தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம்: போருக்கு பின் தமிழர்களின் நிலை குறித்து அதிர்ச்சி தகவல்
இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் நடந்த போருக்குப் பிறகு தமிழ் மக்களின் நிலை குறித்த உண்மை நிலை அறிய மலேசியாவில் இருந்து ஒருவரும், தமிழ்நாட்டில் இருந்து நான்கு பேரும் ஆகிய ஐந்து பேர் கொண்ட உண்மை அறியும் குழு கடந்த 25.05.2011 அன்று இலங்கை சென்றது.
அக்குழுவில் இடம்பெற்றுள்ள பர்னாட் பாத்திமா, பத்மாவதி, சண்முக பிரியா, இருதய ராஜ், தென்பாண்டியன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18, 19ம் தேதி நடந்த போருக்குப் பின் தமிழ் மக்களின் சமூக அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சூழல் எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐவர் குழு தமிழகத்தில் இருந்து இலங்கை வடகிழக்குப் பகுதிக்கு சென்றது.
இலங்கை அரசு சர்வதேசக் குழுமத்திடம் சொல்வது போல நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்து விட்டோம் என்பதெல்லாம் உண்மையில்லை என்பதை நேரடியாகக் கண்டுணர்ந்தது. மேலும் யுத்த களத்தில் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.
30 ஆண்டுகால போரில் 90,000 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு உயிரிழப்பு அல்லது ஒருவர் உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவராய் இருக்கின்றனர். முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட எல்லோரும் முழுமையாக மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
இன்னும் இரண்டு பெரிய முகாம்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.
1. மீள் குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகட்டுவதற்கு பொருளாதார உதவி ஏதும் செய்யாமல் வெறும் நிலத்தை மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.
2. அடிப்படை வசதிகளான வீடு, குடிதண்ணீர், மின்சாரம், கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, சாலை வசதி போன்றவை செய்துதரப்படவில்லை.
3. தமிழர்கள் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் நடைப்பெற்று வருகின்றன.
4. இந்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை அழித்துவிட்டு புத்த சிலைகளை நிறுவி பௌத்த மதக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனர்.
5. தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளான வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திரிகோணமலை, மட்டக்களப்பு, யாழ்பாணம் ஆகிய பகுதிகளில் ராணுவ முகாமகள் அடர்த்தியாக காணப்படுவதால் மக்கள் பீதியிலும் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கியும் நாட்களை நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
6. போர் இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் மகிந்த ராஜபக்சே நாட்டைப் பிளவுப்படுத்தும் பயங்கரவாதத்த்திற்கான யுத்தத்திலே நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று தொடர்ந்து கூறுவது சிங்கள இனவெறியை தூண்டுகின்ற வகையில் இருக்கிறது.
7. யுத்தம் முடிந்த பிறகு தமிழ் மக்கள் தங்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பிவிட்டனர் என்று இலங்கை அரசு சொல்வது உண்மையில்லை.
8. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான மீள்குடியேற்றம் செய்வதற்கான ஒருங்கிணைந்த திட்டங்களை இலங்கை அரசு உருவாக்கவில்லை. இந்தியாவிலிருந்தும் மற்ற சர்வதேச நாடுகளில் இருந்தும் உதவியாக வந்த பொருட்களையும், பணத்தையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காகப் பயன்படுத்தவில்லை என்பதை மக்களே கூறுகிறார்கள்.
9. யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறும் இலங்கை அரசு வடகிழக்கு மாவட்டங்களில் அளவுக்கு அதிகமான ராணுவ முகாம்களை அமைத்திருக்கிறது.
10. இன்னும் உள்ள இரண்டு அகதிகள் முகாம்களில் 12,000 மக்கள் அகதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களில் போர் கைதிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்றும் தெளிவாகத் தெரியவில்லை.
11. வடகிழக்கு பகுதியில் பேச்சு சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது கூட்டமோ அல்லது அக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் யாரோ அந்த நபர் திடீரென்று காணாமல் போய்விடுவதாவும் கூறுகிறார்கள்.
12. ஒரு இடத்தில் வாழ்ந்த மக்கள் சண்டைக் காரணமாக பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
13. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களில், மனைவிகள் கணவர்களைத் தேடி அலைகின்றனர். பிள்ளைகள் பெற்றோரை தேடி அலையும் நிலையில் உள்ளனர்.
14. குடும்பத்தை தலைமையேற்கும் பெண்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் இல்லை.
15. 17 வயது முதல் 28 வயது வரை இளம் விதவைகள் 12,000 பேர்கள் உள்ளனர். இந்தப் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இவர்கள் ராணுவம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
16. 18 வயதிற்கும் குறைவாக உள்ள 6 ஆயிரம் இளம் பெண்கள் திருமணமாவதற்கு முன்பே கருவுற்றிருக்கிற அவலநிலை உருவாகியுள்ளது.
17. போரில் குண்டடிப்பட்டு உடல் உறுப்புகளை இழந்து மாற்றுத் திறனாளிகளாக காலம் முழுவதும் மாற்றப்பட்டுள்ள தமிழர்களுக்கு முறையான மறுவாழ்வு திட்டம் இல்லாததால் நடுக்கடலில் விடப்பட்ட படகு போல விடப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் நிலையை அறிந்து இந்த உண்மையறியம் குழு சில பரிந்துரைகளை செய்துள்ளது.
பரிந்துரைகள்:
1. இலங்கைத் தமிழர்களுக்கு அரசு அதிகாரத்தில் பங்களிக்க வேண்டும்.
2. நிலம் மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரங்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசுகளுக்கு வழங்க வேண்டும்.
3. இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தொடர்பான தீர்வு காண வேண்டும்.
4. 1987-ல் 13வது அரசியல் சாசன சட்ட திருத்தத்தின்படி ஈழத்தமிழர் பகுதிக்கு சுய அதிகாரம் வழங்க வேண்டும்.
5. முக்கியமான அரசியல் அதிகாரங்கள், வசிப்பிடங்கள் மீதான அதிகாரம் ஆகியவற்றை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்க வேண்டும்.
6. வடக்கு, கிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.
7. தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நெருக்கடி நிலைமை, காவல்துறை மற்றும் ராணுவமும் திரும்ப பெற வேண்டும்.
8. இலங்கையில் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாதிக்கப்பட்டதமிழ் மக்களோடு இணைந்த குழு ஏற்படுத்த வேண்டும்.
9. தடுப்பு முகாம்களில் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும்.
10. போரினால் தனித்து விடப்பட்ட கணவனை இழந்த, பிள்ளைகளை இழந்த பெண்களின் மறு வாழ்வுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும். (உம்) வேலை வாய்ப்பு, விவசாய நிலம் வழங்குதல், தொழிற்ப் பயிற்சி போன்றவைகள் செய்துதர உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
11. தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்து, அவர்களுடைய மறுவாழ்வுக்கு உறுதி செய்ய வேண்டும்.
12. இதுவரை பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறை, ராணுவம், ஆண்கள் இவர்களை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுத்து சட்ட ரீதியான தண்டனை வழங்க வேண்டும்.
13. முகாம்களில் இருக்கும் பெண்களுக்கு அந்தந்த முகாம்களில் இருக்கும் நாட்களில் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
14. போரினால் பெற்றோர்களை இழந்து காப்பகங்களில் இருக்கும் ஆண், பெண், குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் ஒப்படைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்டவைகள் உண்மை அறியும் குழுவின் சார்பில் பரிந்துரை செய்யப்படுகிறது என்றனர்.
No comments:
Post a Comment