Saturday, June 25, 2011

ஓமலூர் போலீசாரை மிரட்டிய தேமுதிக எம்எல்ஏ. S.R.பார்த்திபன், சிறைபிடிப்பு - வீடியோ இணைப்பு.




தேமுதிக மகளிரணியைச் சேர்ந்த பிரமுகர் தாக்கப்பட்டதையடுத்து ஓமலூர் காவல் நிலையத்துக்கு வந்து கலாட்டா செய்த மேட்டூர் தேமுதிக எம்எல்ஏவை போலீஸார் சிறைப் பிடித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த ஆனைக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த வெங்கடாஜலத்தின் மனைவி பேபி, தேமுதிக மாவட்ட மகளிரணி துணைச் செயலாளராக உள்ளார்.

அரசு பொறியியல் கல்லூரி எதிரே இவருக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் சரவணன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். பேக்கரியை காலி செய்யுமாறு பலமுறை கூறியும், சரவணன் மறுத்ததால் இருதரப்பினரிடையே மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று பேபியை மர்ம கும்பல் தாக்கியதாகக் கூறி, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேபி சேர்ந்தார். இதுகுறித்து ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந் நிலையில் பேபியைத் தாக்கியவர்களை உடனே ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டவாறு, மேட்டூர் தேமுதிக எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் நேற்றிரவு ஓமலூர் காவல் நிலையத்துக்கு வந்து போலீசாரிடம் மிரட்டல் தொனியில் பேசினர்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கும் எம்எல்ஏவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எம்எல்ஏ வாய்க்கு வந்தபடி பேசவே, கோபமடைந்த போலீசார் எம்எல்ஏவின் கார் வெளியே செல்ல முடியாதவாறு காவல் நிலையத்தின் கேட்டை பூட்டிவிட்டு எஸ்.பி. மயில்வாகனனுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து எஸ்.பி. மயில்வாகனன், ஏடிஎஸ்பி ஈஸ்வரன், டிஎஸ்பி சுப்பிரமணி யம் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் நிலையத்துக்கு விரைந்தனர். போலீஸாரால் எம்எல்ஏ சிறைப்பிடிக்கப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து காவல் நிலையத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான தேமுதிக தொண்டர்களும் திரண்டனர்.

இதைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இரவில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்ததையடுத்தும், எம்எல்ஏ தரப்பு பணிந்ததையடுத்து, அவரை காவல்துறையினர் வெளியே செல்ல அனுமதித்தனர்.

1 comment:

சகாதேவன் said...

இதுதான்(டா) போலீஸ்
சகாதேவன்