எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை மிரட்டுவதற்காகவே சிபிஐ அமைப்பை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு விரும்பவில்லை என்று தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அரவிந்த் கேஜரிவால் புகார் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லோக்பால் வரைவுக் குழுவின் இறுதிக் கூட்டத்துக்கு முன், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் மேலும் கூறியது:
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் சிபிஐ விசாரணை அமைப்பைக் கொண்டு வர மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டவே அந்த விசாரணை அமைப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எப்போதெல்லாம் மத்திய அரசுக்குப் பிரச்னை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மாயாவதி, முலாயம் சிங் யாதவ் போன்ற தலைவர்களை மிரட்டுவதற்கு மத்திய அரசு சிபிஐ விசாரணை அமைப்பை அனுப்பிவைக்கும். சிபிஐ நேர்மையாக செயல்படுவதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவதற்காக சிபிஐ ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு எதிரான விசாரணையை முடக்கவும் சிபிஐ-யை மத்திய அரசு வளைக்கிறது.
பாதுகாப்பு, உளவு தொடர்பான பணிகளில் சிபிஐ ஈடுபடுவதில்லை. எனவே உளவுப் பிரிவு, "ரா' அமைப்பு போன்றவற்றுடன் சிபிஐ-யை சேர்க்கக்கூடாது. தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் இருந்து பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளை நீக்கிவிடலாம் என்று அந்த சட்டமே கூறுகிறது. எனவே சிபிஐ விசாரணை அமைப்பை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கண்டிப்பாகக் கொண்டு வரவேண்டும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment