Thursday, March 24, 2011

63 தொகுதிகளிலும் காங்கிரஸை வீழ்த்துவதுதான் லட்சியம்! - சீமான்


காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, அந்தக் கட்சியை தமிழ்நாட்டில் இல்லாதொழிப்பது மட்டுமே நாம் தமிழர் கட்சியின் இப்போதைய நிலைப்பாடு என சீமான் அறிவித்துள்ளார்.

தமிழ் ஈழ தீவிர ஆதரவாளரான வைகோ அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார். அப்படியெனில் அவரால் அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரப்பட்ட மற்றொரு ஈழ ஆதரவாளரான நாம் தமிழர் கட்சி சீமானின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.

வைகோ - அதிமுக உறவு முறிவுக்குப் பிறகு பலர் மனதிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு கடந்த ஒரு வார காலமாக பதிலே இல்லை. தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கையாகத் தந்து கொண்டிருந்த சீமானும், திடீரென அமைதியாகிவிட்டார்.

இந்தத் தேர்தலில் அவர் தனித்துப் போட்டியிடுவார் என்று நேற்று இரவு கூறப்பட்டது. இவை அனைத்தும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு கூடிய நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை, இந்தத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவதை மட்டும் பிரதானமாகக் கொள்வோம் என முடிவெடுத்தது. அதன்படி, தேர்தலில் போட்டியிடாமல், காங்கிரஸை எதிர்த்து நிற்கும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு பிரச்சாரம் மேற்கொள்வோம் என திடீரென முடிவு செய்து, அதனை இன்று காலை அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட இன்று காலை 11 மணிக்கு பத்திரிகையாளர்களை சென்னை பிரஸ் கிளப்பில் சந்தித்தார் இயக்குநர் சீமான்.

அவர் கூறுகையில், " இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி நேரடியாகப் போட்டியிடுவதில்லை என்று இப்போது முடிவு செய்துள்ளோம். காரணம், நாங்கள் தனியாக நிற்பதால் பெரும் வாக்குகள் திமுக அணியில் உள்ள காங்கிரஸுக்கு சாதகமாகப் போய்விடும் ஆபத்துள்ளது.

தனிப் பெரும் சக்தியாக காங்கிரஸை வீழ்த்த முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். எனவே, காங்கிரஸை எதிர்த்துக் களம் காணும் எதிர் அணி வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில், எதிர்ப்பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கிறோம்.

நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை நேற்று எடுத்துள்ள முடிவு இது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, எங்களுக்கு இரட்டை இலை, முரசு, கதிர், சுத்தியல் அரிவாள் போன்ற சின்னம் முக்கியமல்ல. காங்கிரஸை அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணமே முக்கியம்.

ஈழத் தமிழர்களைக் கொன்றழித்த கட்சி காங்கிரஸ். தமிழக மீனவர்கள் படுகொலையை வேடிக்கைப் பார்க்கும் கட்சி காங்கிரஸ். தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்த கட்சி காங்கிரஸ். காவிரித்தண்ணீருக்கும், முல்லைப் பெரியாறு தண்ணீருக்கும் தமிழனை கையேந்த வைத்த கட்சி காங்கிரஸ்.

எனவே அந்தக் கட்சியே தமிழகத்தில் இனி இருக்கக் கூடாது. இனி வரும் தேர்தல்களில் எந்த திராவிட கட்சியும் காங்கிரஸுடன் கூட்டு வைத்துக் கொள்ளவும் கூடாது. அப்படி ஒரு நிலை உருவாகத்தான் இந்தத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்கும் முடிவை எடுத்துள்ளோம்.

காங்கிரஸை தோற்கடிக்க நீங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரம் அதிமுகவை ஜெயிக்க வைக்குமே?

அதுபற்றி எனக்கு கவலையில்லை. இப்போதைய நோக்கம், நமது இன எதிரி காங்கிரஸ் ஒழிய வேண்டும். அதன் பலன் யாருக்குப் போகிறது என்பது முக்கியமல்ல. பதவிக்கு வந்த பின் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்தால், அப்போது அவரையும் எதிர்ப்போம். போராட்டங்களை நடத்துவோம்.

ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் நிலைப்பாட்டை ஒருபோதும் நாம் தமிழர் ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த தேர்தல் எங்களுக்கு ஒரு கெட்டவாய்ப்பு. வேறு வழியில்லை. எனக்கு முன் நான்கைந்து எதிரிகள் இருந்தாலும், யார் மோசமான எதிரியோ அவரைத்தான் முதலில் வீழ்த்த வேண்டியுள்ளது.

வைகோவையும் துணைக்கு அழைப்பீர்களா?

இந்தத் தேர்தலில் அண்ணன் வைகோ மற்றும் அவரது கட்சி மேற்கொண்டுள்ள முடிவு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். அவர் சிறந்த அறிவாளி. தெளிந்த அரசியல் தலைவர். எனவே பல விஷயங்களையும் யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருப்பார்.

ஆனால் அவரை அதிமுக நடத்திய விதம், கூட்டணியிலிருந்து அவர் வெளியேறும் அளவுக்கு நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் கட்சியினருக்கும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழுணர்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனதை ரணமாக்கிவிட்டது.

அருமை அண்ணன் வைகோ, எனது நிலைப்பாட்டை நிச்சயம் வாழ்த்துவார் என்று நம்புகிறேன்.

"தமிழர்களைக் கொன்றழித்த காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடியுங்கள்" என்பதே இந்தத் தேர்தலில் எனது ஒரே பிரச்சாரம்.

உங்கள் பிரச்சாரம் எந்த அளவுக்கு காங்கிரஸை வீழ்த்த உதவும்?

அது எந்த அளவுக்கு பாதிப்பை முன்பு ஏற்படுத்தியது என்பதை காங்கிரஸ்காரர்களிடம் கேட்டுப் பாருங்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் தோற்கடித்துவிட்டு, மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பேன்.

ஈழப் பிரச்சினை பற்றி மட்டும்தான் பிரச்சாரம் செய்வீர்களா.... இங்குள்ள தமிழர்களுக்கு என்ன செய்வதாக திட்டமிட்டுள்ளீர்கள்?

இந்தத் தேர்தலில் ஈழத் தமிழினத்துக்கு இந்த காங்கிரஸ் இழைத்த அநீதி மற்றும் இங்குள்ள தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்து வருவது குறித்தெல்லாம் பிரச்சாரத்தில் சொல்லப் போகிறேன்.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரவேசம் என்பது இனி வரும் இடைத்தேர்தல் ஏதாவதொன்றிலிருந்து தொடங்கும். 2016-ல் முழுவீச்சில் இருக்கும். அப்போது தமிழக மக்களுக்கு நாம் தமிழர் செய்யப் போகும் நல்ல விஷயங்கள், திட்டங்கள் பற்றியெல்லாம் விரிவாக எடுத்து வைப்பேன்.

திமுகவின் தேர்தல் அறிக்கைகள் குறித்து...

தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக்குவதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. சாப்பாடு, வீடு, துணி, கட்டிக்க பொண்டாட்டி என எல்லாமே இலவசம்... எல்லாமே பிச்சையாகக் கிடைக்கிறது தமிழனுக்கு.

இதுவா தொலைநோக்குப் பார்வை? இலவசங்கள் என்று ஒழிகின்றனவோ அன்றுதான் நாடு உருப்படும். கல்வி, வேலைவாய்ப்பை முறையாகத் தாருங்கள். நாடு மற்ற வசதிகளை தானாகவே பெற்றுக் கொள்ளும்.

ஒரு பக்கம் நாட்டின் கடன் ஏறிக் கொண்டே போகிறது. இவர்கள் இலவசங்களை அடுக்கிக் கொண்டு போகிறார்கள். கடன் வாங்கி இலவசங்களைத் தருவது ஒரு பிழைப்பா?", என்றார் ஆவேசமாக

No comments: