Thursday, February 10, 2011

குறள் கொடுத்த வாழ்வு. பகுதி-2

தேன்தமிழ்ப் புலவர் மு.வைத்திலிங்கம்.


ஒரு சமயம் எங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தில் பேச ஒரு தமிழரிஞர் வந்தார். அவர் காரில் வந்து இறங்கினார். அது எங்களைக் கவர்ந்தது. அவர் அழகாகப் பேசினார். அந்த காரை எல்லோரும் சுற்றிக் கொண்டு தொட்டுப் பார்த்தனர் எவ்வளவு 'அருமையான காருடா!' என்று ஒருவன் பாராட்டினான்.

'இந்த மாதிரிக் காரெல்லாம் நம்மாள வாங்க முடியுமாடா?' என்று கேட்டான். ஏன் முடியாது; ஒரு நாளைக்கு நானே வாங்கிக் காட்டுகிறேன் பாரு என்றேன். எல்லோரும் 'கொல்' ன்று சிரித்தர், எனக்கு வெட்கக் கேடாகி விட்டது. ஒரு நாள் நிச்சயம் இதை விட நல்ல கார் நான் வாங்குவேன்டா என்று உரத்த குரலில் சொன்னேன். அதற்குள் தலைமையாசிரியர் அந்தப் பக்கம் வந்தார். அதனால் அனைவரும் கலைந்து சென்றோம்.ஆனால் என்னுள் ஏற்பட்ட உறுதி மட்டும் கலையவில்லை.

அந்தப் பேச்சாளர் எழுதிய நூலொன்றைக் கூட்டத்தில் மாணவர்களிடம் காட்டி அவர்தம் பெருமை பற்றித் தலைமையாசிரியர் பேசினார். ஒரு மாணவன் அந்த நூலைக் குறித்து பேசும்போது , 'அந்த மாதிரிப் புத்தகம் உன்னால் எழுத முடியுமாடா?' என்றான். 'என்னால் உறுதியாகப் புத்தகம் எழுத முடியும்டா!' என்றேன். மாணவர்கள் மீண்டும் சிரித்தனர்.

இவன் என்னடா எல்லாம் தன்னால் முடியும் என்கிறான்! என்றான் ஒருவன். 'எல்லாம் என்னால் முடியுமடா!' என்று மீண்டும் உரத்தக் குரலில் சொன்னேன். அப்போது என் நெஞ்சில் வள்ளுவரின் குறள் தோன்றி 'முடியும்! முடியும்!' என்றது.

இப்படி எத்தனையோ எண்ணங்கள் என் நெஞ்சில் வளர்த்துக் கொண்டே நான் வளர்ந்தேன். இந்த நேரத்தில் தான் 'இளைஞர் இதயம்' என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினேன். தமிழாசிரியர் எனக்குத் துணை நின்றார். நண்பர்களும் ஆவலுடன் உதவினர். கட்டுரைகளும், கதைகளும், கவிதைகளும் கலந்து அந்த இதழைச் சிறப்பித்தன. என்றாலும் ஓரிதலுடன் அது நின்று போயிற்று.

அடுத்த ஆண்டு ஆறாம் படிவத்திற்கு (S.S.L.C) வந்தோம். அந்த ஆண்டு அரசுப் பொதுத் தேர்வு என்பதால் தலைமையாசிரியர் எங்களைப் பள்ளியில் இரவு தங்கிப் படிக்கச் சொன்னார். எட்டு மணிவரை எங்களுடன் இருந்து வீடு செல்லும் அவர், விடியற்காலை ஐந்து மணிக்கு வந்து எழுப்பி விடுவார். காலை ஏழுவரை படித்து விட்டு, வீட்டுக்குச் சென்று குளித்து, உண்டு விட்டு, பகல், இரவு உணவுடன் பள்ளிக்கு ஓடிவர வேண்டும். இப்படி எங்கள் நலனில் அக்கறை காட்டிய தலைமையாசிரியர் திரு. இராசரத்தினம் போல் வேறொரு தலைமையாசிரியரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை.

அந்த ஆண்டு எம் பள்ளியில் தேர்வுக்குச் சென்ற அத்தனைப் பேரும் தேறினோம். மேலே என்ன செய்வது? இது பெரிய வினாவாக என முன் நின்றது. கல்லூரிக்குச் சென்று படிக்க எனக்கு விருப்பம். மழை வறண்டு கிணறுகள் வற்றிப் போனதால் உணவுக்கே தடுமாற்றம். இந்தச் சூழ்நிலையில் கல்லூரி பற்றி எண்ணவே இயலவில்லை.

ஒரு நாள் சேலத்துத் தெருவில் எம் தலைமையாசிரியரைக் கண்டேன். மகிழ்வுடன் வணங்கினேன். 'என்னப்பா! கல்லூரிக்குச் செல்லவில்லையா?! என்றார்.

'விரும்புகிறேன் ஐயா! வீட்டுப் பொருளாதாரம் இடந்தரவில்லை' என்றேன்.

பரவாயில்லை.திருப்பதியில் கோயில் சார்பில் தமிழ்க் கல்லூரி நடத்துகிறார்கள். என் நண்பர் தமிழ் துறையில் இருக்கிறார். நான் கடிதம் தருகிறேன். அவரைப் போய்ப் பார். இலவச உணவுடன் படிக்க இடங் கிடைக்கும்.

நான் மகிழ்ந்தேன். 'இன்றே புறப்படு' என்று கடிதமொன்றும் தந்தார். கடிதத்தைப் பெற்றுக் கொண்டு தயங்கி நின்றேன் 'ஏன் தயக்கம்?' என்றார். 'என்னிடம் பணம் ஏதும் இல்லை ஐயா!' என்றேன். 'கவலைப் படாதே! இதை வைத்துக் கொண்டு போய் வா' என்று ஒரு தொகையை அவரே தந்தார். பெற்றுக் கொண்டு கலங்கினேன். 'கவலை வேண்டாம். இப்போதே புறப்படு' என்று தட்டிக் கொடுத்தார்.

என் நலனில் அக்கறை கொண்ட அந்தப் பேருள்ளத்தை வியந்தவாறே திருப்பதி சென்றேன். உரியவரிடம் அந்த மடலை தந்தேன். அவர் மகிழ்வுடன், '' நண்பர் இராசரத்தினத்தின் மாணவனா நீ? உனக்கு இலவச உணவு விடுதியில் இடம் கொடுக்கிறேன். சேர்க்கை அட்டை அனுப்புவேன். வந்து சேர்ந்துக் கொள்!'' என்று என்னை அனுப்பி வைத்தார்.

கல்லூரி கனவுகளுடன் ஊர் தரும்பினேன். தலைமையாசிரியரிடம் நன்றி சொன்னேன். என் வீட்டாரும் பெருமை கொண்டனர். நண்பர் பலரிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன்.

ஒரு நாள் திருப்பதிக் கல்லூரியிலிருந்து மடல் வந்தது. '' தம்பி! கவலைப்படாதே அமைச்சர் ஒருவரின் பரிந்துரையால் உன் இடத்தை வேறொருவருக்குத் தர வேண்டியதாயிற்று. அடுத்த ஆண்டு கட்டாயம் உனக்கு இடங் கிடைக்கும். நம்பிக்கையுடன் காத்திரு'' என்று அந்தப் பேராசிரியர் மடல் எழுதியிருந்தார்.

என் நம்பிக்கைக் கோட்டை நொறுங்கியது. தளர்ந்து போனேன். ''தம்பி! வீணாக வருந்தாதே. எல்லாம் விதிப்படியே நடக்கும். பண்ணையத்தை நாம் கவனிப்போம்'' என்றார் என் தந்தை.

''ஊழையும் உப்பக்கம் காண்பர்'' என்ற குறள் என்னுள் எழுந்து முழங்கியது. விதியை வெல்ல உறுதி கொண்டேன். நான் ஒரு நாள் தமிழாசிரியர் ஆவேன் என்னும் நம்பிக்கையை செஞ்சில் வளர்த்தேன். முயன்றேன். ஓர் உயர் தொடக்கப்பள்ளியில், பயிற்சி இல்லா ஆசிரியனாக ஆறு திங்கள் பணியாற்றினேன். அதில் பெற்ற ஊதியத்தைச் சேமித்து அடுத்த ஆண்டு ஈரோடு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன். இரண்டாண்டுகள் பயிற்சி பெற்று வீடு திரும்பினேன்.

திடீரென்று ஒருநாள் என் தாயார் இயற்கையடைந்தார்கள். வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்த கதையாயிற்று. என் தந்தையார் மனம் குழம்பிப் போனார். எங்களைத் தவிக்க விட்டுக் கோயில் கோயிலாகப் போகத் தொடங்கினார். ஆறு திங்கள் அவர் எங்குள்ளார் என்றே தெரியவில்லை. எனக்குக் கீழ் எட்டுப்பேர். ஆணகள் நால்வர். பெண்கள் நால்வர். எல்லோரும் படித்துக் கொண்டிருந்தனர். நடுக்கடலில் கலம் நொறுங்கியது போல் தத்தளித்தோம்.

'இடுக்கண் வருங்கால் நகுக' என்னும் குறள் என்னைத் தட்டி வழி நடத்தத் தொடங்கியது. துணிவுடன் பண்ணையத்தை நடத்தத் தொடங்கினேன். நல்ல மழை பெய்த நேரம் அது. உறவினர் ஒருவரிடம் கடனாக ஓரினை மாடுகள் வாங்கி நிலத்தை உழுதோம். என் தம்பிகளில் ஒருவனைத் துணைக்கு வைத்துக் கொண்டு வேலைகள் நடைபெற்றன. வயல்களில் கரும்பு பயிர் செய்தோம். பள்ளி சென்று வந்த எம் பெரிய தங்கை எங்களுக்குச் சமைத்துப் போட்டாள். எமக்கு வேண்டியவர்களும் சிற்சில வகைகளில் உதவினர். கரும்பு வளர்ந்து வெட்டுக்குத் தயாரானது.

என் தந்தை வீடு வந்து சேர்ந்தார். எங்கள் உழைப்பைக் கண்டு பூரித்தார். சந்தைக்குக் கரும்பு கொண்டு போகும் பணி தொடங்கியது. என் கவலை ஓரளவு குறைந்தது.

நான் ஆசிரியப் பணி தேட ஆரம்பித்தேன். என் ஆசிரியர் ஈ.எஸ்.ஆறுமுகம் அவரகள் துணையால் கோவை மாவட்டம் நம்பியூர் உயர் பள்ளியில் எனக்குப் பணி கிடைத்தது. திறம்படச் செய்தேன். அங்குத் தமிழ் இலக்கியங்களைப் புலவர் தேர்வுக்கெனப் படிக்கத் தொடங்கினேன்.

அடுத்த ஆண்டு அந்தியூர் வந்தேன். அது பெரிய பள்ளி, எனக்கு நிறைய தமிழ் வகுப்புகள் கொடுக்கப்பட்டன. பாராட்டும் வகையில் அப் பணியைச் செய்தேன். அங்குப் புலவர் கு.மா.திருநாவுக்கரசு எனக்கு நண்பரானார். நாங்கள் இருவரும் சேர்ந்து மாணவர்களுக்கு ஞாயிறுதோறும் குறள் வகுப்பு நடத்தினோம். ஆசனங்கள் பயிற்றுவித்தோம். அங்கு வள்ளுவம் என்ற நாடகத்தை சிறப்பாக நடத்தி பாராட்டுப் பெற்றோம்.

அடுத்த ஆண்டு ஒலகடம் வந்தேன். அங்கு ஆறாண்டுக் காலம் என் பணி நடந்தது. என் தங்கை இருவரையும், என் பெரியப்பா வழி அண்ணன் பெண்கள் இருவரையும் அழைத்து வந்து படிக்க வைத்தேன். பெண்கள் படிக்க வேண்டும் என்ற ஆவலினால் அவர்களைப் படிக்க வைத்தேன். அங்குதான் புலவர் இளநிலைத் தேர்வெழுதினேன். புலவராக வேண்டும் என்ற ஆவலும் முயற்சியும் சிறிதும் குறையவில்லை. 'முயற்சி திருவினை ஆக்கும்' என்ற குறள் எனக்குத் துணையாகி வந்தது. இந்தப் பள்ளியிலும் வள்ளுவம் நாடகத்தை நடத்தினேன். ஊர்ப் பெருமக்கள் மேடையிலேயே எனக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

ஓலகடத்தில் ஓவியர் நடேசன், தொழிலாசிரியர் இராமசாமி, ஆசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஓரறையில் தங்கியிருந்தோம். அந்த அறைக்கு வள்ளுவர் இல்லம் எனப் பெயரிட்டோம். ஓய்வு கிடைத்த போதெல்லாம் திருக்குறள் படிப்போம். ஐயம் ஏற்படும் போது அனைவரும் சேர்ந்து அது பற்றிச் சிந்திப்போம். ஒரு சமயம் எனக்குத் திடீரென்று நச்சுக் காய்ச்சல் வந்தது. நண்பர்கள் துடித்துப் போயினர். உள்ளூரிலிருந்து மருத்துவரை அழைத்து வந்து காட்டினர். அவரும் மருந்துகள் தந்தார். ஒரு வாரமாகியும் காய்ச்சல் தணியவில்லை. எதிர் வீட்டு நண்பர் சுப்பிரமணியம் சீரகம் சேர்த்து வெந்நீர் வைத்து நாள் தோறும் கொடுப்பார்.

எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் கோபி மருத்துவமனைக்குக் கொண்டு போகச் சொல்லி விட்டார். நண்பர் சுப்பிரமணியம் தனக்கு வேண்டியவரிடம் 'ஜீப்' ஒன்று இரவல் வாங்கித் தர, அதில் நண்பர்கள் என்னைக் கோபி மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றனர். அங்குத் தங்கி மருத்துவம் பார்க்கக் கூறி அந்த மருத்துவர் ஓர் அறை ஒதுக்கித் தந்தார்.

என் வீட்டிலிருந்து எனக்குத் துணையிருக்க எவரும் வரவில்லை. வரவும் வாய்ப்பில்லை. என் இனிய நண்பர்களே எல்லாவகை உதவிகளையும் செய்தனர். முதல் நாள் ஒருவர் துணையிருப்பார். அடுத்த நாள் மாலை ஒருவர் ஓலகடத்திலிருந்து நேர்வு விடுப்பு எடுத்துக் கொண்டு வருவார்.துணையிருந்த நண்பர் சென்று விடுவார். மறு நாள் மாலை முதல் நாள் வந்தவர் வருவார். இப்படிப் பதினைந்து நாட்கள் நேர்வு விடுப்பு எடுத்துக் கொண்டு மாறி மாறி வந்தனர். பள்ளித் தலைமையாசிரியரும் அவர்களுக்கு விடுப்பு தந்து அனுப்புவதில் சுணக்கம் காட்ட மாட்டார்.

படுக்கையிலேயே சிறுநீரும், மலமும் கழிக்க வேண்டிய நிலை வந்த போதும் நண்பர்கள் தயங்கவில்லை. படுக்கைக் கோப்பையில் அவற்றை ஏற்று அப்புறப் படுத்தினர். அவர்கள் செய்த உதவிகளைக் கண்டு நான் பலமுறை கண்ணீர் மல்கியிருக்கிறேன். தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன். 'நீங்கள் கவலைப் படாதீங்க. எங்கள் நண்பருக்கு இப்படிச் செய்வதில் நாங்கள் பெருமைப் படுகிறோம்' என்று சொன்னதை நான் இன்றளவும் மறக்கவில்லை.

இந்த நிலையில் எப்படியோ செய்தி கேட்டு என் தந்தையும், பெரியப்பார் மகனும் மருத்துவ மனைக்கு வந்தார்கள். என் நிலை கண்டு என் தந்தை கலங்கிப் போனார். ஒரு நாள் இரவு முழுவதும் அங்குத் தங்கி என் நண்பர்கள் எனக்குச் செய்த உதவிகளைக் கண்டு வியந்து போயினர். நாமே இருந்தாலும் இத்தனை உதவிகள் செய்ய முடியாது என என் அண்ணன் சொல்லியதைக் கேட்டு என் தந்தை கலங்கினார்.

'உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே

இடுக்கன் களைவதாம் நட்பு'

என்ற வள்ளுவர் வாக்கை எண்ணி எண்ணி பெருமிதம் கொண்டேன். உடல் நலம் பெற்று வீடு திரும்பும் வரை நண்பர்கள் உடன் இருந்து என்னைத் திரும்ப அழைத்து வந்தனர். எனக்காகவே சமையல்காரன் ஒருவனை அமர்த்தினர். அதுவரை விடுதியில் உண்டு வந்த நாங்கள் அதன் பிறகு சொந்த சமையல்காரனை வைத்துச் சமைத்து உண்ணத் தொடங்கினோம்.

அங்குத் தான் எனக்குத் திருமணமும் நடந்தது. வீட்டினர்க்கு எந்த செலவும் வைக்காமல் நானே முயன்று என் செலவில் தமிழரிஞர் கு.சிவமணி தலைமையில் சடங்குகள் எதுவுமின்றி மணம் முடித்துக் கொண்டேன். ஒலகடத்தில் இருக்கும் போதே எனக்குப் பெண் மகவு பிறந்தது. 'கலைச்செல்வி' என்று பெயரிட்டுப் பேணி வளர்த்தோம்.

1962 வாக்கில் சேலம் மாவட்டத்துக் குமாரபாளையம் உயர் பள்ளிக்கு மாவட்ட மாறுதல் பெற்று வந்தேன். இந்தப் பள்ளியிலும் வள்ளுவம் நாடகம் நடத்தப் பெற்றது. பெரும் பாராட்டும் கிடைத்தது. குடும்பம் பெருகியது. பொருள் நெருக்கடியும் வந்தது. என்றாலும் கலங்கவில்லை. 'புதையம்பில் பட்டுப் பாடூன்றும் களிறு' என்ற குறள் என் நினைவில் நின்று காத்தது.

அடுத்த ஆண்டு வனவாசி உயர் பள்ளிக்கு மாறுதல் பெற்றுச் சென்றேன். இடையிடையே எம் தோட்டத்திற்குச் சென்று கவனித்து வந்தேன். இங்குப் புலவர் தேர்வெழுதி வெற்றி பெற்றேன். தமிழாசிரியருமானேன். நங்கவள்ளியில் ஊர்ப் பெருமக்களுக்கு குறள் வகுப்பு நடத்தி வந்தேன். பலர் விரும்பிக் குறள் கற்றனர். பள்ளியிலும் இலக்கிய விழாக்கள் பல நடத்தினேன்.

1965-ல் மேச்சேரிக்கு நான் பயின்ற பள்ளிக்கு மாறுதல் பெற்றுச் சென்றேன். அங்குத்தான் அச்சகம் தொடங்கினேன். 'தேனமுதம்' என்ற இலக்கிய திங்களிதழும் அங்குத்தான் தொடங்கப்பட்டது. படிக்கும் போது நான் நண்பர்களிடம் சொன்னவாறு ஒவ்வொன்றாகச் செயல் படுத்தினேன்.எளிய இனிய நறுந்தமிழில் 'தேன்தமிழ்த் துணைவன்' என்ற உரைநூலும் வெளியிட்டேன். இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக வளரும் போது சேலத்துக்குக் குடிபெயர்ந்தேன். சேலத்துக்கு அண்மையிலுள்ள சுக்கம்பட்டி உயர் பள்ளிக்கு மாறுதலும் பெற்றேன். அந்தப் பள்ளியிலும் பகல் இடைவேளையில் குறள் வகுப்பு நடத்தினேன்.

அதன் பின் பல பள்ளிகளுக்கு மாற்றப்பட்டேன். என் எண்ணம் மட்டும் மாறவில்லை. சேலத்தில் 'தேன்தமிழ்ப் பதிப்பகம்' தொடங்கி நூல்கள் பதிப்பித்தேன். இதுவரை நூற்றியெழுபது நூல்கள் வெளியிட்டுள்ளேன். நான் எழுதிய பதினைந்து .நூல்களும் அவற்றில் அடங்கும். உயர்ந்த இலக்கியங்கள், சிறந்த புதினங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பலதரத்து .நூல்களும் எம் பதிப்பகத்தில் வெளி வந்துள்ளன. தேன்தமிழ்த் துணைவனும் பெருகி வளர்ந்து மாணவர்களுக்கு நல்ல துணையாக விளங்குகிறது.

ஓய்வு பெற்று வீட்டில் அமைதியாக இருக்கும் இந்த நேரத்தில் நான் வளர்ந்தவகையை எண்ணிப் பார்க்கிறேன். என் தமிழாசிரியர் எனக்கு நினைவில் நிற்கும்படிச் சொன்ன 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப' என்ற குறள் என்னை வளர்த்திருக்கிறது. எணபதை எண்ணி மகிழ்கிறேன். பள்ளி நாட்களில் நான் கொண்ட உறுதிகள் ஒவ்வொன்றாகச் செயல்பட்டு வந்துள்ளன.

நல்ல அச்சகம் நிறுவினேன்.

பத்திரிகை தொடங்கி நடத்தி வருகிறேன்.

நூல்கள் பல எழுதியுள்ளேன்.

நல்ல காரும், மாடி வீடும் என்னிடம் உள்ளன. என் மகள் கலைச்செல்வி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறாள். என் முதல் மகன் அருள்மொழி புத்தகக் கடை நடத்தி வருகிறான். இளையவன் புத்தகக் கடை நடத்தி வருகிறான் கதிரவன் கணினி அச்சகமும் நடந்து வருகிறது..

இன்று நான் பெற்றுள்ள வள வாழ்வு குறள் கொடுத்த வாழ்வே என எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

என் தமிழாசிரியர் சு. பழனியாண்டி அவர்களை நினைத்து நினைத்து வணங்குகிறேன்.

முற்றும்.


No comments: