கனிமொழி எம்.பி.யின் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணை பொறுப்பில் இருந்து இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் திடீரென்று விலகினர்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய ஜாமீன் மனுக்கள் டெல்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றத்திலும் பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளனர்.
நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், ஸ்வதந்தர்குமார் ஆகியோரைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் முன்னிலையில் கடந்த 13-ந்தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், கலைஞர் தொலைக்காட்சிக்கு திருப்பி விடப்பட்ட ரூ.200 கோடி என்ன ஆனது? என்று சி.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர்கள் இருவருடைய ஜாமீன் மனுக்கள் மீதான பதிலை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படியும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றுக்கு 13 லைசென்சுகள் வழங்கப்பட்டதில் அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்தும், தனி கோர்ட்டில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும், அவர்கள் உத்தரவிட்டு இருந்தனர்.
பின்னர் வழக்கு விசாரணை 20-ந் தேதிக்கு, திங்கட்கிழமை தள்ளி வைக்கப்பட்டது.
2 நீதிபதிகள் விலகல்
திங்கட்கிழமை அன்று நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன்னிலையில் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற இருந்தது. இந்த நிலையில், இரு நீதிபதிகளும் கனிமொழி ஜாமீன் மனு வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக முடிவு எடுத்து, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியாவுக்கு தகவல் அனுப்பினார்கள்.
அதைத் தொடர்ந்து கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்காக நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சௌகான் ஆகியோரைக் கொண்ட மற்றொரு பெஞ்ச்சை தலைமை நீதிபதி நியமித்தார். இந்த பெஞ்ச் முன்பாக, திங்கட்கிழமை அன்று வழக்கு விசாரணை நடைபெறும்.
நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மேற்பார்வையில்தான் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment