Sunday, June 26, 2011

பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம் : மருத்துவர்கள் தகவல்.



தற்போதைய அறிவியல் யுகத்தில் உடலில் இழந்த உறுப்புகளை மீண்டும் புதிதாக பொருத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் கண்டுவருகிறது.

நமது உடலில் மிக மென்மையான பகுதி கண்ணாகும். வயதான காலத்தில் பாரம்பரியம் காரணமாக பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. இந்த பார்வை இழப்பை சரி செய்து பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் பார்வை பெற புதிய ஆதார செல்களை (ஸ்டெம் செல்) கண்களுக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பார்வை இழந்த இரண்டு பெண்களுக்கு லட்சக்கணக்கான கரு ஆதார செல்கள் செலுத்தப்பட்டு அவர்களுக்கு பார்வை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்களுக்குள் ஆதார செல்களை செலுத்தும் துவக்க கட்ட சோதனை அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இருப்பினும் இந்த ஆதார செல் சோதனை பிரிட்டன் நோயாளிகளுக்கு வரவிருக்கும் இளவேனிற்காலத்தின் போது மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பார்வை இழப்பு ஏற்பட்ட விலங்குகளுக்கு ஆதார செல் செலுத்தும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது மிக அற்புதமான முடிவு கிடைத்தது. ஆதார செல்கள் செலுத்தப்பட்ட விலங்குகள் புதிய கண் பார்வை பெற்றுள்ளன. இந்த அதிநவீனமான சிகிச்சை மனிதர்களுக்கு மேற்கொள்ளப்படும் போது நல்ல பலனளிக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆதார செல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. முதல் பரிசோதனை கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது.

புதிய சிகிச்சை முறை குறித்து மாசாசூட்ஸ் அதிநவீன செல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மருத்துவர் லாங்சா கூறுகையில்,"முற்றும் சிகிச்சை அளிக்க முடியாத நோய்களுக்கு மட்டுமல்லாமல் பலவீனம் அடைந்த கண் நோய்களுக்கும் சிகிச்சையை இந்த ஆதார செல்கள் மூலம் அளிக்க முடியும்" என்றார்.

No comments: