Tuesday, March 15, 2011

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது குற்றமில்லை! - உயர்நீதி மன்றம்.


விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்வதோ, பிரச்சாரம் செய்வதோ சட்டப்படி குற்றமில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கருத்துரிமை இயக்கம் சார்பில் இயக்குநரும் பத்திரிகையாளருமான புகழேந்திதங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருமனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல. இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல. இதனால் கமிஷனர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கையெழுத்து இயக்கம் நடத்த போலீஸ் அனுமதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.


நன்றி : தட்ஸ் தமிழ்

No comments: