Thursday, February 3, 2011

மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.அப்துல்கலாமின் பதில்கள். (பகுதி -1)


1.இந்தியாவை சிகரத்தின் உச்சிக்கு கொண்டு செல்ல இளைய சமுதாயத்துக்கு தங்களுடைய அறிவுரை என்ன?
ஆர்.சரண்யா, சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

டாக்டர் அப்துல் கலாம் : நாம் கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையின் படி, எதிர்வரும் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக கீழ்க்கண்ட 5-விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவை.

1. பெண் கல்வி மற்றும் உடல்நலம்

2. விவசாயம் மற்றும் உணவு பதனிடல்
3.தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பம்
4.உள்கட்டமைப்பு வளர்ச்சி
5.முக்கிய தொழில்நுட்பங்களில் சுயசார்பு ஆகியன.

இவ்விஷயங்களை மனதில் கொண்டு இளைஞர்கள் தங்கள் படிப்பில் மிகச்சிறந்து விளங்குவதன் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக்க உதவலாம். நீங்கள் ஒவ்வொருவரும், வாரவிடுமுறை நாட்களில் உங்களை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு சென்று அங்கு 5 பேருக்கு படிக்க எழுத உதவலாம். உங்கள் வீட்டை சுற்றியும் பள்ளியை சுற்றியும் ஐந்து மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்கலாம். எதை செய்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும். இதன் மூலம் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறுவதற்கு நீங்கள் உதவுகிறீர்கள்.

2.பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப் பலரும் கண்டிப்புடன் கடைபிடிப்பதில்லை. ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக நடந்து கொள்ள உங்கள் ஆலோசனையைக் கூறுங்களேன்?
பசுவலிங்கப்பா, கோகுலம் காலனி, கோவை-41

டாக்டர் அப்துல் கலாம் : புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடானது என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். நல்ல உடல்நலம் நல்ல மனநலம் ஆகியனதான் நல்ல வாழ்க்கைக்கான, நல்ல குடும்பத்துக்கான, நல்ல நாட்டுக்கான அடித்தளம். முடிவு எடுக்க வேண்டியது தனிநபர்கள்தான். ஆனால் அது அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நாட்டுக்கும் நல்லதாக இருக்க வேண்டும்.

3.இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதில் தகவல் தொழில்நுட்பம் என்ன பங்கு வகிக்கும்?
வி.கண்ணன், வி.எச்.என்.எஸ்.என்., கல்லூரி, விருதுநகர்.

டாக்டர் அப்துல் கலாம் :
சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்க முடியும். குறிப்பாக கிராமப்புற வளர்ச்சியிலும் அதிக பங்கு வகிக்க முடியும். தொலை தொடர்பு கல்வி, மின்னணு நிர்வாகம், தொலை மருத்துவம், மின்னணு நுõலக வசதி மற்றும் அறிவு மையங்கள் ஆகியவற்றை அமைக்க அவை உதவும். இது அறிவு மற்றும் திறன் அளிக்கும். மக்களிடம் விழிப்புணர்வு, கல்வி, சுகாதாரம் மற்றும் மின்னணு நிர்வாக சேவையை மக்களுக்கு அளித்து அவர்களை சக்தி மிக்கவர்களாக்கி தரமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது. பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயம், சேவை மற்றும் உற்பத்தி துறைகளின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. தொழில் சிறப்பாக நடத்துவதற்கான களம்தான் தகவல் தொழில்நுட்பத்துறை.

4.இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கிறார். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகுமா?
வனிதா, அசோக்நகர், சென்னை, திவ்யா, ஸ்ரீ அகோபில மட ஓரியண்டல் பள்ளி, சென்னை. முகில் வண்ணன், காருண்யா பல்கலை. கோவை. மோகன் சிவானந்தம், புதுச்சேரி பல்கலை. சண்முக சுந்தரம், திருவள்ளுவர் நகர், ராஜபாளையம்.

டாக்டர் அப்துல் கலாம் : கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழே வசிக்கும் 22 கோடி மக்களை கைதுவக்கி விடவும் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமே நம் நாட்டின் முன் உள்ள சவால். அடுத்த பத்தாண்டுகளுக்கு நம் கடின உழைப்பால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 10 சதவீதமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கல்வி, சுகாதார சேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தில் மதிப்பு கூடுதல் சேவை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இப்போதுள்ள தனிநபர் சராசரி வருமானத்தை மும்மடங்காக உயர்த்த வேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான தொடக்கக் கல்வி அளிக்க வேண்டும். பல்கலைக்கழக அளவில் ஆராய்ச்சியை உள்ளடக்கிய உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அடுத்த 12 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு தலைவர்கள் செயல்பட வேண்டும்.
இதுபோன்று உழைத்தால் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு ஆகும். அதுவரை நம்வீட்டையும், தெருவையும், கிராமத்தையும், நகர்ப்புறத்தையும், மாநிலத்தையும் மற்றும் தேசத்தையும் நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலிருந்துதான் சுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும்.

5.வாழ்க்கையின் லட்சியங்களை நிறைவேற்றுவது எப்படி... இலக்குகளை அடைவதில் சில நேரங்களில் தடைகள் ஏற்படுகின்றன. இவற்றை கடந்து சாதிப்பது எப்படி?
செந்தில்குமார், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. பிரீத்தா, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி , மதுரை. புருஷோத்தமன், பாங்காக், தாய்லாந்து
ஐஸ்வர்யா, டி.ஏ.வி. பள்ளி, சென்னை.சுப்பையா, லீடர்ஸ் மெட்ரிக் பள்ளி, காரைக்குடி. ஐஸ்வர்யா, ஸ்ரீசாய் மெட்ரிக் பள்ளி, சென்னை. சுரேஷ்கிருஷ்ணா, ஐ.சி.எஸ்.ஐ. இன்ஸ்டிடியூட், சிவகாசி.

டாக்டர் அப்துல் கலாம் : கீழ்கண்ட நான்கு விஷயங்களை நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
1. உங்கள் வாழ்க்கையின் தெளிவான லட்சியத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.
2. அது தொடர்பான உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
3.அதை அடைவதற்காக மிகக் கடினமாக உழையுங்கள்.
4. விடாமுயற்சி அவசியம். பிரச்னை உங்களை தோற்கடிக்கக்கூடாது. நீங்கள்தான் பிரச்னைகளை வெல்ல வேண்டும். நீங்கள் இந்த விஷயங்களில் மிகத் தெளிவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் லட்சியத்தை அடைவதிலிருந்து யாரும் தடுக்க முடியாது. நீங்கள் கண்டிப்பாக லட்சிய சிகரத்தை தொடுவீர்கள். எந்த பணியானாலும் அதை மிகச்சிறப்பாக செய்து முடியுங்கள். அதன் மூலம் நீங்கள் தேச வளர்ச்சிக்கு பாடுபடுகிறீர்கள்.

6.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த விதத்தில் பயன்படும்?
சவும்யா, கேந்திரிய வித்யாலயா, அசோக்நகர், சென்னை. பாலாஜி கவுலா, மதுரை காமராஜ் பல்கலை., மதுரை. மன்னர் மன்னன், அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்கால். காசிநாதன், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுவரி, சிவகாசி.நெல்சன், பயனியர் கலை அறிவியல் கல்லுவரி, கோவை.ராம்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி

டாக்டர் அப்துல் கலாம் : யுரேனியம் அணு உலைகள் மூலமாக நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் அவசியமானது. தற்போது யுரேனிய அணு உலைகள் 55 சதவீத திறனையே வெளிப்படுத்துகின்றன.

உயர்திறன் கொண்ட அணு உலைகளுக்குத் தேவையான தோரியம் எரிபொருளுக்கு வெளிநாடுகளை சாராமல் நம் ஆராய்ச்சியின் வழியாக சொந்தக் காலில் நிற்கும் நிலை வரும் வரையில் யுரேனியம் நமக்குத் தேவைப்படும்.

2030ம் ஆண்டுக்குள் எரிசக்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதே நம் லட்சியம். பூமியிலிருந்து எடுக்கப்படும் மரபுசார்ந்த எரிபொருள் குறைந்துவருவதால், சூரிய சக்தி, அணுசக்தி மற்றும் உயிரி எரிபொருள் வழியாகவும் காற்றாலை, ஹைட்ரஜன் சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல பிற சக்தி மூலமாகவும் நாம் இந்த லட்சியத்தை அடைய வேண்டும். எனவே அணு எரிபொருள் எங்கு கிடைத்தாலும் அதை வாங்குவதுதான் புத்திசாலித்தனமானது.

இதே கேள்வியை இளைஞர்களும் பொதுமக்களும் என்னிடம் இமெயில் வழியாக கேட்டு வருகிறார்கள். அந்த கேள்விகளுக்கு பலமுறை நான் மீடியா வாயிலாக பதில் அளித்திருக்கிறேன். இருந்த போதிலும் இளைஞர்களின் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு விடை காணும் விதமாக அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நான் அளித்துள்ள விரிவான விளக்கம் பில்லியன் பீட்ஸ் இபேப்பரின் அடுத்த இதழில் வெளியாகிறது. www.abdulkalam.com இணையதளம் வழியாக இந்த இதழை நீங்கள் படித்து எளிதாக புரிந்து கொள்ளலாம்.

7. மனிதன் கால் வைத்ததற்கும் இப்போது அனுப்பியுள்ள சந்திரயானுக்கும் என்ன வேறுபாடு?
ஜோ பெர்னாண்டோ, கேந்திரிய வித்யாலயா, மண்டபம்.ரேஷ்மா, ஸ்ரீஅரவிந்த மீரா மெட்ரிக் பள்ளி, மதுரை.மணிகண்டன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக், வேலூர்.சுகன்யா, கே.சி.இ.டி., விருதுநகர்.சிதம்பரம், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, திருப்புவனம்.விக்கி, எஸ்.டி.ஏ., மெட்ரிக் பள்ளி, திருச்சி

டாக்டர் அப்துல் கலாம் : சந்திரயான் 100 கி.மீ., கொண்ட சுற்றுப்பாதையிலிருந்து சந்திரனை சுற்றி வருகிறது. மிகக்குறைந்த செலவில் சந்திரனுக்கு செல்ல முடியும் என்பதை இத்திட்டம் நிரூபித்துள்ளது. சந்திரனின் தொலையுணர்வு செயற்கைக்கோளாக சந்திராயன் செயல்படும். சந்திரனின் தரைப்பகுதியை ஆராய்ந்து, ரசாயன மற்றும் தனிமங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் வரைபடம் தயாரிப்பதற்கான தகவல்களை அனுப்புவதே சந்திரயானின் நோக்கம். மனிதர்கள் யாரும் சந்திரயான் திட்டத்தில் செல்லவில்லை. இன்னும் 15 ஆண்டுகளில் நிலவிலும் ஓர் இந்தியரைப் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.

8.தலைவர் ஆவதற்கு தேவைப்படும் தகுதிகள் என்ன? தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது எப்படி?
வசந்த் தங்கவேல், ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கோவை

டாக்டர் அப்துல் கலாம் :தொலைநோக்கு பார்வை, நடுநிலை நோக்கு, நம்மால் முடியும் என்ற எண்ணம், வெல்ல முடியாததை வெல்லும் எண்ணம் ஆகியனவே தற்போது வளர்ந்து வரும் பொருளாதார யுகத்தில் தலைமைப்பண்புக்கு தேவைப்படக்கூடியன. ஆய்வு மனப்பான்மை, கற்பனை வளம், தொழில்நுட்ப அறிவு, தொழில்முனையும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

9.லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
கார்த்திக், அரசு கலைக் கல்லூரி, திருநெல்வேலி. குழந்தை வேல், அண்ணாமலை பல்கலை., சிதம்பரம். முகுந்தன், பிஷப் அம்புரோஸ் கல்லூரி, கோவை

டாக்டர் அப்துல்கலாம் : குடும்பத்தில்தான் அறிவார்ந்த குடிமக்கள் உருவாகின்றனர். இந்த சூழ்நிலை உருவாகவில்லை என்றால் இப்போது நாம் சந்திக்கும் கடினமான சூழ்நிலையைத்தான் உணர முடியும். லஞ்சத்தை ஒழிப்பதற்கான நாடு தழுவிய இயக்கம் தேவைப்படுகிறது. குடும்பத்திலும் பள்ளிகளிலும்தான் தோன்ற வேண்டும்.

மூன்று பேரால் மட்டும்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். தாய், தந்தை மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்தான் அவர்கள். குழந்தைப் பருவத்திலேயே நேர்மையை அவர்கள் கற்பித்தால் அது வாழ்நாள் முழுக்கத் தொடரும். பொது வாழ்வில் ஊழலை தடுக்க ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இயக்கம் துவங்க வேண்டும்.

குடும்பத்தில், கல்வி பயிலும் இடத்தில், பணியிடத்தில், தொழிலில், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலையில், நிர்வாகத்தில், அரசியலில், அரசில், நீதித்துறையில் நேர்மை இருக்க வேண்டும்.

10.விண்வெளி வீரர் ஆவதற்கு நான் எந்த பிரிவு பாடத்தை படிக்க வேண்டும்?
கோகுல், சாந்தோம் மேல்நிலை பள்ளி, சென்னை. சண்முகராஜ், சின்மயா வித்யாலயா மேல்நிலை பள்ளி, சென்னை. தமிழ் அரசி, இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி மேல்நிலை பள்ளி, புதுச்சேரி. திருநாவுக்கரசு, பூர்ணம்விஸ்வநாத், ஆதிபராசக்தி இன்ஜினியரிங் கல்லூரி, மேல்மருவத்தூர். காமாட்சி, ஸ்ரீலதாங்கி வித்யா மந்திர், கோவை

டாக்டர் அப்துல் கலாம் : வான் இயற்பியல் பாடத்தை முதன்மையாகக் கொண்டுள்ள முதுநிலை படிப்பை படிப்பது, விண்வெளி வீரர் ஆவதற்கான தகுதிகளைப் பெற்றுத்தரும்.

11.விமானவியல் படித்து விஞ்ஞானி ஆக ஆசை. இத்துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
முகமதுஅப்துல் ரஹ்மான், சாம்ஸ் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. கோகுல் அமிர்தா வித்யாலயம், கோவை. கவுசிக் சுந்தரராஜன், அகோபிலமட ஓரியன்டல் மேல்நிலை பள்ளி, சென்னை. ராஜேஸ்வர், ஆஸ்ரம் ஐ.சி.எஸ்.இ., டி.ஏ.எஸ்.எஸ்.சி., பள்ளி, சென்னை. தானியா, சி.இ.ஓ.ஏ., மாஸ்டர்ஸ் ஸ்கூல், மதுரை. குமரகுரு, பாரதி மெட்ரிக் பள்ளி, கோவை. வினோத், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி, கோவை

டாக்டர் அப்துல் கலாம் : பிளஸ் 2வில் இயற்பியல், வேதியல் மற்றும் கணிதம் படித்த பின், பி.இ., படிப்பில் விமானவியல் துறையை படிக்கலாம். விமானத்துறை மற்றும் விண்வெளித் துறையில் இத்துறைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவிலேயே சொந்த போர் விமானங்கள் தயாரிக்கிறோம். 50 -90 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானங்கள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பும் நடந்து கொண்டுள்ளன. விண்வெளியில் நாம் அடுத்ததாக செவ்வாய் கிரகத்துக்கு செல்ல விருக்கிறோம். எனவே இத்துறையில் சிறந்த விஞ்ஞானியாக ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

12.தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும். தேர்வு பயத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
திலீபன், ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர். சுகன்யா, பாஸ்கோ அகடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, சென்னை. ஆஷா, முத்தையா அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோட்டையூர்.ஜகதீஸ், ஸ்ரீவேணுகோபால் வித்யாலயா, சென்னை.சந்தோஷ்குமார், லட்சுமி நகர், போரூர்.

டாக்டர் அப்துல் கலாம் : உங்கள் படிப்புடன் விளையாட்டு, இசை, கலை மற்றும் கலாச்சார விஷயங்களில் பங்கு கொள்ளுங்கள். படிப்பதற்காக நன்றாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். படிக்கும்போது உங்கள் சிந்தனைகளை படிப்பில் மட்டுமே முழுமையாக செலுத்துங்கள். நீங்கள் இதை தொடர்ந்து செய்யும் போது உங்களுக்கு போதுமான அறிவு வளரும். அப்போது தேர்வு பயம் வராது. நீங்கள் மிகச்சிறப்பாக மதிப்பெண் எடுப்பீர்கள்.

13..என்னைப் போன்ற மாணவர்கள் எதிர்காலம் சிறக்க தங்களுடைய வழிகாட்டுதல்கள் என்ன?
பிரியங்கா, கக்கன் தெரு, மேற்கு தாம்பரம், சென்னை-45. மனோஜ், ஆதர்ஷ் வித்யாலயா, அந்தியூர், ஈரோடு.

டாக்டர் அப்துல் கலாம் : உங்களுடைய லட்சியத்தை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். தடைகளை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து வெற்றி அடையுங்கள். நேர்மையான சிந்தனையை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்காலம் சிறக்கும்.

14.கடலிலிருந்து எடுக்கப்படும் மின்சாரம் நமது தேவையை பூர்த்தி செய்யுமா?
சித்ரா சத்தியமூர்த்தி, அண்ணா ஆதர்ஷ் கல்லூரி, திருவேற்காடு.

டாக்டர் அப்துல் கலாம் : இந்தியாவின் கடற்கரை நீளம் 7,500 கி.மீ., அலைகளிலிருந்து மின் உற்பத்தி செய்யக்கூடிய சிறிய மின் உற்பத்தி ஆலைகளை நிறுவிக்கொள்ள வாய்ப்புள்ளது. குஜராத்திலும், கேரளாவிலும் இரு வகையான முன்மாதிரி திட்டங்கள் தற்போது செயல்படுகின்றன.

இந்தியாவின் எரிசக்தி உற்பத்தியில் அணு, நீர் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. 2020ம் ஆண்டில் 3 லட்சம் மெகாவாட் மின்சாரம் இந்தியாவுக்கு தேவைப்படும். இது தற்போதுள்ள தேவையை விட மும்மடங்காக இருக்கும். தோரியம் அடிப்படையிலான அணு உலைகள், சூரிய மின்சக்தியை பரவலாக பயன்படுத்துதல், கடல் அலை மின்சாரம் உள்ளிட்டவற்றிலிருந்து நாம் மின்சக்தி பெற வேண்டும்.


15.சிறந்த விஞ்ஞானி ஆக என்ன செய்ய வேண்டும்?
விகாஸ், கார்மல்ஸ் பள்ளி, திருச்சி. ரோகிணி, சாய் மெட்ரிக் மேனிலை பள்ளி, மடிப்பாக்கம், சென்னை. சரண்யா தேவி, ஸ்ரீ மீனாட்சி பெண்கள் கல்லூரி, மதுரை. வெங்கடராமன், அரசு கலை அறிவியல் கல்லூரி, தர்மபுரி. பாலசுப்ரமணியன், டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி, சென்னை. முகமது பர்ஹான், எஸ்.எம்.பி., மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல். ராமசுப்ரமணியன், காமராஜ் மேனிலைப்பள்ளி, குரும்பூர், துõத்துக்குடி. அன்பு செல்வம், எம்.ஏ.வி.எம்.எம்., இன்ஜினியரிங் கல்லூரி, கிடாரிபட்டி, மதுரை. விக்னேஷ், என்.எஸ்.என்., மெட்ரிக் மேனிலைப்பள்ளி, சிட்லபாக்கம், சென்னை. விஜய் கார்த்திக், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, மதுரை. சுதா, டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி, சீனிவாசா நகர், சென்னை. கீர்த்தனா, ஏ.வி.மெய்யப்பன் மெட்ரிக் பள்ளி, சென்னை. ராகவி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, திருமுல்லைவாயல், சென்னை.பாஸில் கான், என்.எஸ்.என்.மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை

டாக்டர் அப்துல் கலாம் : உங்கள் வாழ்க்கையில் முதலில் லட்சியத்தை வகுத்துக் கொள்ளுங்கள். இது விஞ்ஞானி ஆக வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே லட்சியம் வேண்டும். நீங்கள் என்னவாக உருவாகப் போகிறீர்கள் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அது தொடர்பாக உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். கடினமாக அதை நோக்கி உழையுங்கள். விடா முயற்சியுடன் இவற்றை எல்லாம் செய்து வந்தால் நீங்கள் யார் என்பது முக்கியமில்லை. நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையாலாம்.

வளரும்.

நன்றி : கல்வி மலர்.

No comments: