தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. 2 வருடத்துக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சில மாதங்களாகவே ரேவதி மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரேவதிக்கு கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று இரவு அவர் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கணவர், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் 2 பேர் இருந்தனர். நள்ளிரவு 11 மணியளவில் மாமியார் ராணி எழுந்து பார்த்தபோது ரேவதியின் அருகில் குழந்தை இல்லாததை கண்டு திடுக்கிட்டு சத்தம் போட்டார்.
இதையடுத்து அனைவரும் குழந்தையை தேடினர். அப்போது வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் பீப்பாயில் குழந்தை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பீர்க்கன் காரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தையின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
வீடு பூட்டியிருந்தது குழந்தையை காணாமல் அனைவரும் தேடியபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. குழந்தை இறந்து கிடந்த பீப்பாய் வெளியில் இருந்ததால் உள்ளே இருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் குழந்தையை கொன்று பீப்பாயில் வைத்து விட்டு வீட்டிருந்து சென்று உள் பக்கமாக பூட்டி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இதையடுத்து வீட்டில் இருந்த 6 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட ரேவதிக்கு இரவில் நடந்து செல்லும் பழக்கம் இருந்தது தெரிந்தது. அவர் குழந்தையை கொன்று தண்ணீர் பீப்பாயில் அடைத்து வைத்திருந்ததை ஒப்புக் கொண்டார். எதற்காக இப்படி செய்தார் என்று கூற தெரியவில்லை.
குழந்தை இறந்தது பற்றி அவர் கவலையடைந்தவர் போல் இல்லை. முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.கடந்த ஆண்டு ரேவதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் ஒரு மாதத்திற்கு பின்னர் திடீரென இறந்து விட்டது.
உடல்நிலை சரியில்லாமல் குழந்தை இறந்து போனதாக அப்போது கூறப்பட்டது. அந்த குழந்தையையும் ரேவதி கொலை செய்திருக்கலாம் என்று இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. பெற்ற குழந்தையை தாயே கொன்றது குடும்பத்தினரை சோகத்தில் மூழ்க செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment