Saturday, June 25, 2011

தேவை ஒரு ஸ்டெம்செல் வங்கி, தொடங்குமா தமிழக அரசு ?



சந்தையில் புதிது புதிதாக அறிமுகமாகும் உணவு வகைகளைப் போல மருத்துவத் துறையிலும் புதிய பல நோய்கள் உலா வருகின்றன. இந்த நோய்களுக்கு ஏற்றார்போல, மருத்துவத் துறையில் அவற்றைக் கட்டுப்படுத்த சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. அண்மைக்காலமாக மருத்துவத் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் ஆதார செல்கள் எனனும் "ஸ்டெம்செல்' சிகிச்சையின் மூலம் பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.

ஆதார செல்கள் எனப்படும் ஸ்டெம்செல் உற்பத்தி

ஆதார செல்கள் எனப்படும் "ஸ்டெம்செல்' சிகிச்சை மருத்துவத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் "ஸ்டெம்செல்'களைச் செலுத்துவதன் மூலம் அந்த நோய் பாதிப்பில் இருந்தும், அதனால் ஏற்பட்ட சேதத்தில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்க முடியும்.

எலும்பு மஜ்ஜை, கருப்பையில் உள்ள கரு, விழி வெண்படலம், ரத்தம், பல், கல்லீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து ஆதார செல்கள் எனப்படும் "ஸ்டெம்செல்'கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. "ஸ்டெம்செல்' சிகிச்சை இப்போது நீரிழிவு நோய், நிணநீர் மண்டலப் புற்றுநோய், மூளைக்கட்டி, இதய நோய், முதுகுத் தண்டுவட பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்னை உள்ளிட்ட 85-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு நிரந்தரத் தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.

மாதவிடாய் ரத்தத்தில் ஸ்டெம்செல்

"ஸ்டெம்செல்'லின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, இப்போது பெண்களின் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தக் கழிவுகளில் இருந்து ஆதார செல்கள் எனப்படும் "ஸ்டெம்செல்' களைப் பிரித்தெடுத்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கவும் மருத்துவத் துறை பெரும் முயற்சி எடுத்து வருகிறது. மாதவிலக்கின் 2ஆம் நாள், பிறப்புறுப்பில் ``மென்ஸ்ட்ருவல் கப்`` செலுத்தி ரத்தம் சேகரிக்கப்படும். இந்த ரத்தத்தில் இருக்கும் கிருமிகள் நீக்கப்பட்டு, வேர் செல்கள் பிரிக்கப்படும். பிரித்தெடுத்த வேர் செல் திரவ நைட்ரஜனில் மைனஸ் 150 டிகிரி செல்ஷியசில் பாதுகாக்கப்படும். இதனைக் கொண்டு மூட்டுவலி மற்றும் சில நோய்களுக்கு தீர்வு காண முடியும் என்று மும்பையில் உள்ள மகப்பேறு மருத்துவ டாக்டர் இந்திரா ஹிந்துஜா அவர்கள் கொண்ட ஆராய்ச்சியில் ``லைப் செல் பெமே`` என்ற பெயரில் மாதவிடாய் ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட வேர் செல்லை அறிமுகப்படுத்தி உள்ளார். இதனை மும்பையில் ``லைப் செல் இன்டர்நேஷ்னல்``என்ற தனியார் நிறுவனம் விற்பனைக்கு வைத்துள்ளது.

ஸ்டெம்செல் வங்கிகள்

"ஸ்டெம்செல்' குறித்த விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையத் தொடங்கி உள்ளது. இதனால், "ஸ்டெம்செல்'களை அதற்குரிய "ஸ்டெம்செல்' வங்கிகளில் சேமித்து வைப்பது அதிகரித்து வருகிறது.

தொப்புள் கொடியில் இருந்தும், எலும்பு மஜ்ஜையில் இருந்தும் எடுக்கப்படும் "ஸ்டெம்செல்'களைச் சேமித்து வைப்பதே இப்போது அதிகமாக உள்ளது. இந்த வகை "ஸ்டெம்செல்'களைச் சேமித்து வைக்க ரூ. 25 ஆயிரம் கட்டணமாக தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகள் வசூலிக்கின்றன. இக் கட்டணத்தை சில தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகள், தவணை முறையிலும் வசூலிக்கின்றன.

அரசு உருவாக்குமா?

இப்போதுள்ள சூழ்நிலையில், "ஸ்டெம்செல்' சேமித்து வைக்கத் தனியார் நிறுவனங்கள் மட்டுமே "ஸ்டெம்செல்' வங்கிகளை உருவாக்கி வருகின்றன. இதுவரை அரசு எங்கேயும் "ஸ்டெம்செல்' வங்கிகளை உருவாக்கவில்லை. பல ஆயிரம் கோடியில் சுகாதாரத் திட்டங்களையும், காப்பீட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தும் தமிழக அரசு, இன்னும் "ஸ்டெம்செல்' வங்கியைத் தொடங்க ஆரம்பகட்ட நடவடிக்கையைக்கூட எடுக்காமல் இருப்பது மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. அரசே பல இடங்களில் "ஸ்டெம்செல்' வங்கிகளைத் தொடங்கும்பட்சத்தில், நடுத்தர மக்களை மட்டுமன்றி, ஏழைகளையும் இது சென்றடையும்.

ஏற்கெனவே தொப்புள்கொடியிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தின் மூலம் ஸ்டெம்செல் கண்டறிந்து பக்கவாதம், முதுகெலும்பு பாதிப்பு போன்றவற்றிற்கு அமெரிக்காவில் ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்பட்டு, குணப்படுத்தப்பட்டு வருகிறது. "ஸ்டெம்செல்' மூலம் வருங்காலத்தில் மேலும் பல நோய்களுக்குத் தீர்வு காணும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலை ஏற்படும்போது "ஸ்டெம்செல்' மூலம் இப்போது அடையும் பயனைவிட, எதிர்காலத்தில் அதிகப்படியான பயன்களை மக்கள் அடைய முடியும்.


thatstamil.oneindia.in

1 comment:

பனித்துளி சங்கர் said...

விழிப்புணர்வும் , மருத்துவம் சார்ந்த புதுமையான தகவல்களையும் இந்தப் பதிவின் வாயிலாக அறிந்துகொண்டேன் . பகிர்ந்தமைக்கு நன்றி