Sunday, June 19, 2011

ஜெயலலிதா டில்லிக்கு அனுப்பிய மெசேஜ் !



தி.மு.க.வை மத்திய அரசிலுமிருந்து எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் அடுத்த மூவ். இதற்கான முன்னேற்பாடுகளில் ஒரு டீம் இறக்கிவிடப்பட்டுள்ளது.

“மத்திய அரசுக்கு, தமிழகத்திலிருந்து தேவையான சப்போர்ட்டை நாங்கள் செய்யத் தயாராக உள்ளோம். இனி, தி.மு.க.வின் உறவு உங்களுக்கு எதற்கு?” என்பதுதான், இந்த டீமுக்கு சென்னையிலிருந்து சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ள கோஷம். டில்லியில் காங்கிரஸ் புள்ளிகளைச் சுறுசுறுப்பாகச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது இந்த டீம்.

அ.தி.மு.க. தமிழகத்தில் என்னதான் சட்டசபைத் தேர்தலில் வாரிக் குவித்தாலும், டில்லியில் மத்திய அரசில் செல்வாக்கு இல்லாவிட்டால் அரசியல் செய்ய முடியாது என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். மத்திய அரசில் செல்வாக்கு என்பதை, ஆட்சியில் பங்கு என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

அதாவது, அ.தி.மு.க. வுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும்.

இதற்கு, மத்திய அரசிலிருந்து தி.மு.க.வை கழட்டிவிட வேண்டும். தி.மு.க.வை கூட்டாளியாக வைத்திருப்பதால், தமக்கு எதிர்காலத்தில் பெரிதாகப் பலனில்லை என்பதை, மத்திய அரசை உணர வைக்கவேண்டும்.

இதை, சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அ.தி.மு.க. டீம் எப்படிச் செய்யப் போகின்றது?

நாடாளுமன்றத்தில் தற்போது அ.தி.மு.க.வை விட, தி.மு.க.வே அதிக எம்.பி.க்களை வைத்திருக்கும் கட்சி. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரும்வரை இந்த எண்ணிக்கையை ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால், ராஜ்யசபாவைப் பொறுத்தவரை, கதை அப்படியல்ல.

ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.யை நியமிக்க மாநில அளவில் 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. 23 எம்.எல்.ஏ.,க்களை மாத்திரமே பெற்றுள்ளது. இதை வைத்துக்கொண்டு, ஒரு ராஜ்யசபா எம்.பி.யைக்கூட டில்லிக்கு அனுப்ப முடியாது.

தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ம.க., மூன்று எம்.எல்.ஏ.,களை வைத்திருக்கிறது. தனித்து இந்த மூன்று பேரையும் வைத்துக்கொண்டு, ராஜ்யசபாவில் செடிக்குத் தண்ணீர் வார்க்க ஒரு தோட்டக்காரரைக்கூட அனுப்ப முடியாது. தமிழக காங்கிரஸின் கதியும் அதுவே.

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில், தி.மு.க. தனது கூட்டணிக் கட்சியினரான காங்கிரஸ், பா.ம.க., எம்.எல்.ஏ.களை சேர்த்தால் கூட ஒரு ராஜ்யசபா எம்.பி.யை தேர்வு செய்ய முடியாது.

ராஜ்யசபாவுக்கு தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா, காங்கிரஸ் கட்சியின் ஞானதேசிகன் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த இளவரசன், மைத்ரேயன் ஆகியோரின் பதவிக்காலம் 2013ல் முடிகிறது.

2014ல், தி.மு.க.வைச் சேர்ந்த அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரசை சேர்ந்தவாசன், ஜெயந்திநடராஜன், மார்க்சிஸ்ட்கட்சியைச் சேர்ந்தடி.கே.ரங்கராஜன் ஆகியோருடன், அ.தி.மு.க.வை சேர்ந்த, பால் மனோஜ் பாண்டியனின் பதவிக் காலமும் முடிகிறது.

இதற்கான தேர்தல்களில், அ.தி.மு.க. முன்னிறுத்தும் வேட்பாளர்களே வெற்றி பெற முடியும். தி.மு.க., எவரையும் தனித்து வெற்றி பெறச் செய்ய முடியாது.

தமிழகச் சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில், அந்தக் கட்சி தற்போதைக்கு டில்லி ராஜ்யசபாவை மறந்துவிட வேண்டியதுதான். பாவம், டாக்டர் ராமதாஸ். அவரும் தனது இளவல் அன்புமணியை டில்லிக்கு அனுப்புவது பற்றி கனவுகூட காண முடியாது! (மகனுக்காக அ.தி.மு.க.வுக்கு தூதுவிட மாட்டாரா வைத்தியர் ஐயா?)

ராஜ்யசபா நிலைமை இப்படியிருக்க, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுகூட, தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி கிடைப்பது குதிரைக் கொம்புதான். மாநிலத்தில் ஆட்சியும் கையில் இல்லாமல், ஊழலில் பெயரும் கெட்டுப் போயிருக்கும் அந்தக் கட்சி, இனி தமிழகத்தில் மீண்டும் தலையெடுப்பது என்றால், ஏதாவது அதிசயம்தான் நடக்க வேண்டும்.

இதைத்தான் எடுத்துச் சொல்கிறது, ஜெயலலிதாவால் டில்லிக்கு அனுப்பப்பட்டுள்ள டீம்.

எவ்வளவு பேரைச் சந்திக்க முடியுமோ, அவ்வளவு காங்கிரஸ் பிரமுகர்களைச் சந்திக்குமாறு கூறப்பட்டே, இந்த டீம் டில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களும் தங்களால் முடிந்தவரை காங்கிரஸ் முக்கியஸ்தர்களைச் சந்திக்கத் தொடங்கி உள்ளனர்.

காங்கிரஸ் பிரமுகர்களிடம் நிலைமையை விளக்கிவிட்டு, கடைசியாக இவர்கள் விடும் அஸ்திரம் என்ன தெரியுமா? இதோ, இதுதான்:

“அம்மா இப்போது காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிவரும் மனநிலையில் இருக்கிறார். அதை இப்போதே பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து தி.மு.க.வுடன் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் எங்களிடம் வராதீர்கள். ஏனென்றால், அப்போது அம்மாவின் மனநிலை எப்படி இருக்குமென்று சொல்ல முடியாது!”

போட்டிருக்காங்க சார், செமையான ஒரு தூண்டில்!

No comments: