Monday, June 20, 2011

சமச்சீர் கல்வியை அரசியல் ரீதியாக அணுகுவது வருந்தத்தக்கது : தமிழருவி மணியன்.



சமச்சீர் கல்வியை அரசியல் ரீதியாக அணுகுவது வருந்தத்தக்கது என்று, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.

காந்திய மக்கள் இயக்கம், கோவை மாவட்ட கிளை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 19.06.2011 அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதன் நிறுவனர் தமிழருவி மணியன்,

சமச்சீர் கல்வியைப் பொருத்த வரையில் சொந்தப் பகையை வைத்து, மக்கள் நலனைப் புறக்கணிப்பது தவறான அரசியலாகும். கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களில் உருப்படியான ஒன்று, சமச்சீர் கல்வித் திட்டம். சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை, சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்துகிற நிலையிலேயே தவிர்க்க முடியும். இதுவே அறிவுபூர்வமான அணுகுமுறையாகும். கல்வியாளர் குழு மூலமாகவே இதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.

திமுக ஆட்சி கொண்டுவந்த திட்டம் என்று இதை தவிர்ப்பது சரியானதல்ல. சமச்சீர் கல்வியைப் பொருத்த வரை, கௌரவப் பிரச்னையாகக் கருதாமல் 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் வரும் ஆண்டில் தவிர்க்கலாம். தற்போதைய அரசின் முடிவு மாணவர் நலனுக்கு எதிரான செயலாகும். இந்த அரசுக்கு மாணவர் நலனில் அக்கறை உள்ளதா?

சமச்சீர் பாடத்திட்டத்தை ஆராய அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள தனியார் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், சமச்சீர் கல்விக்கு எதிரானவர்கள். இவர்கள் எப்படி சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்துவார்கள்? சமச்சீர் கல்வியை அரசியல் ரீதியாக அணுகுவது வருந்தத்தக்கது.

முத்துக்குமரன் குழுவின் நூற்றுக்கு மேற்பட்ட பரிந்துரைகளில் ஒருசில மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள பரிந்துரைகளை, முறையாக பரிசீலித்து செயல்படுத்தி இருக்க வேண்டும். கடந்த ஒருமாத காலமாக மிகச்சரியாக சிறந்த நிர்வாகம் நடைபெற்றுவரும் நிலையில், அரசு இடறி விழுந்த ஒரேஇடம் சமச்சீர் கல்விதான். இந்த ஆண்டிலேயே சமச்சீர் கல்வி திட்டத்தைத் தொடர வேண்டும். என்றார்.

No comments: