Saturday, March 12, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-4.


தில்லியில் இருந்து கிடைத்த உத்திரவின்படி IPKF புதிய அணுகுமுறையில் செயல்பட ஆரம்பித்தது.

விடுதலைப்புலிகள் அமைப்புகள் குறி வைத்து தாக்கப்பட்டன. புலிகளின் பத்திரிகை அலுவலகங்கள் அழிக்கப்பட்டன. வானொலி மற்றும் பிற ஊடகங்கள் அமைக்கப்பட்டிருந்த இடங்கள் தாக்கி எரிக்கப்பட்டன. உண்மையான போர்த் தகவல்கள் வெளியே வர வழி இல்லாத நிலை உருவானது. புலிகளும் திரும்பத் தாக்க ஆரம்பித்தன. புலிகளுக்கும், இந்திய அமைதி காக்கும் படைக்குமிடையே முழு அளவிலான போர் மூண்டது.

அமைதி காக்க வந்த படை

அழிக்கும் பணியைத் தொடர்ந்தது.

ஜெயவர்த்தனே சத்தம் போட்டே சிரிக்க ஆரம்பித்தார். இலங்கை ராணுவம் பூப்பந்து ஆடிக்கொண்டிருக்க – இந்திய ராணுவமும் புலிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி அழித்துக்கொண்டிருந்தனர்.

அக்டோபர் 10 ந்தேதி இந்திய ராணுவத்திற்கு ஒரு உளவுத் தகவல் கிடைத்தது. மறுநாள் 11ந்தேதி இரவு யாழ் பல்கலை கட்டிடத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களும், தளபதிகளும், பிரபாகரனைச் சந்திக்கும் அதி முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நிகழப்போகிறது என்பதே அது.

பிரபாகரன், மாத்தையா மற்றும் முக்கிய தளபதிகள் அனைவரையும் கூண்டோடு பிடிக்கவும், அது இயலா விட்டால் - அத்தனை பேரையும்
அழிக்கவும் IPKF திட்டம் ஒன்றை வகுத்தது. 5 விமானப்படை ஹெலிகாப்டர்கள், 10வது பாரா கமாண்டோ படையின் 120 கமாண்டோ வீரர்கள், 13வது சீக்கிய படையின் 360 சிப்பாய்கள் கொண்ட ஒரு பெரிய படைக்குழுவினர் யாழ் பல்கலைக்கழகத்தை 11ந் தேதி இரவு முற்றுகை
இட்டனர். ஹெலிகாப்டர்களிலிருந்து குறி பார்த்து துல்லியமாகச் சுடும் கமாண்டோக்கள் இறக்கப்பட்டனர்.

90 நிமிடங்களுக்குள் முழு ஆபரேஷனையும் வெற்றிகரமாக முடித்து, அங்கு கூடும் புலிகள் அத்தனை பேரையும் பிடிக்க அல்லது அழிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், இந்தியப்படை சற்றும் சந்தேகப்படாத நிலையில்,முற்றிலும் எதிர்பாராத விதமாக விடுதலைப்புலிகள், இவர்களது திட்டங்களை,
சிக்னல்களை ஒட்டுக்கேட்பதன் மூலம் இடைமறித்து முற்றிலுமாகத் தெரிந்து கொண்டார்கள்.

மிகத்துல்லியமாக பதில் நடவடிக்கை திட்டமிடப்பட்டது. யாழ் பல்கலையில் இந்தியப்படை சற்றும் அறியா வண்ணம், அதிரடிப் போராளிகள் தகுந்த நிலையில் முன்னேற்பாடாக நிலை கொண்டனர். ஹெலிகாப்டரின் விளக்குகளையும் அணைத்து விட்டு, கமாண்டோக்கள் ஒவ்வொருவராக இறக்கக்ப்பட விடுதலைப்புலிகளின் மெஷின்கன்களில் பொறி பறந்தது.

19 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இறுதியாக IPKF தரப்பில் மிஞ்சியது கோரா சிங் என்கிற ஒரே ஒரு சிப்பாய் மட்டுமே. அவரையும் பிடித்து வைத்திருந்தது, நடந்த விவரங்களை பின்னர் அவர் மூலமாக வெளி உலகுக்கு தெரிய வைக்கவே என்பது பிற்பாடு தெரிந்தது.

பெருத்த ஆட்சேதம், ஆயுதங்கள், டேங்குகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் இழப்பு ஆகியவற்றில் முடிவடைந்த இந்த தாக்குதல்

IPKFக்கு ஒரு அழியாத அவமானத்தை தேடித்தந்தது.


இதன் பிறகு, இந்தியத் தரப்பில் ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லும் blame game துவங்கியது. நிலா வெளிச்சத்தில், கமாண்டோக்களை இறக்கி அநாவசியமாக உயிர் பலி கொடுத்த முட்டாள் தளபதி என்று இந்திய தூதர் ஜெ.என்.தீக்ஷித், ஜெனரல் ஹர்கிரத் சிங்கை குறை கூற,

உளவுத்துறை ஏமாந்தது, 9 ஹெலிகாப்டர் தருகிறேன் என்று கூறி விட்டு கடைசி நேரத்தில் தகுந்த அளவு விமானப்படை உதவியை அளிக்காதது ஆகியவற்றை காரணமாகச் கூறினார் ஜெனரல் ஹர்கிரத் சிங்.

இந்த தகவல்கள் எதுவுமே அந்த சமயத்தில் வெளியுலகத்திற்கு முழுமை யாகத் தரப்படவில்லை. பிற்காலத்தில், ஒருவரை ஒருவர் குறை கூற ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிறைய செய்திகள் வெளி வந்தன.

நினைத்தது நடக்காததாலும், ஏகப்பட்ட இழப்புகளாலும்,

விரோதம் மேலும் மேலும் வளர்ந்தது.

ஜெயவரத்தனே- ராஜீவ் காந்தி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து - இலங்கையில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும், போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நிகழ்ந்து வந்த போரை நிறுத்தி, அமைதியான சூழ்நிலை நிலவ உதவியாக இருக்கவும் தான் இலங்கை சென்றது IPKF – இந்திய அமைதி காக்கும் படை.

வெளியே கூறப்பட்ட நோக்கம் இது தான்.

ஆனால் நடைமுறையில் நிகழ்ந்தது என்ன ?

ஈழப்போராளிகளைப் பிரித்து, புலிகளுக்கு எதிரான குழுக்களை ஊக்குவித்து, விடுதலைப்புலிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும்படி தில்லி அரசியல் தலைமையால் IPKF கமாண்டருக்கு உத்திரவு இடப்பட்டது.

ஈழப்போராளிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை அரசின் பணியை, இந்திய ராணுவம் மேற்கொண்டது.

தமிழ் மக்களை அழிக்கும் பணியில் இந்திய ராணுவத்தையே ஈடுபடுத்தினார் ஜெயவர்த்தனே.

விளைவு -?

தமிழர்களின் தரப்பில் ஏற்பட்ட சேதங்கள் -

போராளிகளின் சக்தி ஒடுக்கப்பட்டது. வானொலி நிலையம், பத்திரிக்கை அலுவலகங்கள் தாக்கி, அழிக்ககப்பட்டன. கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை – 7000 க்கும் மேல். கை,கால்கள், மற்ற உறுப்புகளை இழந்த அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை 10,000 க்கும் மேல். கற்பழிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் சரியான எண்ணிக்கை – வெளியிடப்படவில்லை.

IPKF தரப்பில் ஏற்பட்ட சேதங்கள் -

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட உயிர் இழந்த இந்திய ராணுவ வீரர்கள் – 1255 பேர். உறுப்புக்களை இழந்தவர்கள் – 5000 க்கும் மேல்.

ஆரம்பத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட படையில் இருந்த இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை -40,000. ஒரு கட்டத்தில் இது உயர்ந்தது – 1,00,000 வரை. இந்திய விமானப்படை வெளியிட்ட விவரங்களின்படி அது சுமார் 70,000 தடவை இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே விமானப் பயணங்களை நிகழ்த்தி இருக்கிறது.

கப்பல் படை மேற்கொண்ட பயணங்கள் தனி.

ஒரு லட்சம் ராணுவ வீரர்களை இந்தியாவின் பல பகுதி ராணுவ முகாம்களி லிருந்து - இலங்கையின் வட பகுதிகளுக்கு நகர்த்திச் செல்ல ஆன செலவு - சுமார் ஒரு லட்சம் படையினருக்குத் தேவையான, உணவு, உடை, இருப்பிட வசதிகள், ஆயுதங்கள், டாங்கிகள், கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் முதலியவை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றன.

காயம் அடைந்த வீரர்களை போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இத்தனை பேருக்கும் சுமார் 2 1/2 ஆண்டுகளுக்கு சம்பளம், அலவன்சுகள், உணவு, இருப்பிட வசதி, அங்கஹீனம் அடைந்தவர்களுக்கும், உயிர் இழந்தவர் குடும்பத்திற்கும் – போதிய நஷ்ட ஈடு .. இது குறித்து ஏற்பட்ட மொத்த செலவு எவ்வளவு என்பது குறித்து தனியே விவரங்கள் வெளிவரவில்லை. ஆனால் இத்தனை செலவுகளும், இந்திய மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் தான் செய்யப்பட்டு இருக்கின்றன.

இதில் புத்திசாலி யார் ?

தமிழ் இனத்தவரை அழிக்க இந்திய ராணுவத்தையே பயன் படுத்தியதோடு அல்லாமல், இத்தனை செலவுகளையும் இந்திய மக்களின் தலையிலேயே சுமத்திய ஜெயவர்த்தனேயா ?

அல்லது

அரசியல் அனுபவமின்மையாலும், அறிவு முதிர்ச்சியின்மையினாலும், வீண் பிடிவாதத்தினாலும், இத்தனை இழப்புக்களுக்கும் காரணமான இந்திய அரசியல் தலைமையா ?

இதில் மற்றுமொரு முக்கியமான விஷயம் - இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கோ, இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவோ,
இந்திய பாராளுமன்றத்தின் முன் ஒப்புதல் பெறப்படவில்லை என்பது. இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கும், தமிழ்ப் போராளிகளுக்கும்,
ஏற்பட்ட இன்னல்களும் - இந்திய ராணுவத்திற்கு இலங்கை அரசால் இழைக்கப்பட்ட பல அவமானங்களும், பல ஆண்டுகளுக்கு வெளியில் வராமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு -

ஹர்கிரத் சிங்கிற்கு பிறகு IPKF கமாண்டராகப் பொறுப்பு வகித்த ஜெனரல் ஏ.எஸ்.கல்கத் ஒரு பேட்டியில் கூறுகிறார்.

“ராணுவ நடவடிக்கையின் மூலம் ஒரு நாட்டில் நிம்மதியைக் கொண்டு வர முடியும் என்று நினப்பது சரியான எண்ணமல்ல.

நாம் அவர்களுக்கு ( இலங்கைத் தமிழர்களுக்கு ) சுதந்திரம் வாங்கித் தரவில்லை. அதிக அதிகாரமும் பெற்றுத் தர முடியவில்லை. தேர்ந்தெடுக்கப் பட்ட அவர்களது வடகிழக்கு முதலமைச்சருக்கு எந்த வித நிதி சம்பந்தப்பட்ட அதிகாரங்களையும் பெற்றுத்தர முடியவில்லை. அவர்களுக்கு நம்பிக்கை யான ஒரு அரசியல் கட்டமைப்பை நம்மால் ஏற்படுத்தித் தர முடியவில்லை.”

இது தான் ராஜீவ் காந்தியின் அரசியல் நடவடிக்கைகளைக் குறித்து அவரால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட IPKF ராணுவ தளபதியின் கருத்து.

“இந்தியாவின் வியட்னாம்” என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் பல ஆண்டுகள் கழித்து, பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு ஜெனெரல் கல்கத் கூறிய கருத்து இது.


முற்றும்

No comments: