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையும் முழுவதுமாக இழுத்து மூடப்பட்டது.
நேற்று இரவு விபத்து மற்றும் அவசர சிகிச்சிப்பிரிவில் இருந்த 16 நோயாளிகளை அவசர அவசரமாக மோகன் குமாரமங்களம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து விட்டனர்.
No comments:
Post a Comment