Wednesday, June 22, 2011

ஒரு நாளில் லட்சம் பேர் சாப்பிடலாம் : திருப்பதி கோவிலில் புதிய அன்னதான கூடம் ; 7-ந்தேதி ஜனாதிபதி திறந்து வைக்கிறார்.


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.தற்போது ஒரு நாளைக்கு 70 ஆயிரம் பக்தர்கள் சாப்பிடுகிறார்கள். இதற்கு ஆண்டுக்கு ரூ.40 கோடி செலவிடப்படுகிறது.

இதற்காக தேவஸ்தானம் சார்பில் வங்கியில் பல கோடி ரூபாய் வைப்பு நிதி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.27 கோடி வட்டி வருகிறது. ரூ.13 கோடியை தேவஸ்தானம் செலுத்துகிறது.

கடந்த சில மாதங்களாக அன்னதானத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தற்போதுள்ள அன்னதான கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் தேவஸ்தானம் பிரமாண்டமான புதிய அன்னதான கட்டிடம் கட்டியுள்ளது.

இதில் ஒரே சமயத்தில் 4 ஆயிரம் பேர் வரை சாப்பிடலாம் ஒரு நாளில் ஒரு லட்சம் பேர் சாப்பிட முடியும். ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான கூடம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இக்கட்டிடத்தை 7-ந்தேதி ஜனாதிபதி பிரதீபா பாட்டில் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

திருப்பதி கோவிலில்
அறைகளுக்கு டோக்கன் முறை : புதிய திட்டம் அமல்
.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருப்பதி கோவிலுக்கு வரும் சாதாரண பக்தர்களுக்கு எந்தவித பரிந்துரையும் இல்லாமல் நேரடியாக தங்கும் அறைகள் ஒதுக்கப்படுகிறது.

இந்த நேரடி அறைகள் வழங்கும் அலுவலகம் சி.ஆர்.ஓ. அலுவலகம் முன்பு செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ரூ.50 முதல் ரூ.400 வரை வாடகைக்கு தங்கும் அறைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து பக்தர்களுக்கும் இந்த இடத்திலேயே அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதால் இங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இதையடுத்து திருமலையில் சாமிதரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தங்கும் அறைகள் வழங்க புதிதாக டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக டோக்கன் வழங்குவதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் விஜயா வங்கியின் இடதுபுறம் 21 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இங்கு பக்தர்களுக்கு முதலில் டோக்கன் வழங்கப்படும். அவர்களுக்கு அழைப்பு வரும்போது அடையாள அட்டையை காண்பித்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை மூலம் பக்தர்கள் சிரமங்களை தவிர்க்க முடியும்.

No comments: