Wednesday, June 22, 2011

லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் - திமுக அதிரடி.


லோக்பால் சட்டத்தின் கீழ் பிரதமர் பதவியையும் கொண்டு வர வேண்டும் என்று திமுக அதிரடியாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடி கொடுக்கவும் அது தயாராகி விட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதி குடும்பத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் கருணாநிதி குடும்பத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது. அது லோக்பால் விவகாரம்.

லோக்பால் விசாரணை வரையறைக்குள் பிரதமர் பதவியையும் சேர்க்க வேண்டும் என்று ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருவோர், அன்னா ஹஸாரே போன்ற சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். ஆனால் இதை ஏற்க அரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுக, பிரதமர் பதவியையும் லோக்பால் வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என அதிரடியாக தெரிவித்துள்ளது.

நேற்று பிரதமர் தலைமையில் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தின்போதுதான் இந்தக் குண்டைப் போட்டுள்ளது திமுக. இதுகுறித்த தகவலை தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா கூறுகையில், பிரதமர் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் லோக்பால் மசோதா குறித்து விவரித்தார். அப்போது திமுக சார்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலு கூறுகையில், பிரதமரை லோக்பால் வரையறைக்குள் சேர்க்கக் கூடாது என்ற அரசின் நிலையை திமுக எதிர்க்கிறது. பிரதமர் பதவியையும் லோக்பாலுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், லோக்பால் மசோதா குறித்த கருத்துக்களை நாடாளுமன்றத்தில் அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் என்றார் பரூக் அப்துல்லா.

திமுகவின் இந்த அதிரடிப் பேச்சால் பிரதமர் மற்றும் சோனியா காந்திக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி நேற்று டெல்லியில் தான் இருந்தார். இருப்பினும் இக்கூட்டத்திற்கு அவர் வரவில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுகவை கைவிட்ட காங்கிரஸுக்கும், மத்திய அரசுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக லோக்பால் விவகாரத்தைப் பயன்படுத்துவதாக தெரிகிறது.

No comments: