Monday, June 20, 2011

தயாநிதி - மடியில் கணத்தோடு பிரதமர்.



மத்திய அரசில் தற்போதுள்ள அமைச்சரவை, பெரியளவில் மாற்றங்களைச் சந்திக்கும் என, பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனாலும், எந்தவித மாற்றங்களையும் செய்யாமல், இருப்பதை வைத்தே சமாளித்துக் கொண்டிருந்தார். அதற்குக் காரணங்களும் இருந்தன.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. அந்த நேரத்தில் அமைச்சரவை யில் கை வைப்பது, மாநில அளவில் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக இருக்காது. அதைவிட, லோக்பால் மசோதாவிவகாரம் வேறு மிரட்டிக் கொண்டிருந்தது. இந்தக் காரணங்களால், அமைச்சரவை மாற்றங்களை ஒத்தி வைப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை பிரதமருக்கு.

இப்போது, மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. ஏராளமான ஓட்டைகளுடன் கூடிய அமைச்சரவையை வைத்துக்கொண்டு எந்த அரசும் புதிய கூட்டத்தொடர் ஒன்றுக்குள் நுழைவதை பிரதமர் நிச்சயம் விரும்ப மாட்டார்.

இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க முன்னதாக, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய, பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

நாடாளுமன்ற வட்டாரங்களில் இதுபற்றிப் பரவலாக அடிபடும் பேச்சு என்னவென்றால், ஜூலை 2ம் தேதி, மத்திய அமைச்சரவையில் பிரதமர் மாற்றங்களைச் செய்வார் என்பதே.

மத்திய அமைச்சரவை மாற்றம், தமிழக அளவில் என்ன மாற்றங்களைக் கொண்டுவரும்?

மத்திய அமைச்சரவையைப் பொறுத்தவரை, தமிழகத்திலிருந்து சென்றுள்ள 3 அமைச்சர்கள் பற்றிய புகார்கள்தான் பரவலாக அடிபட்டுக்கொண்டிருந்தன.

ஒருவர் ஆ.ராசா. ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை இஷ்டத்துக்கு ஒதுக்கீடு செய்தார் என்பதே புகார். அதே ஊழல் வழக்கில் அவர் சிக்கி, தற்போது திகார் சிறையில் இருக்கிறார். சிறையில், தென்னிந்திய உணவு ஒதுக்கீடு செய்தால் போதும் என்ற அளவோடு நிற்கின்றன, அவரது நடவடிக்கைகள்.

அடுத்தவர், மு.க. அழகிரி. சும்மா பெயருக்காக அமைச்சராக இருப்பவர். இவரது அமைச்சில் பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அமைச்சரையே காணமுடிவதில்லை என்பது குற்றச்சாட்டு.

மூன்றாவது நபர், தயாநிதி மாறன். இவர் செய்ததாகக் கூறப்படும் ‘வியாபாரம்-கம்-ஊழல்’ லீலைகள் பற்றிய குற்றச்சாட்டுகள்தான் இப்போது டில்லியில் பிரசித்தம். மடியில் கணத்தோடு, இவரை அமைச்சரவையில் வைத்திருக்கிறார் பிரதமர்.

மத்திய அமைச்சரவையில் தமிழக அளவில் உள்ள சிக்கல்கள். ஆ.ராசா விவகாரத்தை விட்டுவிட்டால், மற்றைய இருவரின் விவகாரங்களுக்கும் விடை தேடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பிரதமர்.

இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான புகாரில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதியின் பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராசா, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தபோது, அவர் கவனித்துவந்த தொலைத்தொடர்புத் துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப் படவில்லை. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல், ராசா வைத்திருந்த அமைச்சையும் கூடுதலாக கவனித்து வருகிறார். ஒரே அமைச்சருக்கு, இரு பெரிய துறைகள்.

அதேபோல், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழல் புகார் காரணமாக, மகாராஷ்டிரா முதல்வர் பதவி விலகியதால், மத்திய அமைச்சராக இருந்த பிரித்விராஜ் சவான், அங்கே அனுப்பப்பட்டு விட்டார். ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வராகிவிட்டார். இதனால், அவரது அமைச்சிலும் காலியிடம் உள்ளது.

மொத்தத்தில், பிரதமர் விரும்பியோ, விரும்பாமலோ, அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதுவும், பார்லிமென்டின் புதிய கூட்டத் தொடருக்கு முன்பாக!

இந்த நிலையிலேயே, அடுத்த மாதம் 2ம் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப் படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரவை செயலக அதிகாரிகள், இதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டதாலேயே இந்தக் கதை வெளியாகியிருக்கிறது.

அமைச்சரவை செயலக அதிகாரிகள், ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இதுபற்றி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இவர்கள் கூறும் தேதிக்கு, இன்னமும் இரண்டு வாரங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் ஏதாவது அரசியல் மாற்றங்கள் வரலாம். தயாநிதி மாறன் சி.பி.ஐ.யால் விசாரிக்கப் படலாம்.

அடுத்த மாதம் 2ம் தேதி, அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் செய்தால்,

அமைச்சரவையில் காலியிடங்களுக்கு, புதிதாக ஆட்களை சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

ஏற்கனவே அமைச்சரவையில் இருக்கும் ஆளைக் கழட்டிவிட வேண்டுமென்றால், அது நம்ம தயாநிதியாகத்தான் இருக்கும்!

4 மாணவர்கள் தற்கொலை -ஆசிரியர் கைது : அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்

4 மாணவர்கள் தற்கொலை: அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைவிடுமுறை கூடுதலாக 15 நாட்கள் விடப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து இன்னும் ஒருவார காலம் நிறைவடைவதற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவி, ஒரு மாணவர் என 2 பேரும், சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்ற மாணவர், பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது கல்வி அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. பெற்றோர் மத்தியில் இந்த சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இவர்களில் பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் சாவுக்கு காரணம் ஆசிரியர்கள் தான் எனபதை அறிந்த உறவினர்கள், நேற்று சேலம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் செய்தனர்.

பின்னர், மல்லூர் காவல் நிலையத்தில் சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டது சம்பந்தமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இன்று துறை ரீதியான விசாரணையை துவக்கியுள்ளர்கள்.

இன்று 20-6-2011 திங்களன்று கணக்கு ஆசிரியர் செந்திலை போலீசார் கைது செய்துள்ளனர். எஞ்சியுள்ள நான்கு ஆசிரியர்களும் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.


இனி எந்தப் பெயரிலும் இணையத்தளம் !



.காம் (டாட் காம்) என்பதக்குப் பதில் .கோக், .இன்டியா, .மாருதி என இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இன்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் இணையத்தில் அடுத்தகட்டமாக பெயர் புரட்சி ஏற்படவுள்ளது.

இன்டர்நெட் உருவாகி 26 ஆண்டுகளில் அமலாக்கப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும்.

இப்போது உலகின் பெரும்பாலான இணையத்தளங்கள் .com, .net, .org ஆகிய துணை வார்த்தைகளுடன் தான் முடிகின்றன. இனிமேல் எந்த வார்த்தையையும் துணைப் பெயராக வைத்துக் கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, போர்ட் கார் நிறுவனம் தனது பியஸ்டா கார் குறித்த இணையத்தளத்தின் பெயரை டாட் போர்ட் (.ford) என்ற துணைப் பெயருடன் வைத்துக் கொள்ளலாம்.

இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஏற்படும் என்றாலும், குழப்பத்துக்கும் பஞ்சமிருக்காது. .காம் என்ற சிம்பிளான பெயரில் தங்களது இணையத்தளம், துணைத் தளங்களை எல்லாம் எளிதாக பதிவு செய்த நிறுவனங்கள் இனிமேல் தங்களது நிறுவனத்தின் பெயரில் ஏராளமான டொமைன்களை பதிவு செய்ய வேண்டிய நிலை வரலாம். இதற்கான செலவும் அதிகமாகும்.

அதே போல நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து, டொமைனை பிளாக் செய்து வைத்துக் கொண்டு, அதை மூச்சு முட்டும் விலைக்கு விற்க முயலும் ஆசாமிகளிடம் நிறுவனங்கள் சிக்கித் தவிப்பதும் அதிகரிக்கும்.

சமச்சீர் கல்வியை அரசியல் ரீதியாக அணுகுவது வருந்தத்தக்கது : தமிழருவி மணியன்.



சமச்சீர் கல்வியை அரசியல் ரீதியாக அணுகுவது வருந்தத்தக்கது என்று, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.

காந்திய மக்கள் இயக்கம், கோவை மாவட்ட கிளை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 19.06.2011 அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதன் நிறுவனர் தமிழருவி மணியன்,

சமச்சீர் கல்வியைப் பொருத்த வரையில் சொந்தப் பகையை வைத்து, மக்கள் நலனைப் புறக்கணிப்பது தவறான அரசியலாகும். கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களில் உருப்படியான ஒன்று, சமச்சீர் கல்வித் திட்டம். சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை, சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்துகிற நிலையிலேயே தவிர்க்க முடியும். இதுவே அறிவுபூர்வமான அணுகுமுறையாகும். கல்வியாளர் குழு மூலமாகவே இதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.

திமுக ஆட்சி கொண்டுவந்த திட்டம் என்று இதை தவிர்ப்பது சரியானதல்ல. சமச்சீர் கல்வியைப் பொருத்த வரை, கௌரவப் பிரச்னையாகக் கருதாமல் 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் வரும் ஆண்டில் தவிர்க்கலாம். தற்போதைய அரசின் முடிவு மாணவர் நலனுக்கு எதிரான செயலாகும். இந்த அரசுக்கு மாணவர் நலனில் அக்கறை உள்ளதா?

சமச்சீர் பாடத்திட்டத்தை ஆராய அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள தனியார் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், சமச்சீர் கல்விக்கு எதிரானவர்கள். இவர்கள் எப்படி சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்துவார்கள்? சமச்சீர் கல்வியை அரசியல் ரீதியாக அணுகுவது வருந்தத்தக்கது.

முத்துக்குமரன் குழுவின் நூற்றுக்கு மேற்பட்ட பரிந்துரைகளில் ஒருசில மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள பரிந்துரைகளை, முறையாக பரிசீலித்து செயல்படுத்தி இருக்க வேண்டும். கடந்த ஒருமாத காலமாக மிகச்சரியாக சிறந்த நிர்வாகம் நடைபெற்றுவரும் நிலையில், அரசு இடறி விழுந்த ஒரேஇடம் சமச்சீர் கல்விதான். இந்த ஆண்டிலேயே சமச்சீர் கல்வி திட்டத்தைத் தொடர வேண்டும். என்றார்.

சீன பெண்ணை கரம் பிடித்த ஆத்தூர் என்ஜினீயர் : இந்து முறைப்படி இன்று திருமணம்.

சீன பெண்ணை கரம் பிடித்த ஆத்தூர் என்ஜினீயர்:இந்து முறைப்படி இன்று திருமணம்

சீனப் பெண்ணை காதலித்து மணந்த ஆத்தூர் என்ஜினீயர் ருசிகர பேட்டி அளித்து உள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன் பாளையம் ஆரியூர் தெருவை சேர்ந்த நடராஜன்-சரோஜா தம்பதிகளின் மகன் செந்தில் ராஜா பி. இ. இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்துள்ள இவர் சீனா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றினார்.

அப்போது இவருக்கும் அதே கம்பெனியில் பணியாற்றி வரும் அத்பில் என்ற ஹிஷேங்கிபிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் இவர்களது திருமணம் இன்று காலை சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது.

சீனப் பெண் அத்பில் சேலை கட்டி இருந்தார். பூவும், பொட்டும் வைத்து அசல் தமிழ் பெண் போல காட்சி அளித்தார். அவருக்கு மணமகன் செந்தில்ராஜா தாலி கட்டினார். சீனப் பெண்ணை காதலித்து மணந்தது குறித்து என்ஜினீயர் செந்தில்ராஜா நிருபரிடம் கூறியதாவது:-

நான் கடந்த 4 ஆண்டுகளாக சீனா நாட்டில் குவாங்ஷோ பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறேன். நான் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் அத்பில் பணியாற்றி வந்தார். அவர் அக்கவுண்டன்சி பட்டம் பெற்று உள்ளார். நானும் அவரும் வேலை விஷயமாக சந்திக்கும் போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது.

சீன மொழி புரியாவிட்டாலும், நானும் ,அவரும் ஆங்கிலத்தில் பேசி வருவோம். அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். நானும் அவரது வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வேன் அவரது பெற்றோருக்கு என்னை பிடித்து விட்டது. அவர்கள் நன்றாக பார்த்து கொண்டனர்.

பின்னர் எங்களது காதலுக்கு எனது பெற்றோரும், சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் சீனாவில் பதிவு திருமணம் செய்து கொண்டோம். சீன அரசும், அங்குள்ள இந்திய தூதரகமும் எங்களது திருமணத்தை அங்கீகரித்தன.

நாங்கள் பின்னர் இங்கு வந்து இன்று எங்களது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். கடந்த வாரம் எனது அண்ணன் திருமணம் நடந்தது.அதற்காக நானும், அத்பில்லும் வந்து இருந்தோம். எங்களது திருமணம் முடிந்து விட்டதால் இன்னும் ஒரு வாரத்தில் நாங்கள் சீனா சென்று அவரது பெற்றோரிடம் வாழ்த்து பெறுவோம். பின்னர் அங்கேயே குடும்பம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணத்திற்கு வந்து இருந்த உறவினர்களை செந்தில் ராஜா மணப்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் உறவினர்களை பார்த்து நன்றி என்று ஆங்கிலத்தில் தெரிவித்தார். நாடு, இனம், மொழி கடந்து வளர்ந்த இந்த காதல் தம்பதிகளை உறவினர்கள் மட்டுமல்ல நண்பர்கள், ஆத்தூர் பொதுமக்கள் உள்பட பலர் வாழ்த்தினார்கள்.

இந்தியாவில் விரைவில் “புல்லட்” ரெயில் அறிமுகம் : மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

இந்தியாவில் விரைவில் “புல்லட்” ரெயில் அறிமுகம்: மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்

பிரான்ஸ் நாட்டில் உள்ளது போன்று புல்லட் ரெயில் எனப்படும் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்க இந்திய ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த ரெயில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

பிரான்ஸ் நாட்டில் புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு மணிக்கு 280 முதல் 300 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவிலும் புல்லட் ரெயில் சேவையை தொடங்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு தேசிய அதிவிரைவு ரெயில்வே ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. அதிவிரைவு ரெயில் சேவையை இந்த ஆணையம் கண்காணிக்கும்.

புல்லட் ரெயில்களை இயக்க சில வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த வழித்தடங்களில் புல்லட் ரெயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து ஆலோசனை வழங்க உலகளாவிய காண்டிராக்ட் விடப்பட இருக்கின்றன.

இதுபற்றி ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், புல்லட் ரெயில் திட்டங்களின் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யவும், உலகளாவிய காண்டிராக்ட் விடப்பட இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

பிரான்ஸ் நாட்டில் இயக்கப்படும் புல்லட் ரெயில் திட்டத்துக்கு “டி.ஜி.வி.” என்று வெளியிடப்பட்டுள்ளது. அதுபோல இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ள புல்லட் ரெயில் திட்டத்துக்கு “டி.ஜி.எஸ்.” என்று பெயரிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கான பெயர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

புல்லட் ரெயிலை மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 600 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் சென்று அடையும் வகையில் புல்லட் ரெயிலின் வேகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புல்லட் ரெயில் திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும். புதிய நகரங்களை உருவாக்க வாய்ப்பு ஏற்படும். இதனால் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வது பெருமளவில் குறையும் என்றும் நம்பப்படுகிறது.

2ஜி வழக்கு : கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

2ஜி வழக்கு: கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இருக்கும் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கடந்த மே மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ளனர்.

அவர்களது ஜாமீன் மனுக்கள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் உள்ளது. அவர் கலைஞர் டி.வி.யில் முக்கிய பங்குதாரராக செயல்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் பின்னணி உள்ளதால் ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதையடுத்து கனிமொழியும், சரத்குமாரும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். கடந்த 10-ந் தேதி இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. 13-ந் தேதி ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி இதற்கு ஒருவாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார்.

மேலும் ஆ.ராசா பதவி காலத்தில் 13 டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட இழப்பீடு குறித்தும், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு கைமாறிய ரூ.200 கோடி என்ன ஆனது? என்ற விவரத்தை கோர்ட்டுக்கு தெரிவிக்குமாறும் சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து 20-ந் தேதிக்கு வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது அப்பொழுது நீதிபதிகள் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.