திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சுகுமாறன் (வயது 40). குடிப்பழக்கம் உடையவர். நேற்று அளவுக்கு அதிகமாக மது பானம் அருந்திவிட்டு போதையில் ரோட்டோரத்தில் மயங்கி கிடந்தார்.
அப்போது எழுப்ப சென்ற சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உலகநாதனின் சட்டையை பிடித்து கொண்டு முகத்தில் கும்மாங்குத்து விட்டார். அடி தாங்க முடியாத அவர், சுகுமாறனின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் விரட்டி, விரட்டி உலகநாதனை, சுகுமாறன் தாக்கினார்.
இந்த கண்றாவி பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே, இவர்கள் சண்டையை தனிப்பிரிவு ஏட்டு ஜோசப் தடுத்து ஸ்டேஷனுக்கு அழைத்துவந்தார். மேலும் பொது இடத்தில் ஏட்டு, எஸ்.ஐ., மோதல் சம்பவம் குறித்து டி.ஐ.ஜி., சஞ்சய்மாத்தூர், சந்திரசேகரன் எஸ்.பி., ஆகியோர் விசாரணை நடத்தினர்.
போதையில் இருந்த ஏட்டுவிடம் அடிவாங்கிய எஸ்.ஐ., உலகநாதன், தனிப்பிரிவு ஏட்டு ஜோசப் மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்தனர்.
இந்நிலையில், ஏட்டு சுகுமாறன் மனைவி ராஜேஸ்வரி(36) தினமும் குடித்து விட்டு வந்து தன்னையும், தனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துவதாக திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஏட்டு சுகுமாறன் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் ஜே.எம்.-2 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு வீட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதைதொடர்ந்து குடிபோதையில் சப்- இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த ஏட்டு சுகுமாறனை சஸ்பெண்ட் செய்து சந்திரசேகரன் எஸ்.பி., உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment