Sunday, June 26, 2011

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு !




சுமார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.

கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம்.

சூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பின்னர் மறைவதற்கும் அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும். மறைய ஆரம்பிக்கும் கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். ஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. 1954-ம் ஆண்டில் 201 கரும்புள்ளிகள் தென்பட்டன.

கி.பி. 1645 முதல் 1715-ம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்தவரான எட்வர்ட் மாண்டர் என்ற விஞ்ஞானியைக் கௌரவிக்கும் வகையில் இக் காலகட்டத்துக்கு "மாண்டர் மினிமம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கரும்புள்ளிகள் முதலில் சூரியனின் நடுக்கோட்டுக்கு மேலேயும் கீழேயும்தான் தோன்றுகின்றன. பின்னர் சூரியனின் நடுப்பகுதியிலும் இவை தோன்றுகின்றன. பெயர்தான் கரும்புள்ளியே தவிர, கரும்புள்ளி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானது. சிறிய கரும்புள்ளிக்குள் கூட ஒரு பூமியை உள்ளே இறக்கி விடலாம் என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பெரியது. உண்மையில் சூரியனின் கரும்புள்ளிகள் கருமையானவை அல்ல. சூரியனின் மேற்புறத்தில் மற்ற இடங்களைவிட வெப்பம் குறைவான பகுதிகளே நமக்குக் கரும்புள்ளிகளாகத் தெரிகின்றன.

சூரியனில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுமானால் அது பூமியில் நம்மைப் பல வகைகளிலும் பாதிக்கிறது.

சூரியனிலிருந்து இயல்பாக ஆற்றல் மிக்க துகள்கள் (இதைச் சூரியக்காற்று என்றும் சொல்வதுண்டு) வெளிப்பட்டு வருகின்றன. கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும் காலகட்டத்தில் சூரியனிலிருந்து இவ்விதத் துகள்கள் அதிக அளவில் அதிக வேகத்தில் வெளிப்படுகின்றன.

இவை பூமியை அதாவது மக்களைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்கும்போது சூரியனில் கடும் சீற்றம் ஏற்படுகிறது. தவிர, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்படுகிறது.

இந்த உருண்டை பூமியின் காந்த மண்டலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை விண்வெளியிலிருந்து பயங்கர மின்னல் தாக்குவதற்கு ஒப்பானது என்றும் கூறலாம்.

இதன் விளைவாக, நீண்ட தூரம் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றி மின்சார டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். இதனால் பெரிய பிராந்தியத்தில் மின்சப்ளை பாதிக்கப்படும்.

1989-ம் ஆண்டில் கனடாவின் கிழக்குப் பகுதியில் இவ்விதம் மின்சப்ளை பாதிக்கப்பட்டு 6 கோடி மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். வடகிழக்கு அமெரிக்காவிலும் மற்றும் சுவீடன் நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான ஆற்றல் முகில், தொலைபேசித் தொடர்பு உள்பட தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும். தரைக்கு மேலே அமைந்த எண்ணெய்க் குழாய்களையும் இது பாதிக்கும்.

பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வேகம் பாதிக்கப்பட்டு அதனால் அவற்றின் ஆயுள் குறையும்.

பூமியைச் சுற்றுகிற விண்வெளி நிலையத்திலிருந்து யாரேனும் வெளியே வந்து அந்தரத்தில் பணியாற்ற நேர்ந்தால் கடும் கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இவ்விதம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸ 2011-ம் ஆண்டு சூரியனின் ஒளித்தட்டில் 150 முதல் 200 கரும்புள்ளிகள் தென்படலாம் என்று கூறியது ஜனவரி 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி தொடர்ந்து 820 நாள்களுக்கு சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.

நியாயமாகப் பார்த்தால் 2012-ம் ஆண்டில் சூரியனின் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்ட வேண்டும். ஆனால், அப்படி நிகழும் என்று தோன்றவில்லை. சூரியனின் வழக்கமான போக்கு மாறிவிட்டது போலத் தோன்றுகிறது.

உள்ளபடி இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆகவே, சூரியனில் சீற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2010 ஆகஸ்டிலும் 2011 பிப்ரவரியிலும் சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்பட்டு பூமியை நோக்கி வந்தன என்றாலும் பொதுவில் சூரியன் அமைதியாக இருக்கிறது.

சூரியனின் கரும்புள்ளிகள் விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காணப்பட்டு வந்த 11 ஆண்டு காலச் சுழற்சி மறைந்து முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் நிகழ்ந்ததுபோல தொடர்ந்து நீண்ட காலம் சூரியன் அமைதியாக இருந்து வருமோ என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர்.

சூரியனில் அப்படியான அமைதி நிலை ஏற்பட்டால் பூமியில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பு ஒன்று உண்டு. அதாவது, பூமியில் குறிப்பாக வட பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை குறையும். முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்த நாடுகளில் பல பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டன.

அதுபோல இப்போது பொதுவில் பூமியில் வெப்ப நிலை குறையலாம். ஆனாலும் இது காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து வருகிற பிரச்னையை சரிக்கட்டி விடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆகவே, இவை பற்றி முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக சூரியனை ஆராயும் பொருட்டு சில ஆளில்லா செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று "ஏசிஇ' என்பதாகும். இது தொடர்ந்து சூரியனை ஆராய்ந்து வருகிறது. சூரியனில் நிகழும் முக்கிய மாற்றங்களை இது ஆராய்ந்து தகவல் அனுப்புகிறது. ஆகவே, நாம் உஷாராகி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசம் கிடைக்கிறது.

சூரியனில் நிகழும் மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றி நீண்ட நாள்களாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல கொள்கைகளும் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் நம்மால் இன்னும் சூரியனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆகவேதான் சூரியனில் கரும்புள்ளி இல்லாத காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரியனின் கரும்புள்ளிகளுக்கும் பூமியின் பருவ நிலைமைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது.

விஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்.

2 comments:

Unknown said...

அருமையான பதிவு... ஆனால் ஒரே பதிவு தொடந்து இரண்டு முறை வருகிறது.

துளசி கோபால் said...

அருமை. பகிர்வுக்கு நன்றி.