Monday, June 20, 2011

திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் : தற்கொலை செய்துகொண்ட மாணவன் முதல்வருக்கு வேண்டுகோள்.

சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 கணிதப் பிரிவில் படிக்கும் மாணவன் சீனிவாசன். சீனிவாசன் வீடு பனமரத்துப்பட்டியில் இருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள நிலவாரப்பட்டியில் உள்ளது.

கடந்த 15ம் தேதி பள்ளிக்கூடம் திறந்த பின்னர், மூன்று நாட்களாக பள்ளிக்கு சென்று வந்தான். நேற்று முன்தினம் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளான்.

சீனிவாசனின் பெறோர்கள் சேகர், விமலா மற்றும் அண்ணன் சத்தியமூர்த்தி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர், இந்நிலையில் சனிக்கிழமை மதியம் சீனிவாசனின் தயார் விமலா சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீடு திறந்து கிடந்துள்ளது, சந்தேகமடைந்த விமலா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டு உத்திரத்தில், சேலையால் தூக்குப்போட்டு சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டிருந்தான்.

மகனின் தற்கொலையால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், மற்றும் உறவினர்கள், கிராமத்தில் உள்ள வழக்கப்படி சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனை ஆய்வுக்கு உட்ட்படுத்த பயந்துகொண்டு காவல்துறைக்கு புகார் கொடுக்காமலேயே சீனிவாசனின் உடலை எரித்துவிட்டனர்.

சீனிவாசனின் தற்கொலைக்கு காரணம் தெரியாத உறவினர்கள் சிலர், நேற்று காலையில் சீனிவாசனுடன் படிக்கும் சக மாணவர்களிடம் பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துள்ளர்கள்.

சீனிவாசனின் வகுப்பு மாணவர்கள், எங்களது கணித ஆசிரியர் செந்தில் சார் சரியாக புரியும்படி கணக்கு பாடம் நடத்துவதில்லை, அதனால் தலைமையாசிரியரிடம் புகார் கொடுப்பதற்கு எல்லா மாணவர்களிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு இருந்தான் என்று சொல்லியுள்ளார்கள்.

சீனிவாசனின் தற்கொலைக்கு பள்ளியில் நடந்த சம்பவம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு உறவினர்கள் நேற்று சீனிவாசனின் பள்ளி புத்தகப்பையை திறந்து பார்த்துள்ளார்கள்.

அதில், சீனிவாசன் கைப்பட எழுதிய ஏழு பக்க கடிதம் இருந்துள்ளது. அதில், எனது சாவுக்கு என் பெற்றோர்களோ, உறவினர்களோ காரணமல்ல... என் முடிவை எழுதியவர்கள், நான் படிக்கும், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் செந்தில், தமிழ் அய்யா ராமலிங்கம், இயற்பியல் ஆசிரியர், மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது.

நான் 11வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எங்களுக்கு கணக்கு பாடம் நடத்தும் செந்தில் ஆசிரியர் பாடம் நடத்துவது புரிவதில்லை... எங்களுக்கு, புரியும்படி பாடத்தை மெதுவாக நடத்துங்கள் என்று பலமுறை சொல்லியுள்ளோம்.

கடந்த 16ம் தேதி எங்களுக்கு செந்தில் ஆசிரியர் கணக்கு பாடம் நடத்தினார். அவர் வேகமாக நடத்தியதால், எனக்கு புரியவில்லை, சார் மெதுவாக நடத்துங்கள் என்று கேட்டேன், என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, போர்டில் உள்ளதை மட்டும் எழுது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

செந்தில் ஆசிரியர், கணக்கு படத்தை புரியும்படி, மெதுவாக நடத்தச்சொல்லி, தலைமையாசிரியரிடம் புகார் கொடுக்க என் வகுப்பு மாணவர்களிடம் கையெழுத்து வாங்கினேன், இந்த புகாரை தலைமையாசிரியரிடம் கொடுக்கலாமா...? என்று கெமிஸ்ட்டரி ஆசிரியரிடம் கேட்டேன்.

அவர் எல்லா ஆசிரியகளிடமும் நான் சொன்னதை சொல்லிவிட்டார்.... அன்று, மாலை பள்ளி முடிந்து நானும், என் நண்பர் ஜீவாவும் வீட்டுக்கு வந்து கொடிருந்த போது, வேதியல் ஆசிரியர், என்னை கூப்பிட்டு... படிக்க வந்தா படிக்கற வேலைய மட்டும் பார், தேவையில்லாத வேலையெல்லாம் பாக்காதே, என கோபமாக திட்டினார். நீ எல்லா பசங்க முன்னாலயும் கணக்கு பாடம் புரியலையுன்னு கேட்டியாமே... என்னுடைய வகுப்புல அப்படி கேட்டுப்பார் என்ன நடக்குதுன்னு பார்.... என மிரட்டினார்.

பாடம் நடத்தும் போது சந்தேகம் கேட்க கூடாதா சார்..., எங்க கிளாசுல செந்தில் சார் நடத்துற கணக்கு பாடம் யாருக்கும் புரிய மாட்டிங்குது சார்.... என்று கூறினேன்.

மறுநாள் 17 தேதி கம்ப்யூட்டார் ஆசிரியர், என்னை கூப்பிட்டு என்ன ரிப்போர்ட் எழுதி கையெழுத்து எல்லாம் வாங்கி இருக்குரியாமே... ஏன் வகுப்பு ஆசிரியரான என்கிட்ட சொல்லலை... என்று கேட்டார். அப்போது இயற்பியல் ஆசிரியர், நீ என்ன பெரிய இவனா... மூடிக்கிட்டு டெஸ்ட் எழுதுடா என்று மிரட்டினார்.

அப்போது பின்னால் வந்த தமிழ் அய்யா ராமலிங்கம், நீ என்னடா...பெரிய ரௌடியா, நீ படிக்கறது பள்ளிக்கூடம், இது காலேஜ் கிடையாது, எங்க மேல நீ பெட்டிசன் எல்லாம் போடமுடியாது, உன்ன பள்ளிக்கூடத்துல சேத்துக்கிட்டதே பெரிய விஷயம், இந்த லட்சணத்துல நீ ரௌடித்தனம் பண்ணறே... என்ற் ஆசிரியர்கள் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன், செய்முறைத் தேர்வில் மதிப்பெண் போடமாட்டோம் என்று கூறி மிரட்டினர். மாற்றுச் சான்றிதழில், ""மோசம்'' என்று எழுதி என்னை பள்ளியில் இருந்தே வெளியேற்றி விடுவதாகவும் மிரட்டினார்கள்.

உனக்கு புரிஞ்சா படி..., இல்லன்னா, டி.சி வாங்கிக்கிட்டு போய் உனக்கு பிடிச்ச வாத்தியார் இருக்கற பள்ளியில் சேர்ந்து படி என்று கூறினார்கள்.

மாலை 3.30 மணிக்கு தலைமையாசிரியரிடம் பர்மிசன் வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்து, இந்த கடிதத்தை எழுத்துகிறேன்.

எனக்காக அம்மா, அப்பா இருவரும் அழக்கூடாது, அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும்.

எனக்கு அடுத்த பிறவியிருந்தால் அதில் நான் மனிதனாக பிறக்கக் கூடாது, அரசு பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் நன்றாக கவனித்தால் தான் என்னைப் போன்ற மாணவர்களை மேம்படுத்த முடியும்.

என் சாவு, அரசு பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும், இல்லையானால் என்னை மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்கப்போகிரார்களோ தெரியவில்லை...

திறைமையான ஆசிரியர்கள் பலர் வேலையில்லாமல் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், மேல்நிலை வகுப்புகளுக்கு, நல்ல திறமையான ஆசிரியர்களை போடவேண்டும் என முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்தை சி.ஈ.ஓ விடம் ஒப்படைக்க வேண்டும். என் மரணத்திற்கு பின்னர் சட்டம் அதன் கடமையை செய்யவேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளான்.

சீனிவாசன் சாவுக்கு காரணம் ஆசிரியர்கள் தான் எனபதை அறிந்த உறவினர்கள், நேற்று சேலம் எஸ்.பி அலுவலகத்துக்கு புகார் சொன்னதன் பின்னர், மல்லூர் காவல் ஆய்வாளர் சீனிவாசனின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார்.

சீனிவாசனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சீனிவாசன் தற்கொலை பற்றி காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க அறிவுறுத்தினார்.

அதன் பின்னர், மல்லூர் காவல் நிலையத்தில் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டது சம்பந்தமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இன்று துறை ரீதியான விசாரணையை துவக்கியுள்ளர்கள்.

இன்று 20-6-2011 திங்களன்று கணக்கு ஆசிரியர் செந்திலை போலீசார் கைது செய்துள்ளனர். எஞ்சியுள்ள நான்கு ஆசிரியர்களும் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.



No comments: