தமிழருவி மணியன்
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜ...ரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள். காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமை ஆக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்! ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்தி லிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது! ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்?

அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய ‘இந்திரா தர்பார், செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? ‘மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது என்ற மறக்கமுடியாத வசனத்தைப் ‘பூம்புகார் திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம். ‘தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன் (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா? ‘சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? .
ஐந்து கொள்கைகள்தான்.
கடவுள் ஒழிய வேண்டும்.
மதம் ஒழிய வேண்டும்.
காங்கிரஸ் ஒழிய வேண்டும்.
காந்தி ஒழிய வேண்டும்.
பார்ப்பான் ஒழிய வேண்டும்.
அன்று முதல் இன்று வரை அதேகொள்கைதான் கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார்.
இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்? சாய்பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் ‘நண்பர் என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் ‘பூணூல் என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்புக்குரியது அல்லவா! பக்திப் பரவசத்தில் கோயில் கோயிலாகச் சுற்றுவது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!

அண்ணா இறுதி நாள் வரை காங்கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்கவில்லையே; ‘என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்கொண்டிருப்பேன். மரணப் படுக்கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்டிருக்கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. ‘அண்ணா! அண்ணா! என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்கும். (கலைஞர் கடிதம் தொகுதி – 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிரஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?
‘சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை என்று சொன்ன கலைஞரே… உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள்… ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்? ‘முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை. என்றும் ‘காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்கள் குடியேறத்தான் செய்யும். என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி–1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்துவிட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே… அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழுரைகள்(!). நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். ‘சமத்துவம் இன்மையே… உனக்குப் பெயர்தான் இந்து மதமா? என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர். ‘சுயநலமே… உனக்குப் பெயர்தான் தி.மு.கழகமா? என்று கேட்கத் தோன்றுகிறது கலைஞரே!
‘பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை. (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே? ‘தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் ‘சொக்கத் தங்கத்தின் கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே! கலைஞரே… கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டியில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமையாற்றினீர்கள்.
இப்போது இரண்டாவது முறையாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே! ‘எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலானாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும். (கலைஞர் கடிதம் – தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றிவிட்டது. ‘வாண்டையார், வடபாதி மங்கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார் என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்; சென்னையில் 1951 டிசம்பரில் நடைபெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்டில், ‘தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான். என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று ‘நகைச்சுவை ததும்பப் பேசியிருக்கிறீர்கள்.
இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேரபுரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானிகளாய் உருமாறிய ரகசியத்தை உருக்குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்களுக்கே இடமிருக்காது கலைஞரே! ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய – திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? ‘இராமன் இரு பேச்சாளன் இல்லை. என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே! ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்தீர்கள்?
மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வகணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? ‘உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்? என்று கேட்டார் அண்ணா… அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா? ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்களுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் ‘திருமங்கலம் ஃபார்முலாவை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்! இப்படிக்கு, ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த, தமிழருவி மணியன்.
நன்றி : விகடன்
No comments:
Post a Comment