"உலக எரிபொருள் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் டீசல் விலையை உயர்த்துவதா? மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது" என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மத்திய அரசுமீது சாடியுள்ளார்.
சமீபத்தில் சமையல் கேஸ், மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலையினை மத்திய அரசு உயர்த்தியது. இது நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவரும் திரைப்பட இயக்குனருமான சீமான் மத்திய அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலைகளை உயர்த்தினால் மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டியது வரும் என்பதால் தேர்தல் முடிந்தபின் விலையேற்றம் செய்தது மத்திய அரசு. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதி தந்தது.
இந்த விலையேற்றத்தைச் செய்தபோது பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலராக இருந்தது. அதை வைத்துக் கணக்கிட்டே எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.458 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும், அது இந்த நிதியாண்டு முழுவதும் கணக்கிட்டால் ஒட்டுமொத்த இழப்பு ரூ.1,67,000 கோடியாக ஆகும் என்றும் கூறி செய்திகளைப் பரப்பியது.
ஆனால், இன்றைக்கு டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மத்திய அரசு உயர்த்தியபோது, பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 91.23 டாலராக குறைந்துள்ளது. ஆயினும் அதே இழப்பு கணக்கை - ரூ.1,71,000 கோடியை - பெட்ரோலியத்துறை மந்திரி கூறுகிறார். இது மக்களை ஏமாற்றுவதாக ஆகாதா?.
2008-ம் ஆண்டு ஜுன் மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 145 டாலராக உயர்ந்தது. அப்போது பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ.50.60 (டெல்லி விலை) ஆக இருந்தது. டீசல் விலை ரூ.35.86 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கி 100 டாலருக்கும் கீழ் வந்தவுடன் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதியன்று பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலை ரூ.2-ம் மத்திய அரசு குறைத்தது.
ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை 91 டாலர்கள் என்று நிலவும் போது விலையை ரூ.43.80 ஆக உயர்த்தியது ஏன்?. பெட்ரோல் விலை ரூ.70-க்கு உயர்ந்த பின்னரும், இன்னமும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இழப்புதான் ஏற்படுகிறது என்றால் எப்படி?. இந்த வினாக்களுக்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும்.
எனவே, பொதுமக்களுக்கு எழும் வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் புரியும்படியான ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்." என்று அந்த அறிக்கையில் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment