Tuesday, July 5, 2011

தற்போதைய பாடத்திட்டம் லாயக்கற்றது : சமச்சீர் கல்வி கமிட்டி



சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்த கமிட்டி தன் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், தற்போது இருக்கும் பாடத்திட்டங்கள், நடப்பு வருடத்துக்கு பயன்படத்தக்க வகையில் இல்லை என்றும், பாடத்திட்டங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வி குறித்த வழக்கை 7ம் தேதிமுதல் தினமும் விசாரிக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு ஜூன் 17-ம் தேதி நியமித்தது.

அந்தக் குழுவினர் இதுவரை 4 முறை கூடி சமச்சீர் கல்வி முறையை ஆய்வு செய்தனர். அந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை தொடர்பாக உயர்நீதிமன்றம் 7-ம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடத்த உள்ளது. 1, 6 வகுப்புகள் தவிர மீதமுள்ள 8 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை இந்த ஆண்டில் அமல் ஆகுமா என்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.

இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே ஏறத்தாழ ஒரு கோடி மாணவர்களுக்கு எந்தப் பாடப்புத்தகங்கள் என்பது தீர்மானிக்கப்படும். சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் ஏற்கெனவே தயாராக உள்ள நிலையில், பழையப் பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அச்சிடும் பணியும் இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பத்தாம் வகுப்பு புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி புத்தகங்கள் அச்சிடப்படுவதாகவும், இதுவரை ஏறத்தாழ 20 சதவீதத்துக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு முடியும் வரை 1, 6 வகுப்புகளுக்கு எந்தவித பாடத்திட்டத்தின் கீழும் பாடங்களை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, மாணவர்களை மையப்படுத்திய புதிய பயிற்றுவித்தல் முறையில் அறிவியல், கணிதப் பாடங்களில் அடிப்படைகள் கற்றுத்தரப்படுகின்றன. ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிப்பாடங்களில் இலக்கண வகுப்புகளும் இப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட இருந்தது. ஆனால், இந்தப் பாடப்புத்தகங்கள், கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்று கூறி, இந்த ஆண்டு பழையப் பாடத்திட்டத்தையே பின்பற்ற தமிழக அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பாக, சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தத்தையும் அரசு கொண்டு வந்தது.

ஆனால், இந்தத் திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆராய தலைமைச் செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், 1,6 வகுப்புகளைத் தவிர பிற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையை அமலாக்குவது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

1,6 வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறையையே இந்த ஆண்டு தொடர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments: