Sunday, June 26, 2011

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டிய சிங்களப் படை - தடுத்த இந்திய கடற்படை.



கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க வந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்து அவர்களைப் பிடிக்கவும் முயன்றனர். ஆனால் அப்போது இந்தியக் கடற்படை ரோந்துக் கப்பல் அங்கு வரவே பின்வாங்கிச் சென்று விட்டனர் சிங்களப் படையினர்.

தமிழக மீனவர்களை நிம்மதியாக மீன் பிடிக்க விடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்தபடி உள்ளது இலங்கைக் கடற்படை. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய முறையில் செய்யாமல் மெத்தனமாக இருக்கிறது மத்திய அரசு.

சமீபத்தில் 23 மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்று விட்டது. இதனால் தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பு எழுந்தது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சிகள் காரணமாக 23 பேரையும் விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று 600 படகுகளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினர் விரைந்து வந்தனர். இதைப் பார்த்து தமிழக மீனவர்கள் பீதியடைந்தனர். அங்கு வந்த இலங்கைப் படையினர், தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். அவர்களைப் பிடிக்கவும் முயற்சித்தனர். அந்த சமயம் பார்த்து இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடற்படைக் கப்பல் ரோந்து வரவே, சிங்களப் படையினர் பின்வாங்கி திரும்பிச் சென்றனர்.

சிங்களப் படை சென்றதும், இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடித்தனர். பின்னர் அவர்கள் இன்று அதிகாலையில் கரைக்குத் திரும்பினர். இந்தியக் கடற்படைக் கப்பல் தங்களுக்கு தக்க சமயத்தி்ல பேருதவியாக வந்ததாக மீனவர்கள் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நான்கு நாட்களாக கடலுக்குள் போகாமல் இருந்து சென்றதால் பெருமளவில் மீன்கள் கிடைத்ததாகவும் மீனவர்கள் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.

No comments: