Wednesday, June 29, 2011

அழிந்து வரும் குருவி இனங்களை காக்க இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை.



கடையநல்லூர், அழிந்து வரும் குருவி இனங்களை காக்க கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உலக அளவில் ஏராளமான காடுகள் அழிக்கப்படுவது, அதிக அளவில் ரசாயனம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது, தட்பவெட்ப நிலை மாறுவது உள்பட பல்வேறு காரணங்களால் ஏராளமான பறவை இனங்கள் அழிந்து வருகின்றன.

உலக அளவில் சுமார் ஆயிரத்து 226 பறவை இனங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் 88 ரக பறவைகள் வேகமாக அழிந்து வருவதாக பறவைகளின் பாதுகாப்புக்காக இயங்கி வரும் உலக அளவிலான அமைப்பு கூறுகிறது.

உலக அளவில் அதிக அளவு பறவை இனங்கள் அழிந்து வரும் நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பிரேசில் உள்ளது. இந்த நாட்டில் 141 பறவை இனங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. 7-வது இடத்தில் உள்ள இந்தியாவில் 88 பறவை இனங்கள் அழிந்து வருகிறது.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தற்போது ஏரளமான செல்போன் டவர்கள் அமைக்கப்படுவதால் தான் நாம் அன்றாடம் காணும் குருவி இனம் அழிந்து வருவதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வீடுகளில் சர்வ சாதாரணமாக பறந்து தொந்தரவு கொடுக்கும் குருவிகளை தற்போது பார்ப்பதே அரிதாக உள்ளது.

குருவி இனத்தை பார்க்காமலேயே வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர்கள் குருவிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் விரும்புகின்றனர். கடையநல்லூரைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தான் சந்திக்கும் மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் குருவி வளர்ப்புக்கு அட்டை பெட்டி வழங்கி வீடுகளில் வைத்து குருவிகளை வளர்க்க ஊக்கப்படுத்துகிறார்.

அட்டைப் பெட்டிகளில் குருவி சென்று வர ஓட்டை அமைத்து உள்ளே உமி மற்றும் வைக்கோல் வைத்து அடைக்கப்பட்டுள்ள இந்த கூடு தற்போது கடையநல்லூர் பகுதியில் பிரபலமாகி வருகிறது. எனவே, வருங்கால சந்நதியினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் குருவி உள்பட அழிந்து வரும் அனைத்து பறவைகளையும் பாதுகாப்பது மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

No comments: