Monday, June 27, 2011

கோகைன் இரவு விருந்து..60 பெண்கள், 240 வாலிபர்கள் சிக்கினர் - போதைத் தடுப்பு இன்ஸ்பெக்டரும் கைது !


நேற்றிரவு மும்பை ரிசார்ட்டில் கஞ்சா, கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் வினியோகத்துடன் நடந்த இரவு நேர களியாட்டத்தில் கலந்து கொண்ட 60 இளம் பெண்கள் உள்பட 300 பேர் பிடிபட்டனர். இந்த போதை ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு உதவிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டரும் கைது செய்யப்பட்டார்.

மும்பை போலீசார் மற்றும் கிரைம் பிராஞ்ச் போலீசார் இணைந்து மும்பையில் பல ஹோட்டல்கள், டிஸ்கோத்தேக்கள், தாபாக்கள், ரிசார்ட்கள், பார்களில் சோதனையிட்டனர்.

அப்போது மும்பை-புனே நெடுஞ்சாலையில் காலாபூரில் உள்ள மவுண்ட் வியூ ரிசார்ட்டில் போதை மருந்துகள் வினியோகத்துடன் இரவு நேர ஆட்டம், பாட்டம் நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் 60 இளம் பெண்கள் உள்பட 300 பேரை சுற்றிவளைத்தனர். இவர்கள் அனைவருமே வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் போதை மருந்துகளை பயன்படுத்தியிருந்ததால் கடும் போதையில் இருந்தனர். இவர்களது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். அந்த மாதிரிகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் வந்தவுடன் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த நபர்கள், இந்த இரவு நேர விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், ரிசார்ட்டின் மேனேஜர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களுடன் போதை மருந்து தடுப்புப் பிரிவின் இன்ஸ்பெக்ட்ரான அனில் ஜாதவ் என்பவரும் சிக்கினார். போதை மருந்துகள் இருந்த அறையில் ஜாதவ் அமர்ந்திருந்து, அதை சிறிது சிறிதாக பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். இவரது முழு உதவியுடன் தான் இந்த போதை களியாட்டம் நடந்துள்ளதும் உறுதியாகியுள்ளது.

இந்த ரிசார்ட்டில் இருந்து கஞ்சா, சராஸ், கோகைன், சிறிஞ்சுகள், ஊசிகள் மற்றும் ரூ. 3 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments: