Saturday, June 18, 2011

சமச்சீர்க் கல்வி நிபுணர் குழு அதிர்ச்சி அளிக்கிறது ராமதாஸ்.



உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழு அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சமச்சீர்க் கல்வி பற்றி முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டிஏவி பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சேர்க்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இவரும் இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர்க் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். அவர்கள் தம் கருத்துகளின் அடிப்படையில் சமச்சீர்க் கல்வி பற்றி 9 பேர் கொண்ட குழு சரியான முடிவுக்கு வர இயலும் என்ற நோக்குடன்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.

ஆனால், கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது.

அதுமட்டுமின்றி சமச்சீர்க் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.

சமச்சீர்க் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முறையை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டிவரும் பிடிவாதத்தால் மாணவ, மாணவியர் இதுவரை எவ்வளவோ பாதிப்புகளை எதிர்கொண்டு விட்டனர். எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு அதன் ஒருசார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலையை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தபட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறுன்.

இவ்வாறு ராமதாஸ் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments: