Monday, June 20, 2011

தயாநிதி - மடியில் கணத்தோடு பிரதமர்.



மத்திய அரசில் தற்போதுள்ள அமைச்சரவை, பெரியளவில் மாற்றங்களைச் சந்திக்கும் என, பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனாலும், எந்தவித மாற்றங்களையும் செய்யாமல், இருப்பதை வைத்தே சமாளித்துக் கொண்டிருந்தார். அதற்குக் காரணங்களும் இருந்தன.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. அந்த நேரத்தில் அமைச்சரவை யில் கை வைப்பது, மாநில அளவில் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக இருக்காது. அதைவிட, லோக்பால் மசோதாவிவகாரம் வேறு மிரட்டிக் கொண்டிருந்தது. இந்தக் காரணங்களால், அமைச்சரவை மாற்றங்களை ஒத்தி வைப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை பிரதமருக்கு.

இப்போது, மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. ஏராளமான ஓட்டைகளுடன் கூடிய அமைச்சரவையை வைத்துக்கொண்டு எந்த அரசும் புதிய கூட்டத்தொடர் ஒன்றுக்குள் நுழைவதை பிரதமர் நிச்சயம் விரும்ப மாட்டார்.

இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க முன்னதாக, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய, பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

நாடாளுமன்ற வட்டாரங்களில் இதுபற்றிப் பரவலாக அடிபடும் பேச்சு என்னவென்றால், ஜூலை 2ம் தேதி, மத்திய அமைச்சரவையில் பிரதமர் மாற்றங்களைச் செய்வார் என்பதே.

மத்திய அமைச்சரவை மாற்றம், தமிழக அளவில் என்ன மாற்றங்களைக் கொண்டுவரும்?

மத்திய அமைச்சரவையைப் பொறுத்தவரை, தமிழகத்திலிருந்து சென்றுள்ள 3 அமைச்சர்கள் பற்றிய புகார்கள்தான் பரவலாக அடிபட்டுக்கொண்டிருந்தன.

ஒருவர் ஆ.ராசா. ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை இஷ்டத்துக்கு ஒதுக்கீடு செய்தார் என்பதே புகார். அதே ஊழல் வழக்கில் அவர் சிக்கி, தற்போது திகார் சிறையில் இருக்கிறார். சிறையில், தென்னிந்திய உணவு ஒதுக்கீடு செய்தால் போதும் என்ற அளவோடு நிற்கின்றன, அவரது நடவடிக்கைகள்.

அடுத்தவர், மு.க. அழகிரி. சும்மா பெயருக்காக அமைச்சராக இருப்பவர். இவரது அமைச்சில் பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அமைச்சரையே காணமுடிவதில்லை என்பது குற்றச்சாட்டு.

மூன்றாவது நபர், தயாநிதி மாறன். இவர் செய்ததாகக் கூறப்படும் ‘வியாபாரம்-கம்-ஊழல்’ லீலைகள் பற்றிய குற்றச்சாட்டுகள்தான் இப்போது டில்லியில் பிரசித்தம். மடியில் கணத்தோடு, இவரை அமைச்சரவையில் வைத்திருக்கிறார் பிரதமர்.

மத்திய அமைச்சரவையில் தமிழக அளவில் உள்ள சிக்கல்கள். ஆ.ராசா விவகாரத்தை விட்டுவிட்டால், மற்றைய இருவரின் விவகாரங்களுக்கும் விடை தேடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பிரதமர்.

இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான புகாரில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதியின் பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராசா, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தபோது, அவர் கவனித்துவந்த தொலைத்தொடர்புத் துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப் படவில்லை. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல், ராசா வைத்திருந்த அமைச்சையும் கூடுதலாக கவனித்து வருகிறார். ஒரே அமைச்சருக்கு, இரு பெரிய துறைகள்.

அதேபோல், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழல் புகார் காரணமாக, மகாராஷ்டிரா முதல்வர் பதவி விலகியதால், மத்திய அமைச்சராக இருந்த பிரித்விராஜ் சவான், அங்கே அனுப்பப்பட்டு விட்டார். ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வராகிவிட்டார். இதனால், அவரது அமைச்சிலும் காலியிடம் உள்ளது.

மொத்தத்தில், பிரதமர் விரும்பியோ, விரும்பாமலோ, அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதுவும், பார்லிமென்டின் புதிய கூட்டத் தொடருக்கு முன்பாக!

இந்த நிலையிலேயே, அடுத்த மாதம் 2ம் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப் படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரவை செயலக அதிகாரிகள், இதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டதாலேயே இந்தக் கதை வெளியாகியிருக்கிறது.

அமைச்சரவை செயலக அதிகாரிகள், ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இதுபற்றி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இவர்கள் கூறும் தேதிக்கு, இன்னமும் இரண்டு வாரங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் ஏதாவது அரசியல் மாற்றங்கள் வரலாம். தயாநிதி மாறன் சி.பி.ஐ.யால் விசாரிக்கப் படலாம்.

அடுத்த மாதம் 2ம் தேதி, அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் செய்தால்,

அமைச்சரவையில் காலியிடங்களுக்கு, புதிதாக ஆட்களை சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

ஏற்கனவே அமைச்சரவையில் இருக்கும் ஆளைக் கழட்டிவிட வேண்டுமென்றால், அது நம்ம தயாநிதியாகத்தான் இருக்கும்!

No comments: