Tuesday, March 15, 2011

போபால் நஞ்சாகும் நீதி

அ.முத்துக்கிருஷ்ணன்


அன்று காலை முதலே உலக ஊடகங்கள் எல்லாம் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கின் பத்திரிகையாளர் சந்திப்பு பற்றிய செய்திக்காய்காத்துக் கிடந்தன. அந்த சந்திப்பு எங்கு நிகழவிருக்கிறது என்பது கடைசிநேரம் வரை குழப்பமாக இருந்தது. நாடாளுமன்றத்திலா, பிரதமர் அலுவலகமா அல்லதுபிரதமர் இல்லத்திலா என விதவிதமாய் தகவல்கள் வந்த வண்ணமிருந்தன. மாலை7 மணிக்கு அதிகாரபூர்வ தகவல்கள் வந்தது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் , நேரடிஒளிபரப்புக் கருவிகள் என பெரும்பட்டாளமே ரேஸ்கோர்ஸ் ரோடு நோக்கிவிரைந்தது. செய்தியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் புடை சூழ பிரதமர் காமிராக்கள்முன்பு தோன்றினார். அவரது முகம் வழக்கத்தை விடவும் இறுக்கமாகக் காணப்பட்டது. போபால் விஷவாயு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு அன்றுகாலைதான் வெளியாகியிருந்தது. யூனியன் கார்பைடு ரசாயன ஆலையிலிருந்து வெளியேறிய விஷவாயுவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 26 ஆண்டுகள் கழித்து இன்றுதான் நிம்மதியான உறக்கம் பிடிக்கும் என்பதான மனநிலை போபால் எங்கும்நிலவியது. போராளிகள், பொதுமக்கள் அனைவரும் தெருக்களில் இனிப்பு பரிமாறிமகிழ்ந்தனர்.

பிரதமர் தன் முதல் வார்த்தையை உச்சரிக்க கனத்த மௌனம் நிலவியது. மத்தியில் இனி விஷவாயு தொடர்பாக புதிய அமைச்சகம் தொடங்கப்படும் என்பது தான் அவரது முதல் அறிவிப்பு.பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது, மருத்துவ உதவிகள் செய்வது,நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகளை முடக்குவது என பல தளங்களில் அந்தஅமைச்சகம் செயல்படும். தில்லியில் உள்ள கிமிமிவிஷி போல் மிகப்பெரும்மருத்துவமனை 1000 கோடி ரூபாய் செலவில் போபாலில் நிறுவப்படும் எனவும்அதற்கான பணிகள் இந்த வாரமே தொடங்கும் என்றார் அவர். உச்சநீதிமன்ற தீர்ப்புபடி விஷவாயு கசிவில் உயிரிழந்த 25,000 பேரின் குடும்பங்களுக்குத் தலா 5லட்சம் ரூபாயை யூனியன் கார்பைடு நிறுவனம் வழங்க வேண்டும். அதனைஉடனடியாகப் பெற்றுத்தரும் பணியில் பிரதமர் அலுவலகம் நேரடியாக ஈடுபடும்.அத்துடன் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சமும் வழங்கப்படும் என்றார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம் வாழ்நாள் முழுக்கமருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தீர்ப்பு, அதற்கானதொகையை மத்திய அரசு பெற்று இந்தப் புதிய மருத்துவமனை மூலம் அந்த சேவைவழங்கப்படும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய நிரந்தரஅடையாள அட்டை வழங்கப்படும்.

உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி யூனியன் கார்பைடு அதிபர் வாரன்ஆன்டர்சனை 5 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும். ஆன்டர்சனை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான வேலைகளை தூதரக அளவில் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார். அப்படி 5 நாட்களுக்குள் அமெரிக்க அரசு ஆண்டர்சனை ஒப்படைக்க மறுத்தால் அமெரிக்கா மீது இந்தியா போர்தொடுக்கும் என்றார். இந்தியப் படைகளின் தளபதிகளை ராணுவ அமைச்சர்முன்னிலையில் நாளை சந்திக்க விருப்பதாகவும் மன்மோகன் தெரிவித்தார். உலகமே இந்த நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டிருந்த அதே வேளையில் நியூயார்க்நகரத்து வீதிகளில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் இலட்சக்கணக்கில் திரண்டு கோஷங்கள் எழுப்பினர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்த தலைவர்கள் திகைத்தனர். மெல்ல மக்கள் கூட்டம் நியூயார்க் நகரத்தின் பிரிட்ஜ் ஹாம்டன் நோக்கி ஊர்வலமாய் செல்லத் தொடங்கியது. அங்குதான் ஆன்டர்சன் கடந்த 25 ஆண்டுகளாக வசிக்கும் சொகுசுப் பண்ணை வீடு உள்ளது.பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கவாழ் இந்தியர்களை இன்னும் ஒரு வாரம் அகிம்சாவழியில் அறப்போரைத் தொடர உத்தரவிட்டார்.

டில்லியிலிருந்து விமானப்படையின் தனி விமானம் உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் வாஷிங்டன் நோக்கி பறந்தது. விமானத்தில் இந்தியாவின் தலைசிறந்த சட்ட நிபுணர்களின் குழு ஆயிரக்கணக்கான போபால் தொடர்புடைய கோப்புகளுடன் சென்றது. அந்த விமானத்தின் ஒரு ஓரமாக போபால் விஷவாயுவால் முடமாக்கப்பட்டு இரத்தசாட்சியாய் விளங்கும் ஐவரும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆன்டர்சனை இந்தியாவசம் அமெரிக்கா ஒப்படைக்கும் வரை உலகம் முழுக்க வாழும் இந்தியர்கள் அமெரிக்கத் தயாரிப்பு பொருட்களை நிராகரிக்க வேண்டும் என மன்மோகன் உத்தரவிட்டார். அமெரிக்கப் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் வேலை செய்யாது நிறுவன வாசலில் அமர்ந்து அமைதியான வழியில் போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஒரு இரவில் 25,000 பேரைக்கொன்று 5 லட்சம் பேரைமுடமாக்கிய ஒரு நிறுவனத்தை சும்மா விட்டுவிடாது இந்திய அரசு என கர்ஜித்தார் மன்மோகன். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிகாரிகளை இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் கைது செய்து, அவர்களுக்குத் தலா ஒரு கோடிரூபாய் அபராதமும் 8 ஆயுள் தண்டனைகளும் நீதிமன்றத்தால்விதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவர் உலகின் எந்த நாட்டிலும் தொழில் துவங்க உலக அரசு யாவரும் அனுமதி அளிக்கக்கூடாது என வேண்டுகோள் ஒன்றும் பின் இணைப்பாய் வழங்கப்பட்டிருந்தது...

1984 டிசம்பர் 2-3 நள்ளிரவு 12 மணி முதல் 12.45வரையிலான 45 நிமிடங்களில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரமான போபால் மீதுபடர்ந்த விஷவாயு அந்த நகரத்தை மக்கள் வாழ லாயக்கற்றதாக உருமாற்றிவிட்டது.போபால் நகரத்தில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு ரசாயன ஆலையிலிருந்த தொட்டி எண் 610லிருந்து 47டன் விஷவாயு காற்றில் கலந்தது. அந்த நகரத்தில் வசித்த 8 லட்சம் பேரில் ஏறக்குறைய 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். உறக்கத்தில் இருந்தவாறே பலர் மாண்டனர். விபரம் தெரியத் தெரிய மக்கள் லட்சக்கணக்கில் ஊரைவிட்டு வெளியேறினர். இருப்பினும் விஷவாயு 20,000 பேரின் உயிரை விழுங்கியது. போபால் நகரமே இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்டநகரம் போல் காட்சியளித்தது. செத்து மடியும் மனிதக் கூட்டத்தைக் காப்பாற்ற முனைந்த மருத்துவர்களுக்கு அந்த நச்சுப் பொருளின் பெயர் தேவைப்பட்டது. அதனை வழங்கக்கூட யூனியன் கார்பைடு மறுத்துவிட்டது.

யூனியன் கார்பைடு ஆலை இங்கு வந்த கதையை சுருக்கமாகக் காண்போம். 1905-ல் கல்கத்தாவில் யூனியன் கார்பைடு தனது பணியை இந்தியமண்ணில் தொடங்கியது. 1942ல் சென்னை, 1967-ல் ஐதராபாத், 1968-ல் மும்பைமற்றும் போபால் என யூனியன் கார்பைடு பல ரசாயன ஆலைகளை நிறுவியது. 1976முதல் தனது ஆய்வுப் பணிகளை இங்கு தொடங்கியது. 1950 முதல் கடும் சட்டங்கள்அமெரிக்காவில் இயற்றப்பட்டதால் அங்கு திணையியல் சார் விழிப்புணர்வுஏற்பட்டதால் அங்கிருந்து இதுபோன்ற அழுக்கான தொழில் நுட்பத்தை மூன்றாம் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. போரில் பயன்படத்தக்கநச்சுப் பொருட்கள் தொடர்புடைய ஆய்வைச் செய்ய யூனியன் கார்பைடு 1970 ஜனவரி1-ல் மனு செய்தது. தொடர்ந்து 5 ஆண்டுகள் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த ரசாயனங்களின் ஆபத்தான தன்மைகளை அறிந்த இந்திய அரசு அனுமதி அளிக்கமறுத்தது. இந்தச் சூழலில் 25 ஜூன் 1975 அன்று நெருக்கடி நிலை இந்திராகாந்தியால் பிரகடனப் படுத்தப்பட்டது. அது 21 மாதங்கள் நீடித்தது. இந்த நெருக்கடி நிலையில் தான் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு அக்டோபர்31, 1975 அன்று அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் தலையீடு மற்றும் அரசு இயந்திரம் ஸ்தம்பித்த நிலையில் எல்லா விதிகளையும் மீறி இந்த அனுமதிவழங்கப் பட்டது. பூச்சிகள் தொடர்புடைய 5 ஆராய்ச்சிக் கூடங்கள் நிறுவப்பட்டன. பூச்சிக் கொல்லிகளைப் பரிசோதிக்க பெரும் சோதனை வயல்கள் நிறுவப்பட்டன.

யூனியன் கார்பைடு ஆலை அமெரிக்காவில் உள்ள மேற்குவெர்ஜீனியா ஆலையின் மாதிரி போலத்தான் போபாலில் அமைக்கப்பட்டது. மேற்கு வெர்ஜீனிய ரசாயன ஆலையில் சில பாதுகாப்புக் குளறு படிகளால் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்புடைய செய்திகள் 1982களில் வெளிவந்தது. போபால் ரசாயன ஆலையிலும் பாதுகாப்புத் தொடர்புடைய அலட்சியமான போக்குகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஷ்வானி 'எரிமலை மீது போபால்' என்ற கட்டுரையை வெளியிட்டார்.

நரம்பு மண்டலங்கள் முற்றிலும் பாதிப்பு, சுவாசக்கோளாறுகள், தோல் வியாதிகள், புற்றுநோய் என விதவிதமான பரிசுகளை யூனியன்கார்பைடு நிறுவனம் போபால் நகரத்து ஏழைகளுக்கு வழங்கியது. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், மந்தமான வளர்ச்சியுடைய குழந்தைகள், 20 வயது வரை பூப் பெய்தாத பெண்கள், 30வயதில் மாதவிடாய் நின்று போனவர்கள் என ஒரு பெரும் மருத்துவ ஆராய்ச்சிக்கூடத்தின் வகை மாதிரிகளைப் போல காட்சியளிக்கிறது போபால். 26 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனையையே தங்கள் இல்லமாகப் பாவித்து வாழ்ந்து வருகிறார்கள். 1984ல் இந்த விபத்து நடந்தது முதலே யூனியன் கார்பைடு அரசுக்கு எந்த ஒத்துழைப்பையும் நல்கவில்லை. சோடியம் தயோ சல்பேட் போன்ற வேதிப்பொருட்களின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் நடத்திய ஆய்வுகள் என சகலத்தையும் யூனியன் கார்பைடு நிறுவனம் தனது செல்வாக்கை வைத்து தடுத்து நிறுத்தியது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விருந்தினர் இல்லம் அன்றைய காங்கிரஸ் தலைவர்களின் வீட்டைப் போலவே திகழ்ந்தது. மாநாடுகள் முதல் சிறு கூட்டங்கள்வரை அங்குதான் நடத்தப்பட்டது.

விபத்து நடந்த 4 நாட்கள் கழித்து யூனியன் கார்பைடு உரிமையாளர் ஆன்டர்சன் பாதிப்புகளைப் பார்வையிட போபால் வந்தார். அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். இந்திய அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பிறகே ஆன்டர்சன் போபாலுக்குள் நுழைந்தார். இதனை அறியாத அர்ஜுன் சிங் ஆண்டர்சனைக் கைது செய்த சில மணித்துளிகளில் அவருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் யார் பேசியது என்பது இந்த நிமிடம் வரை அறிய முடியாத ஒன்றாகவே உள்ளது. ஆனால் அது ராஜீவ் காந்திதான் என நம்மால் சுலபமாகவே உணர முடிகிறது. கைது செய்த முதலமைச்சரே தனது தனி விமானத்தில் ஆன்டர்சனை வழியனுப்பிவைக்கிறார். ஒரு தூதருக்கு அளிக்கப்படும் அரசு மரியாதை ஆன்டர்சனுக்கு வழங்கப்பட்டதாக உடன் பயணித்த அதிகாரி இப்பொழுது தெரிவிக்கிறார். தில்லியிலிருந்து நியூயார்க், அன்று முதலே தனது சொகுசுப் பண்ணை வீட்டில்சௌகர்யமான வாழ்க்கை. தடங்கலற்ற இயல்பு நிலை ஆன்டர்சன் வாழ்வில் மற்றும் தொடர்கிறது - போபால் மக்களின் கதியோ? அன்றிலிருந்து இந்திய அரசாங்கத்தால்தேடப்பட்டு வரும் கிரிமினல் குற்றவாளியே ஆன்டர்சன். ஆன்டர்சன் தப்பிக்கதனது விமானத்தை வழங்கிய அர்ஜுன்சிங் நடத்தும் அறக்கட்டளைக்கு, பின்னர்யூனியன் கார்பைடு நிறுவனம் பெரும் தொகை வழங்கியதும் நினைவில் கொள்ளவேண்டியதே.

விஷவாயுக் கசிவு நிகழ்ந்த இரு வாரங்களில் போபால்நகரத்தில் மிக விரிவான கள ஆய்வினை டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனம் (TATAInstitute of Social Sciences ) மேற் கொண்டது. 478 மாணவர்கள் 25,259வீடுகளுக்குச் சென்று பாதிப்பின் கோரத்தைப் பதிவு செய்தனர். இது தான்போபால் விஷவாயு குறித்த முழுமையான பதிவு செய்த ஒரே ஆவணம். டாடா சமூகவியல்ஆய்வு நிறுவனத்தை இந்தக் களப்பணியில் ஈடுபடும்படி விஷவாயுவால் பாதிக்கப் பட்டவர்களுக்கான மறுவாழ்வு மீட்பு மையத்தின் ஆணையர்தான் கேட்டுக் கொண்டார். ஆனால் களப் பணியாளர்கள் போபால் வந்தடைந்த பொழுது அரசாங்கம் இதற்கான செலவுகளை ஈடுசெய்ய மறுத்துவிட்டது. உடன் சர் தோரப்ஜிடாடா அறக்கட்டளை நிதியளிக்க முன்வந்தது. அன்றைய காலகட்டத்தில் டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனத்திடம் பெரும் கட்டமைப்பு கொண்ட கணினி வசதிகள் இல்லை. இந்த கள ஆய்வின் புள்ளி விபரங்களை அத்தகைய கணினிகள் மூலமே பகுப்பாய்வு செய்ய இயலும். அப்படியான கட்டமைப்பு மத்தியப் பிரதேச அரசிடம்இருந்தது. முதலமைச்சர் அர்ஜுன்சிங் அந்த விபரங்களை தன் அரசு பகுப்பாய்வு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக முன்வந்தார். ஒரு லாரி லோடு நிறைய கள ஆய்வின் ஆவணங்களை அரசிடம் ஒப்படைத்தது டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனம். விபரங்களைப் பாவித்துவிட்டு அரசு அந்த ஆவணங்களைத் திருப்பி அளிக்கும் என அர்ஜுன் சிங் வாக்குறுதி அளித்தார். அன்றிலிருந்து டாடா நிறுவனம் மத்தியப்பிரதேச மாநில அரசுகளிடம் நடையாய் நடந்து தவித்தது. 1985 ராஜீவ்காந்தி மும்பையிலுள்ள டாடா சமூகவியல் ஆய்வு நிறுவனத்திற்கு வருகை புரிந்த பொழுது இந்த ஆவணங்கள் தொடர்பாக அவரிடமே நேரடியாக முறையிட்டது அந்த நிறுவனம். இன்றுவரை அந்த லாரி லோடு நிறைந்த ஆவணங்களை அந் நிறுவனமும் போபால்சார் போராளிகளும் தேடி வருகின்றனர். அர்ஜுன்சிங் ஆன்டர்சனுக்கே இதைக் கப்பலேற்றி அனுப்பியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுவல்லவோ மக்கள் அரசு!

வழக்குகள், சட்டவிதிமுறைகள் என மக்கள் பரிதவித்து நீதிமன்றங்களுக்கு அலைந்த காட்சி மிகவும் அவலமானது. 3900 கோடி கேட்டு இந்திய அரசு தொடர்ந்த வழக்கிற்கு 450 கோடி மட்டுமே வழங்க இயலும் என்றது யூனியன் கார்பைடு. இது ஏறக்குறைய 10% மட்டுமே. இதனை நீங்கள் இன்றைய நிதிஅமைச்சரின் 10% வுடன் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. 1989ல் ஒருஅமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் 11 ஆக விளங்கியது. இன்று அது 50ரூபாயைத் தொட்டு நிற்கும் சூழலிலும் இழப்பீட்டுத் தொகை முழுமையாக வந்தடையவில்லை, 5,74,736 பேருக்கு அந்தத் தொகையைப் பகிர்ந்து அளித்தால் தலைக்கு வெறும் ரூபாய் 12,414 மட்டுமே கிட்டும். இழப்பீடுகள் குறித்த இத்தகைய தீர்ப்புகளை தொடர்ந்து வழங்கிவந்தது இந்திய நீதிமன்றம்.

1996ல்சட்டப்பிரிவு நீதிபதி அஹமதி அவர்கள் சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றினை வழங்கினார். அதன்படி குற்றச்சாட்டு 304 பி-யிலிருந்து 304 ஏ-வுக்கு மாற்றப் பட்டிருந்தது. (Culpable Homicide to Criminal Negligence) கொலைப்பாதகச் செயலுக்கான தண்டனையிலிருந்து சாதாரண கவனக்குறைவால் ஏற்படும் பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. போபாலில் விஷவாயு ஏற்படுத்திய பாதிப்பைவிட கொடிய விளைவை பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியது இந்தத் தீர்ப்பு. பழுதான வடி வமைப்பு, அலட்சியமான நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரிகள் குறைப்பு என ஒரு மூன்றாம் உலக நாட்டில் கல்லா கட்டும் அருவருப்பான முதலாளித்துவ மனோபாவத்தின் மொத்த வெளிப்பாடுதான் போபால். ஒரு புலியை நீங்கள் குடியிருப்பு பகுதிக்குள் அடைத்து வைத்துள்ளீர்கள். அந்தப் புலி உங்களுக்குச் சொந்தமானது. குடியிருப்புப் பகுதிக்குள் புலிகளைத் தங்கவைக்க அனுமதியில்லை. ஒரு இரவு புலி தப்பித்து அங்கிருந்த பலரைக்கொன்று குவிக்கிறது. நீதிபதி அஹமதியின் கூற்றுப்படி 'அவர் என்னப்பாசெய்வார்.. புலி அதுவா தப்பித்துப் போயிருச்சு.' தீர்ப்பு வழங்கிய அஹமதிபின்னர் போபால் நினைவு மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்புலங்களில் யூனியன் கார்பைடு நிறுவனத்தை டவ் நிறுவனம் விலைக்கு வாங்கியது. 2001 ஆம்ஆண்டு இந்தஒப்பந்தம் கையெழுத்தானது.டவ் நிறுவனத்திடம் உங்களுக்கும் யூனியன் கார்பைடின் பழைய வழக்குகளுக்கும் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு என அப்பொழுதே நிதியமைச்சர் சிதம்பரமும், வர்த்தக அமைச்சர் கமல்நாத்தும் பொறுப்பேற்று அதனைச் செவ்வனே நிறைவேற்றினர். போபால் ஆலையின் நிலத்தில் இன்றளவும் நச்சுக் கழிவு டன் கணக்கில் கிடக்கிறது. அதனைச் சுத்தப்படுத்த டவ் நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென பெரும் கோரிக்கை எழுந்தது. கமல்நாத்தும் சிதம்பரமும் பதறிப்போனார்கள். கொலை செய்து விட்டு நீங்கள் இனி பெயரை மாற்றினால் போதும், கொலைக்கும் உங்களுக்கும் தொடர்பே இல்லை என வாதாட இலவச வழக்கறிஞர் தயார்.... பராக் பராக் பராக்....

இவர்கள் ஒருபுறம் வக்காலத்து வாங்கினால் அதைவிட ஒருபடிமேலே சென்றார் ஒருவர். இந்தியத் தொழில் நிறுவனங்களில் பணம் வசூலித்து ஏன் நாமே... இல்லை நானே சுத்தம் செய்கிறேனே என அமெரிக்க மலத்தை அள்ள பீவாளியுடன் களம் இறங்கினார் ரத்தன் டாடா. 1984ல் கள ஆய்வினை மேற்கொண்ட அதே டாடா குழுமம் உலக மயத்தில் உருமாற்றம், மன மாற்றம் அடைந்து இத்தகைய புதிய அவதாரத்தை 2001-ல் எடுத்தது. காலம் செய்த கோலமா??

காங்கிரசின் இன்றைய செய்தித் தொடர்பாளர் அபிஷேக்சிங்வி காங்கிரஸ் லெட்டர் பேடிலேயே பிரதமருக்கு டவ் நிறுவனத்தை பூர்வ ஜென்மப் பாவங்களிலிருந்து ரட்சித்து மீட்கும்படி மன்றாடினார். டவ்வின் கண்ணீரைத் துடைக்க மாண்டேக்சிங் அலுவாலியா தன் சட்டையைக் கழற்றிக் கொடுத்தார்.

2002ல் அமெரிக்காவில் உள்ள கிரீன் பீஸ் (Green Peace)நிறுவனத்தினர் பெரும் ஊர்வலமாக ஆன்டர்சனின் வீட்டிற்கே சென்று பிடிவாரண்டின் மாதிரியைக் கொடுக்க முயன்றனர். உடன் அரசு தலையிட்டு அங்கு பெரும் தடியடியை நிகழ்த்தியது. அரசு கவனித்த கவனிப்பில் அதன்பிறகு கிரீன்பீஸ் தொடர்புடைய அமெரிக்க நடவடிக்கைகள் தொடர்புடைய தகவல்கள் ஏதுமில்லை.

போபாலில்பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு போராட்டங்கள், இழப்பீடுகள் தொடர்புடைய தொடர்ந்த இயக்கம் நடைபெற்று வருகிறது. சகலத்தையும் இழந்த பின்பும் தங்கள் மனத் துணிவு அவர்களைக் கைவிடாது வழி நடத்துகிறது - உலகை வழிகாட்டுகிறது.போபாலிலிருந்து 800 கிமீ தொலைவிலுள்ள தில்லிக்கு பாதயாத்திரைகள் கடந்த கால்நூற்றாண்டாகத் தொடர்கிறது. தில்லி போலீசார் தங்கள் தடிகளைக் கொண்டு அவர்களை உபசரிக்க மறந்ததில்லை - போபால் போன்ற விசயங்கள் நடந்தாலும் நாம் முன்னேறியாக வேண்டும்- என மன்மோகன் இவர்களின் தோளைத் தட்டி அறிவுறுத்தி வழியனுப்பியதும் உண்டு. ஜெயராம் ரமேஷ் போபால் சென்று மக்களைச் சந்தித்து அங்கிருந்த மண்ணை ஒரு பிடி தன் கையில் அள்ளி 'பாருங்கள். நான் உயிரோடுதான் இருக்கிறேன்' என வித்தை காட்டிச் சென்றார். இதே நிறுவனம் சமீபத்தில் பல கொடிய விஷ ரசாயனங்களைத் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. இந்தஅனுமதியைப் பெற 80 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பான இரு வழக்குகள்இந்த நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே காலத்தில் பி.ஜே.பி.கட்சி டவ் நிறுவனத்திடம் பெரும் தொகை நன்கொடை பெற்றுள்ளது. பி.ஜே.பி.யும் காங்கிரசும் சங்கமிக்கும் இடம் இதுவல்லவோ!

2010 ஜூன் முதல் வாரத்தில் இறுதி தீர்ப்பை வழங்கி உலகையே ஆச்சரியப் படுத்தியது நீதிமன்றம். அன்று காலை முதலே நீதிமன்றவளாகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டது. நீதிமன்றத்தைச் சுற்றிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போபாலிலிருந்து தீர்ப்பைக் கேட்கவந்த முக்கியப் பொறுப்பாளர்கள் - பத்திரிகையாளர்கள் எவரும் நீதிமன்றவளாகத்தில் அனுமதிக்கப் படவில்லை. ஏழு அதிகாரிகளுக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூபாய் 1,01,750 அபராதமும் விதித்து மொத்த வழக்கையும் முடித்து பாதிக்கப் பட்டவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. ஏழு அதிகாரிகளும் இந்தியர்களே. தீர்ப்பு முழுக்க சல்லடை போட்டுத் தேடியும் ஆன்டர்சனின் பெயரை எங்கும் காணவில்லை. 25,000 ரூ. பிணைத் தொகை கட்டி அந்த ஏழுபேரும் மாலையே விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு வெளிவந்ததை ஒட்டி சிவில் சமூகம் முழுவதிலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு சேர ஒப்பாரி வைத்தன. 26 ஆண்டுகளாய் வாய் திறக்காதவர்கள் அனைவரும் வாக்குப் பெட்டிகளைச் சுமந்து கொண்டு போபால் தெருக்களில் உலாவந்தனர்.

இதில் ஆகப் பெரிய ஒப்பாரி பி.ஜே.பி. - காங்கிரசுடையது. இந்த இரு கட்சிகள்தான் மத்தியிலும், மத்தியப் பிரதேசத்திலும் மாறி மாறிஆட்சியில் இருந்து வந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் இன்றுவரை குடிக்க சுகாதாரமான தண்ணீரைக் கூட அவர்களுக்கு வழங்கியதில்லை. டவ்வின் காலைக் கழுவ காங்கிரஸ் முயன்றால், பி.ஜே.பி.யோ ஆட்சியில் இருந்தபொழுது ஆன்டர்சனுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க முயன்றது. இரு கட்சிகளின் பழி சுமத்தும் கூப்பாடுகள் சமூகத்தில் நாராசமாய் ஒலிக்கின்றன.

ஊடகங்களின் வாயிலாகச் செய்யப்பட்டுவரும் விவாதங்கள், பிரச்சாரங்களின் வீரியத்தை மட்டுப்படுத்தும் நோக்குடன் மீண்டும் ஒரு முறை அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சிதம்பரமும் - கமல்நாத்தும் இந்தக் குழுவிலும் உள்ளனர். என்ன ஒரு சமத்துவம். இவர்கள் எல்லோரும்கூடி விரைவில் போபால் நகரைத் தூய்மைப் படுத்தப் போகிறார்களாம். இவர்களின் குணமளிக்கும் தொடுதலால் எல்லா நோய்களும் தீரப்போகின்றன.. இத்தகைய தொடர் அநீதிகளை ஒரு மக்கள் சமூகம் அனுபவிக்க நேர்ந்தால் ஜனநாயகத்தின் மீதான அவர்களின் நம்பிக்கை, நீதித்துறை மீதான அவர்களின் நம்பிக்கைகள் என்னவாகும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். இவர்களின் ரௌத்திரத்தை அடக்கத்தான் பலவிதப் படைகள் அரசு வசம் உள்ளதே. பச்சை வேட்டையைப் போல ஒரு போபால் வேட்டை நடவடிக்கையைத் தொடங்கிவிட்டால் முடிந்தது.

போபாலுக்கு அஞ்சலி செலுத்திய கையோடு அணு விபத்து பொறுப்பு மசோதாவுக்கு உயிர் கொடுக்க முனைகிறது மன்மோகன் அரசு. இந்த மசோதாவைச் சட்டமாக்கக் கோரி அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது நம்மால் வெளிப்படையாகவே காணமுடிகிறது. இந்த மசோதா சட்டமானால் போபாலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்குகளைக்கூட நம்மால் தொடுக்க இயலாது. ஜனநாயகம் வழங்கும் எல்லா உரிமைகளையும் மெல்ல மெல்ல பன்னாட்டு நிறுவனங்கள் அரசுகளுக்கு அழுத்தம்கொடுத்து அவர்களுக்கேற்றாற்போல் உருமாற்றி வருகிறது. அதன்படி ஒரு அணுஉலையை இந்தியாவில் நிறுவிய நிறுவனத்திற்கும் அந்த உலையில் நடக்கும் விபத்துகளுக்கும் தொடர்பேதும் இல்லை. அதனை இயக்குபவர்களே அதற்குப்பொறுப்பு. காலம் மாறும்போது எல்லாம் தலைகீழாய் மாறுகிறது. அதைவிட வேடிக்கை, விபத்து நடந்தால் 500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கேட்கவே இயலாது. மறுபுறம், கடந்த மாதம் மெக்ஸிகோ வளைகுடாவில் பிரிட்டிஷ்பெட்ரோலியம் நிறுவனத்தால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் 11 பேர் மாண்டனர்.அதற்கும் கடல் சுத்திகரிப்பிற்கும் ஒபாமா 500 கோடி ரூபாய் கேட்டு அதன் அதிபரை வெளிப்படையாக மிரட்டுகிறார்.

மக்களின் நம்பிக்கையைப் பெற ஒரு மக்கள் நல அரசு தவறிவருகிறது, இல்லை நாம் தான் இன்னும் இதை மக்கள் நல அரசு என நம்பிஆரம்பத்தில் விவரித்தது போல் கனவு கண்டு வருகிறோமா? அதே 1984ல் நடந்தசீக்கியப் படுகொலைக்குப் புதிய இழப்பீடு திட்டங்களை - ஒதுக்கீடுகளை அரசால் செய்யமுடிகிறது. நக்சல் ஒழிப்பு என்றால் தனியே சிறப்பு பட்ஜட்ஒதுக்கீடுகள் செய்ய முடிகிறது. ஆனால் இப்படியான விளிம்பு நிலை மக்கள்சார்ந்த அழிவுகள், பெரும் திட்டங்களால் ஏற்படுகிற இடப்பெயர்வு என மறுவாழ்வு சார்ந்தயாவற்றுக்கும் அரசு-நீதிமன்றங்கள் ஒன்று போலவே கசந்த மனோபாவத்துடன் நடந்து கொள்கின்றன.. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் ஒரு முறை நீதியை உத்தரவாதப்படுத்த தவறியுள்ளது வருத்தத்திற்குரியது.

போபால் வழக்கை மக்கள் சார்பாக அரசு நடத்தினால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு மூலதனங்கள் தடுக்கப்பட்டு விடும் என அரசும் முதலாளிகளும் ஒரே குரலில் பேசி வருகிறார்கள். ஒரு தேசம் அதன் பெரும்பகுதி மக்களைக் கணக்கில் எடுக்காது தன் பயணத்தை தொடர்வது பெரும் இடர்களை ஏற்படுத்தும். தொழில்நுட்பம் சார் வளர்ச்சி (G D B) யைஉயர்த்தலாம். ஆனால் இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் வாழ்க்கையை கடந்த 20ஆண்டுகளில் அது மிகவும் கேவலமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

No comments: