தனது வீட்டை சோதனையிட்டபோது எடுத்த வீடியோவை ஜெயா டிவிக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்தின் மீது திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
நான் விதிமுறையை மீறி மக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்குவதாகக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேர்தல் ஆணைய அதிகாரிகள் என் வீட்டில் சோதனை நடத்தினர். அதை வீடியோ படமும் எடுத்தனர்.
இந்த சோதனை முடிந்த சில மணி நேரத்திலேயே அந்த வீடியோ படம் ஜெயா டிவியில் வெளியானது. என் நற்பெயரை கெடுக்கவே இவ்வாறு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் எடுத்த வீடியோ படம் ஜெயா டிவிக்கு எப்படி சென்றது என்று ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.
அதிகாரபூர்வமற்ற இந்த சோதனை, அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளை மீறியதாகும். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் நஷ்டஈடாக எனக்கு ரூ.5 கோடி தருவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
எனது தந்தை என் வீட்டிற்கு எதிரே ஒரு நலச்சங்கத்தை நடத்தி வருகிறார். அந்த கட்டிடத்தின் முகப்பு பலகையில் முதல்வர், துணை முதல்வர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. சோதனை நடத்திய பறக்கும் படையினர் அந்த படங்களை மூட உத்தரவிட்டனர்.
உரிய அனுமதி இல்லாமல் சோதனை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. எனது பிரசாரம் மற்றும் தேர்தல் நடவடிக்கையில் தலையிடக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். எனது வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment