Saturday, February 12, 2011

மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.அப்துல்கலாமின் பதில்கள். (பகுதி -2)



16.வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை நாம் எப்படி கட்டுப்படுத்துவது? செல்வசிவாகணேஷ், செங்கல்வராயா பாலிடெக்னிக், சென்னை. சன்சித், பிளேட்டோ அகடமி மெட்ரிக் பள்ளி, திருப்பூர். ராஜயோகன், மகாராஜா பிருத்வி இன்ஜினியரிங் கல்லூரி, அவினாசி. கிரீஷ், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலாயா பாலிடெக்னிக், கோவை. அனீஷ், திருநகர், வில்லிவாக்கம், சென்னை. விக்னேஷ், லட்சுமி மில்ஸ் பள்ளி, தூத்துக்குடி. விஷ்ணு, அமெரிக்கன் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் :
சமுதாய கட்டமைப்பின் நிலையற்ற தன்மையால்தான் பயங்கரவாதம் உருவாகிறது. பல்வேறு நாடுகளில் இப்பயங்கரவாதம் உள்ளது. இளைஞர்களுக்கு நாம் வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கும் போது அதை தடுக்கலாம். நிதி வசதியில் உள்ள சமச்சீரற்ற தன்மையை நாம் மாற்றும் போது, சமூகத்தில் உள்ள பல்வேறு வகையான பாகுபாடுகள் களையப்பட்டு பயங்கரவாதத்தை ஒழிக்கலாம். மதம் என்பது ஆன்மிகமாக மாற்றம் அடைய வேண்டும். பசி பட்டினியை ஒழித்து வளர்ந்த நாடாக நாம் மாற வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் அமைதி தவழும் நாடாக இந்தியா மாறும்.

17. 2020ம் ஆண்டில் இந்தியா அறிவு சார் சூப்பர்பவர் ஆகுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மணிகண்டன், வீனஸ் கார்டன், மங்கலம் ரோடு, திருப்பூர். நாகேந்திர குமார், வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. ஈஸ்வரன், ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம். சந்தோஷ், மேரி மாதா மெட்ரிக் பள்ளி, மதுரை. ஜனனி, ஸ்ரீதாராசந்த் ஜெயின் வித்யாலயா, சென்னை. சத்யராஜ், கிராமிய பல்கலைக்கழகம், காந்திகிராமம். மோனிஷ்குரு, செயின்ட் மேரி மெட்ரிக் பள்ளி, கோவை. மணிகண்டன், பி.கே.என்., கல்லூரி, திருமங்கலம். சுரேஷ்குமார், தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, மதுரை/பிரவீன், சர் எம்.சி.டி.எம், டிரஸ்ட் பள்ளி, கீழ்ப்பாக்கம். மாது, ஆர்.எம்.கே., இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. குருபரன், ஸ்ரீஆனந்த் ஜோதி வித்யாயலயா, சென்னை. கார்த்திகேயன், வேல்டெக், ஆவடி, சென்னை

டாகடர் அப்துல்கலாம் : நாம் கல்வியில் அதிக முதலீடு செய்ய வேண்டும். நம் சமுதாயத்துக்கு தரமான கல்வியை அளித்தாலே அறிவுசார் சமுதாயம் உருவாகும். இளைஞர்கள் அனைவரும் கல்லாமையை இல்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். கிராமப்புறங்களில் சிறு சிறு தொழில்கள் துவங்க உதவி செய்து அங்குள்ள இளைஞர்களுக்கு பணிவாய்ப்புகளை அளிக்க வேண்டும். இதுவே இந்தியாவை 2020ம் ஆண்டில் அறிவுசார் சூப்பர்பவர் ஆக்க உதவும்.

18.உலகம் வெப்பமடைந்து வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
வெங்கட் சுப்ரமணியன், லட்சுமி மெட்ரிக்பள்ளி, கருப்பாயூரணி, மதுரை. பிரசன்ன குமார், டி.எம்.எச்.என்.யு., பள்ளி தேனி.சுகன்யா ராஜமன்னார், நடராஜன் நகர், தஞ்சாவூர்

டாகடர் அப்துல்கலாம் : உலகம் வெப்பமடைதல் என்பது கட்டுக்கதை என்று இனி சொல்ல முடியாது. அது உண்மையாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பூமி தற்போது 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துவிட்டது.

உறைபனி மற்றும் பனிக்கட்டிகள் இந்த வெப்ப உயர்வில் மாற்றங்கள் அடையும். பனிக்கட்டிகள் இந்த வெப்பநிலை மாற்றத்தால் உருக தொடங்கியுள்ளன. மலைகளில் உள்ள பனி உருகுவதால் அவை கடல் மட்டத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் துருவப்பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் கடல்மட்டத்தை உயர்த்தும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகள், நம் வாழ்க்கை முறையில் கடைபிடிக்கப்படும் எளிய முறைகள் ஆகியவற்றால் உலகம் வெப்பமடைதலை தடுக்கலாம்

19..உள்நாட்டிலேயே உருவான நீங்கள் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பது ஏன்?
சந்திரன், யாதவா கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். ஆனால் 0.8 சதவீத எண்ணெய் மற்றும் காஸ் மட்டுமே இந்தியாவில் கிடைக்கிறது. 2030ம் ஆண்டில் நமக்கு 4 லட்சம் மெகாவாட் எரிசக்தி தேவைப்படும். தற்போது ஒரு லட்சத்து 44 ஆயிரம் மெகாவாட் எரிசக்தி மட்டுமே கிடைக்கிறது. இந்த தேவையை நிறைவேற்ற புதுப்பிக்கவல்ல எரிசக்தி (சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி) அணு சக்தி மற்றும் உயிரி எரிசக்தியிலிருந்துதான் பெற வேண்டும்.

அணுசக்தி உற்பத்தி தற்போது 3,900 மெகாவாட் ஆக உள்ளது. 2012ம் ஆண்டில் 9 புதிய அணு உலைகளின் உதவியால் 7,160 மெகாவாட்டாக உற்பத்தியை உயர்த்த வேண்டும். 2030ம் ஆண்டில் 50 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த தேவையான பணிகள் தற்போது அணுசக்தி துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டில் தோரியம் அடிப்படையிலான அணு உலைகளில் உற்பத்தி சிக்கல் ஏற்படும் போது, தேவைப்படும் யுரேனியம் தேவையை நிறைவேற்றிக் கொள்ள யுரேனியம் இறக்குமதி அவசியம். 2030க்குப் பிறகு நமக்கு அந்த தேவை இருக்காது.

20.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவுகள் என்ன?
ஹரிப்பிரியா, ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கோவை

டாகடர் அப்துல்கலாம் : நம்மிடம் 61 ஆயிரம் டன் யுரேனியம் மட்டுமே உள்ளது. இது 10 ஆயிரம் மெகாவாட் மின் சக்தி உற்பத்திக்கு மட்டுமே பயன்படும். எனவே நமது அணு உலைகளை 50-55 சதவீதமே பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளோம். எல்லாவகையில் உள்ள எரிசக்தியை பயன்படுத்தினாலும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியா எரிசக்திக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் நாம் எரிசக்திக்கு பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் தடை இல்லை. ஆகவே எரிசக்தி தேவையை நாம் அதிகரித்துக் கொள்ள முடியும்.

21.அணு சக்தி ஒப்பந்தம் நமக்கு நல்லதா... கெட்டதா?
ரம்யா கேசவ குமார், தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி, பெரம்பலூர். செந்தில், நாகசாமி மெமோரியல் பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : அமெரிக்காவும் இந்தியாவும் தனது தேசிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வதற்கே இந்த உடன்படிக்கை. அமெரிக்க விதிமுறைகளை மீறி அங்குள்ள நிறுவனங்கள் நடந்து கொள்ளாது

22. தற்போதுள்ள பொருளாதார சிக்கலுக்கு தீர்வு என்ன?
வி.ஹரிஷ், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் மெட்ரிக் பள்ளி, மதுரை. கார்த்திகாயினி, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் சென்னை

டாகடர் அப்துல்கலாம் : பணவீக்கத்தை கட்டுப்படுத்த தற்போது அரசு முயற்சி செய்து வருகிறது. கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கிராமப்புற வளர்ச்சி திட்டமும் உள்ளது. ‘ஒரு கிராமம் - ஒரு பொருள்’ என்னும் திட்டப்படி, ஒரு கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட பொருள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யுமளவுக்கு தரமாக இருக்கும்படி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் பொருளாதார நிலை உயர்ந்து அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் உயரும்.

23.கல்வியின் நோக்கம் என்ன, அறிவை வளர்ப்பது எப்படி?
மாதேஸ்வரன், ஒச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி. அழகு முருகேசன், எஸ்.பி.எம்., பள்ளி,விழுப்புரம். கோகுலகிருஷ்ணா, ஸ்ரீஅரவிந்த வித்யாலயா, நெய்வேலி

டாகடர் அப்துல்கலாம் : கல்வியின் நோக்கம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே. அறிவார்ந்த சமுதாயத்துக்கு மூன்று அடிப்படை குணாதிசயங்கள் உள்ளன. மதிப்பீடு அடிப்படையிலான கல்வி, ஆன்மிக நெறிகளாக மாறக்கூடிய மதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி. பள்ளியில் கற்பிக்கப்படுவது அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான பணி. இது தேசிய வளர்ச்சிக்கு உதவும்.

24.நல்ல ஆசிரியராவதற்கான குணாதிசயங்கள் என்ன?
ஆனந்த், செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி, சாத்தான்குளம். ராஜேஸ் குமார், அமெரிக்கன் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : ஆசிரியர் பொறுப்புள்ளவராக இருக்க வேண்டும். கற்பிப்பதில் விரும்புபவராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
நாகரிக சமுதாயத்தையும் நல்ல மதிப்பு மிக்க மாணவர்களை உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மாணவர்களை சுயமாக கற்றுக்கொள்பவர்களாக உருவாக்க வேண்டும்.

25.கிராமப்புறங்களை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும்?
சீனிவாசன், அன்னை தெரசா முதுநிலை மற்றும் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி.. மிதுன்சிங், காமராஜர் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, விருதுநகர்

டாகடர் அப்துல்கலாம் : கிராமப்புறங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் புரா (PURA). இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், கிராமப்புறங்களிலேயே நகரங்களில் கிடைக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இவ்வசதிகளை செய்து கொடுக்க நான்கு விதமான இணைப்புகள் அவசியம். முதல் இணைப்பு சாலை போக்குவரத்து. இரண்டாவது தகவல் தொடர்பு இணைப்பு. மூன்றாவது அறிவுசார்ந்த இணைப்பு. இந்த மூன்றையும் சேர்த்தால்தான் நான்காவதாக பொருளாதார இணைப்பு உருவாகும்.

அருகில் உள்ள கிராமங்களை இணைத்து புரா குழுமம் அமைய வேண்டும். பிறகு புரா திட்டத்தின் முதல் இணைப்பாக அக்கிராமங்களுக்கு சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்கள், எலக்ட்ரானிக் தொடர்புகள், மின்னணு தொலைபேசி வசதிகள் ஆகியவற்றை செய்து தர வேண்டும். அப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்டு சுற்றிலும் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். புரா அமைந்துள்ள கிராமங்களைச் சுற்றி கல்வி அறிவு இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இதன் வழியாக சிறுதொழில்கள் பெருகி குறைந்த விலையில் தரமான பொருட்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்படும். அப்போது இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

26.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி கூறுங்களேன்?
செந்தில் பாலாஜி, சி.பி.டி., கல்லூரி, தரமணி, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : தற்போது அணுசக்தி மூலம் நாம் பெறும் மின்சாரம் 3 சதவீதம் மட்டுமே. 2030ம் ஆண்டு வாக்கில் நமக்கு 4 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அப்போதுதான் நம்முடைய பொருளாதார வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்ள முடியும். இதற்கு 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அணு உலைகளிலிருந்து பெற்றாக வேண்டும். அப்போதுதான் நிலக்கரியை சார்ந்து மின் உற்பத்தி செய்வதை நாம் தவிர்க்க முடியும். தற்போது 55 சதவீத மின் உற்பத்தி நிலக்கரி மூலம் நடைபெறுகிறது. இதை 2030ம் ஆண்டில் 33 சதவீதமாக குறைக்க வேண்டும்.

27.வெற்றியின் ரகசியம் என்ன?
விமல்ராஜ், பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லூரி, கோவை. ஆகாஷ் சந்திரன், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, அண்ணாநகர், சென்னை. ஐஸ்வர்யா, டி.ஏ.வி., பள்ளி,வில்லிவாக்கம்.புஷ்பம், ஜெயா இன்ஜினியரிங் கல்லூரி,திருநின்றவூர்

டாகடர் அப்துல்கலாம் : எனது வெற்றியின் ரகசியம் எனது பெற்றோர்கள்தான். நான் எப்போதுமே என்னுடைய ஆசிரியர்களை நினைக்கிறேன். அவர்கள்தான் என்னுடைய வாழ்க்கைக்கான லட்சியத்தை அளித்தனர். நீங்கள் கடினமாக உழைக்கும் போது, சில பிரச்னைகள் உங்களை தேடி வரும். பிரச்னைகளை வரவிடாமல் தடுத்து வெற்றி அடையுங்கள். அப்போது நீங்கள் தோல்வியை துவள செய்து
வெற்றியாளராக உருவாவீர்கள்

28.பூமியைத் தவிர வேறு எங்காவது உயிர்கள் இருக்கின்றனவா?
சிவக்குமார், ஸ்ரீசாஸ்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை

டாகடர் அப்துல்கலாம் : உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் பிற கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து வருகிறார்கள். நமது சூரிய குடும்பத்தில் பூமியில் எப்படி உயிர்கள் தோன்றியதோ, அதேபோல் வேறு எங்கும் உயிர்கள் உருவாகியிருக்க வாய்ப்புகள் உள்ளன. சூரியனைப் போல் கோடானு கோடி சூரியன்கள் பிரபஞ்சத்தில் உள்ளன.

29.பெர்முடா முக்கோணத்தின் அதிசயம் என்ன?
குருமூர்த்தி, பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, சாத்தூர். நந்தினி, ஜவஹர் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி. நித்தியேஸ்வர், விவேக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கோவை.. சதீஷ்குமார், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம், சென்னை. ராஜா, வி.கே. மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்

டாகடர் அப்துல்கலாம் : அமெரிக்காவின் தென்கிழக்கு அட்லான்டிக் கடற்கரையை ஒட்டிய பகுதி பெர்முடா முக்கோணம் அல்லது சாத்தான்களின் முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில் கப்பல்கள் காணாமல் போவதும் விமானங்கள் மறைந்துவிடுவதும் உண்டு. அதற்கான காரணங்கள் வெவ்வேறாக கூறப்படுகின்றன. இந்த இடத்தில் விபத்துகள் நடப்பதற்கு மனிதத் தவறுகள்தான் காரணம். உலகின் இரு இடங்களில் காந்த துருவம் வடக்கு நோக்கி காட்டாது. அதில் ஓர் இடம் இந்த பகுதி. இது கப்பல் மற்றும் விமானிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

30.இளைஞர்கள், மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? கோபிநாத், சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல். தீப்தி, டாக்டர் ஜி.ஆர்.டி அறிவியல் கல்லூரி, கோவை. ராம்குமார், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். ஆர். ஹரிஹரன், முகமது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை, ராமநாதபுரம். பி.கே. சுவாமிநாதன், சாஸ்தா பல்கலைக்கழகம், சென்னை. ராணி, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை. கீர்த்தி குமார், சி.எஸ்.ஐ., பள்ளி, கோவை. சிவஹரிநாதன், ஜேசிஸ் பள்ளி, சிவகாசி. ரமேஷ் சண்முகம், நேஷனல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர். மகேஸ்வரம், தியாகராஜர் கல்லூரி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : அரசியல் இளைஞர்களை வரவேற்கிறது. அரசியலில் ஈடுபட நினைப்போர், காந்தியடிகளுக்கு அவரது தாயார் சொன்ன அறிவுரையை நினைத்துப்பார்க்க வேண்டும். அவர் சொன்னது, “மகனே உனது வாழ்வில் துன்பத்தில் துவளும் யாராவது ஒருவரின் வாழ்வில் நீ ஏதேனும் மாற்றத்தை உருவாக்கி அவரை துன்பத்திலிருந்து மீட்டெடுத்து, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றால், நீ மனிதனாக பிறந்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்து அடையும், என்றார். மாணவர்கள் முதலில் படிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் உங்கள் திறனுக்கேற்ப நீங்கள் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்யலாம்.

வளரும்.

நன்றி : கல்வி மலர்

No comments: