Tuesday, February 1, 2011

குறள் கொடுத்த வாழ்வு. பகுதி-1

தேன்தமிழ்ப் புலவர் மு.வைத்திலிங்கம்.


குன்றுகளுக் கிடையில் கிடக்கும் சிற்றூர். அந்த ஊரில் இருந்த குடும்பங்களே ஐந்துதான். எல்லாம் ஒரு குடியில் கிளைத்து வந்தவை. கொஞ்சம் நிலத்தை வைத்துக் கொண்டு கோட்டைக் கனவில் மிதப்பவர்கள். தம் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து முன்னேற்ற வேண்டும் எனத் துடிக்கும் பெற்றோர்கள். கல்வியில்லா அவர்கள், போதிய வருவாய்க்கு வழியில்லா அவர்கள், அல்லும பகலும் உழைப்பதில் அலுப்புக் காணாதவர்கள். என்றாலும் கைக் கெட்டினால் வாய்க்கெட்டாது என்ற நிலை அவர்களோடு பிரியாத் தொடர்பு கொண்டு பிணைந்து கிடந்தது.

ஒன்பது பிள்ளைகளில் என்னை முதல் மகனாகப் பெற்றார்கள். அக்கம்பக்கத்துப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி முடிந்தது. மேச்சேரியில் உயர் தொடக்கக் கல்வியும் முடிந்தது. இதற்குள் எனக்குள் ஏற்பட்ட உணர்வுகள், வெளியுலக விளக்கம், அறிவு நிலை ஏதும் எனக்குத் தெளிவாக நினைவில்லை. படித்து வளர வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படவில்லை. தந்தையின் விருப்பம் என்னைப் படிக்க வைத்தது. பள்ளிக்குச் சென்றேன். பாடங் கேட்டேன். வகுப்பு மாறினேன். இவை தாமாக நடந்தன. அவ்வளவுதான்.

எம் பகுதியில் உயர்பள்ளி இல்லை.எனக்குக் கிணற்றில் குதிப்பதும், மரம் ஏறி விளையாடுவதும், நிலத்தில் தாய் தந்தையருடன் ஏதாவது வேலை செய்வதும் தவிர பிறவற்றில் நாட்டமில்லை. என் தந்தையாரின் விருப்பம் என்னை வேலூர் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தது

புது இடம்; விடுதி வாழ்க்கை; பெரிய பள்ளி; ஏராளமான ஆசிரியர்கள். தமிழ் உணர்வுகளோடு பாடம் சொல்லும் பாங்கு. இவை தொடக்கத்தில் எனக்குப் புதியவை. அந்தப் புதுமை மனம் என்னுள் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பியது. என்னை இயக்கவும் தொடங்கியது. என்னை அறியாமல் அந்தச் சூழலுக்கு மாறிக் கொண்டிருந்தேன்.

அங்குத் தான் வள்ளுவரையும் திருக்குறளையும் நான் அறிந்து கொள்ளத் தொடங்கினேன். தினம் ஒரு குறள் கரும்பலகையில் எழுதிப் போடப்படும். ஆசிரியர் அதற்கு விளக்கம் சொல்லுவார். நல்ல வாழ்வுக்கு அது வழிகாட்டி என்றும் அடிக்கடி தமிழாசிரியர் வகுப்பில் சொல்லுவார். மாணவர்கள் திருக்குறளை நாளுக்கொன்றாவது மனப்பாடம் செய்ய வேண்டும் எனச் சொல்லுவார். அதனால் உந்தப்பட்ட மாணவர்கள் திருக்குறள் படிக்கத் தொடங்கினர்; நானும் தான்! திருக்குறள் ஒப்பித்தல் போட்டியும் வைப்பார்கள். தினம் ஒரு குறள் படிக்கும் பழக்கமும் வந்த்து.

1945ல் வேலூர் பள்ளி வாழ்க்கை முடிந்தது. 8ம் வகுப்பில் தோல்வியுடன் திரும்பினேன். 1946ல் மேச்சேரியில் உயர்பள்ளி தோன்றியது. அங்குச் சேர்ந்து படித்தேன். மிகவும் பின்தங்கிய மாணவர்களே நிறைந்த அந்தப் பள்ளியில் நான் சற்று விவரம் தெரிந்தவனாக, வெளியூர்களைக் கண்டவனாக இருந்தேன். நூல்கள் படிக்கும் பழக்கமும் கவிதைகள் படிக்கும் ஆவலும் ஒரு வகையான துணிவும் எனக்குத் துணையாக நின்றன. அதனால் மாணவர்களின் பார்வை என்மேல் படர்ந்தது.

திருக்குறளை மனப்பாடமாகச் சொல்லிக் காட்டுவதும் அழகாகப் பாவேந்தர் கவிதைகளைப் படித்துக் காட்டுவதும் கதைகள் சொல்லுவதும் என் மேதைத் தனமாக விளங்கியது மாணவர்கள் என்னை விரும்பிச் சுற்றினர். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரையாக இருந்த என்மேல் ஆசிரியர்களும் அன்பு காட்டினர்.

அடுத்த ஆண்டு ஒன்பதாம் வகுப்புக்கு - நான்காம் படிவத்துக்குச் சென்றேன். அந்த ஆண்டு எங்களுக்குப் புதிய தமிழாசிரியர் வந்தார்.தமிழ்க் கல்லூரியில் ஐந்தாண்டுகள் தமிழ் படித்துப் புலவர் (வித்துவான்) பட்டம் பெற்றவர் அவர். இளைஞர். தமிழ்ப் பற்றும், துணிவும், துடிதுடிப்பும் மிக்கவராக அவர் விளங்கினார். அவர்தம் பெயர் புலவர் சு.பழனியாண்டி என்பது. தலைமை ஆசிரியர் அவரை எங்கள் வகுப்புக்கு அழைத்து வந்தார். 'மாணவர்களே! இவர் நம் பள்ளியின் புதிய டமில் பண்டிட்' என்று அறிமுகப் படுத்தி வைத்தார். தமிழாசிரியர் தனக்குள் சிரித்துக் கொண்டார். அதன் காரணம் பின்னால் தான் எங்களுக்குப் புரிந்தது.

தமிழாசிரியர் எங்களை நோக்கிப் புன்முறுவல் பூத்தார். கணீரென்ற இளங்குரலில் 'அன்பு மாணவர்களே!' என அழைத்தார். அனைவர் நெஞ்சும் நிறைந்தன. ஏன்? அதுவரை எங்களிடம் அத்தனைப் பரிவுடன் யாரும் பேசியதில்லை. பாடம் தொடங்குமுன், இதைக் கவனியுங்கள் எனச் சொல்லி கரும் பலகையில் ஒரு குறளை எழுதிக் காட்டினார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்

திண்ணியர் ஆகப் பெறின். --- என்பது அந்த குறள்.

யாராவது இதை அழகாகப் படித்துக் காட்டுங்கள் என்றார். யாரும் எழவில்லை. என்னைப் 'பண்டிட்' என்று கருதி அஞ்ச வேண்டாம். நான் தமிழாசிரியன். உங்கள் தமிழாசிரியன். அஞ்சாமல் படியுங்கள் என்றார்.

எவரும் எழவில்லை. நான் மட்டும் நின்றேன்.

.....ம், படி என்றார். படித்தேன்.

நன்று அழகாகப் படிக்கிறாயே! உனக்குத் திருக்குறள் மனப்பாடமாகத் தெரியுமா?

தெரியும் ஐயா!

எத்தனைத் தெரியும்?

இருநூறு தெரியும் ஐயா!

வாழ்க! இன்னும் நிறைய மனப்பாடம் செய். இந்தக் குறளுக்கு உன்னால் பொருள் சொல்ல முடியுமா? என்று கேட்டார்.

இயலாதுங்க ஐயா! என்றேன். புன்முறுவல் கொண்டார். பின் பொருள் சொன்னார்.

எத்தனையோ கற்பனைகளில் மிதப்பவன் நான். இதெல்லாம் முடியுமா? என எண்ணி ஏங்குபவன் நான். தமிழாசிரியர் சொன்ன குறளின் கருத்து என் நெஞ்சில் பளிச் என ஒரு நம்பிக்கை மின்னலைத் தோற்றுவித்தது.

ஐயா! என அழைத்து நின்றேன். புன்னகையுடன் என்னை நோக்கினார்.

என்ன ஐயம்? கேள் என்றார்.

நினைப்பதெல்லாம் நடக்குமா? ஏனெனில் நாங்கள் ஏழைகள்? என்றேன்.

நடக்கும். எண்ணத்தில் நினைவில் உறுதி வேண்டும். மிகப் பெரிய சாதனையெல்லாம் செய்து முடித்த பெருமக்களுக்குத் துணை நின்றது எது? வானூர்தியைக் கண்டு பிடித்தார்களே 'ரைட் சகோதரர்கள்' அவர்களுக்குத் துணைபுரிந்த்து எது? ஆயிரக்கணக்கான பொருள்களைக் கண்டுபிடித்து இந்த உலகுக்குத் தந்தாரே எடிசன். அவரென்ன கோடிகோடிச் செலவம் குவித்து வைத்தவரா? இல்லை. மிகச் சாதாரண ஏழை என்றார்.

மாணவர்கள் தமிழாசிரியரின் சொற்களை வாய் பிளந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கோ நெஞ்சகத்தில் ஓர் எழுச்சி பொங்கிக் கொண்டிருந்த்து.

என்ன நம்புகிறாயா? என்றார்.

நம்புகிறேன் ஐயா! என்றேன்.

தினமும் காலையிலும், மாலையிலும் இந்தக் குறளைச் சொல்லிப் பார். அதன் பொருளை எண்ணிப் பார் என்றார்.

எண்ணியதெல்லாம் முடியும். முடியும் என என் உள்ளம் பரணி பாடியது. சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். கவிதைகள் எழுதிப் பார்த்தேன். எம் தோட்டத்துக் காவல் குடிசையில் விடிய விடிய புதிய புதிய நூல்களைப் படித்தேன். எனக்குப் புதிய தெம்பு உண்டானது.

அந்த ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. விடுதலைத் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாட ஆசிரியர்கள் விரும்பினர். கலை நிகழ்ச்சிகள் ஆயத்தம் செய்யும் பொறுப்பு தமிழாசிரியரிடம் விடப்பட்டது. அவர் என்னை அழைத்தார். விடுதலையின் முதல் நன்மை மதுவை ஒழித்ததுதான். அதை வைத்து ஒரு நிகழ்ச்சி நீ தர வேண்டும் என்றார்.

ஐயா! எனக்குப் பயிற்சி எதுவும் இல்லை என்று தயங்கினேன்.

உன்னால் முடியும். இந்த இசையில் செய்துபார். என்று நாட்டுப்புறப்பாடல் ஒன்றின் இரு வரிகளைப் பாடிக் காட்டினார்.

நம்பிக்கையுடன் நிமிர்ந்தேன். அன்றிரவு என் படிப்பறைக் குடிசையில் அமர்ந்து எழுதினேன்.

யாப்பறிவு இல்லாமல் ஓசை ஒழுங்கை மட்டுமே நம்பி எழுதிய என் முதல் பாட்டை அடுத்த நாள் எம் தமிழாசிரியரிடம் காட்டினேன். அவர் மகிழ்ந்து போனார்! வாழ்க! வாழ்க என வாழ்த்தி என்னைத் தட்டிக் கொடுத்தார்.

நாட்டுப்புற ஆடல் தெரிந்த நண்பர் கோவிந்தனை வைத்துக் கொண்டு, இன்னும் சில நண்பர்களையும் கூட்டிக் கொண்டு ஆடலை உருவாக்கினோம்.அந்த சேர்ந்திசைப் பாடலுடன், ஆடலும் சேர்ந்து பள்ளியின் விடுதலை விழாவை வெற்றி பெற. வைத்தது

பாட்டு அருமை, ஆடல் மிகச் சிறப்பு என்று மாணவர்கள் என்னை பாராட்டினர். ஆசிரியர்கள் என்னை வாழ்த்தினர். என் நெஞ்சோ திருக்குறளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தது.

அதன் பிறகு தினமும் ஏதாவது எழுதுவேன். தமிழாசிரியரிடம் காட்டுவேன்.அவர் முதலில் பாராட்டுவார். பின் சில திருத்தங்கள் சொல்வார். அவை என் உணர்வுகளுக்கு ஊட்டமாயின. தமிழாசிரியரின் அன்பும், திருக்குறளின் தூண்டுதலும் எனக்கு மிகப்பெருந் துணைகளாயின.

ஒரு நாள் தம்பீ! நிறைய இலக்கியங்களை நீ படிக்க வேண்டும். அவை உன்னைச் சிறந்தவனாக்கும், என்று சொல்லி, சிலப்பதிகாரத்தை என்னிடம் கொடுத்தார். அவ்வளவு பெரிய நூலை அன்றுதான் பார்த்தேன். மகிழ்வோடு அதனை வாங்கிக் கொண்டு வகுப்புக்கு வந்தேன்.மாணவர்கள் அதனைக் கண்டு வியந்தனர். 'டேய்! இவன் இத்தனை பெரிய புத்தகத்தையெல்லாம் படிக்கிறான் பாருங்கடா' என்றான் ஒருவன். எனக்கு அது பெருமையாக இருந்தது.

ஒரு வாரங்கழித்து அந்த நூலுடன் தமிழாசிரியரிடம் சென்றேன்.

என்ன தம்பீ! படித்தாயா? புரிந்ததா? என்றார்.

இல்லைங்க ஐயா! சரியாகப் புரியவில்லை என்றேன்.

தொடர்ந்து படி! முயற்சி செய்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும் -- இந்தக் குறள் உனக்குத் தெரியுமா?

ஐயா! குறள் தெரியும். ஆனால் பொருள் தெரியாது என்றேன்.

முயற்சி செல்வத்தை வெற்றியைத் தரும். முயலாமை வறுமையை, தோல்வியை வழங்கும். என்றார் தமிழாசிரியர். இந்தச் சொற்கள் என் உணர்வுகளுக்கு ஊட்டம் தந்தன. தொடர்ந்து படித்தேன். படிக்கும் போதே குறிப்புகளும் எடுத்துக் கொண்டேன். இரண்டு மூன்று முறை சிலப்பதிகாரத்தைப் படித்த போது எனக்கு அதன் கதையும் கதை மாந்தர்களும் நன்கு விளங்கினர். சிலப்பதிகாரத்தை தமிழாசிரியரிடம் திருப்பித் தந்தபோது, அதில் சில வினாக்கள் கேட்டார். நான் சொல்லிய விடை சரியாக இருந்ததால் அவர் என்னைப் பாராட்டினார். மேலும் சில இலக்கியங்களைத் தந்து படிக்கத் தூண்டினார். படித்தேன் புரியும் வரை திருப்பித் திருப்பிப் படித்தேன்.

இப்படி என் இலக்கியப் படிப்பு இனிதே வளர்ந்தது. தொடர்ந்து ஒரு நாள் வகுப்பில் எம் தமிழாசிரியர் 'தம்பிகளே! கல்வியில்லாக் கிராமங்கள் உங்களை இங்கே அனுப்பியுள்ளன. அவை அறியாமை சூழ்ந்து, அழுக்கும் குப்பையும் நிறைந்த சுகாதாரமில்லாமல் கிடக்கின்றன. இரவு, நேரங்களில் நீங்கள் அங்கெல்லாம் சென்று கல்வியின் தேவை, சுகாதாரத்தின் இன்றியமையாமை ஆகியவை பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும்' என்றார்.

அன்றிரவே என் பெரியப்பாவிடம் 'இரவில் ஊர்களுக்குச் சென்று கூட்டம் போட்டுப் பேசலாமா?' என்று கேட்டேன். அவர் உடனே ஒப்புக் கொண்டு பாராட்டினார்.

அடுத்த நாள் முதல் அக்கம் பக்கம் உள்ள ஊர்களில் தினம் ஒரூரில் என் பெரியப்பா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். ஊர்க்காரர்களும் இராந்தல்களுடன் அங்கே கூடி நாங்கள் பேசுவதை ஆவலுடன் கேட்பார்கள். பலருக்குத் தம் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் எண்ணம் எழுந்தது. வீட்டின் சுற்றுப் புறங்களை தூய்மை செய்து, குப்பைகளை அள்ளிக் குப்பைக் குழிகளில் கொட்டினார்கள். அது மக்கி நல்ல எருவானபோது நிலத்திற்கு இட்டு மகிழ்ந்தார்கள். இப்படி எங்கள் பணி இரண்டாண்டுகள் இடைவிடாது நடந்தது.

எங்கள் பணியைப் பற்றி அடிக்கடி நான் தமிழாசிரியரிடம் சொல்லுவதும், அவர் தவறாமல் என்னைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பதும் தொடர்ந்து நடந்தன . இதற்கிடையில் எங்கள் ஊர்ப் பள்ளிக் கூடத்தில் இரவு நேரத்தில் மாணவர்களைக் கூட்டித் தனிப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பணியையும் தொடங்கினோம். படிக்காத பெரியவர்களை அழைத்து அவர்களுக்கு எழுத்தறிவிக்கும் பணியையும் செய்தோம்.அவர்கள் அங்குத் தினமும் ஆவலாக வந்து கற்றார்கள். ஒற்றுமை, உழைப்பு, முயற்சி போன்றவற்றைத் தூண்டும் பல கதைகளையும் சொல்வேன். நானறிந்த அளவுக்குத் திருக்குறள் பற்றியும் சொல்வேன். அவர்களும் வாய் திறந்த வண்ணம், நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் இரவு 12மணிக்கு மேலும் கூடப் பாடம் நடக்கும்.வகுப்பு முடிந்தவுடன் அங்கேயே படுத்துக் கொள்வோம். விடியலில் எழுந்து அவரவர் வேலைகளுக்குச் சென்று விடுவோம்.

இதனால் எம்மூர் மாணாக்கர்கள் மேச்சேரி உயர்பள்ளியில் நுழைவுத் தேர்வு எழுதச் சென்றால் அனைவரும் தேறுவார்கள். தலைமையாசிரியரும் இது குறித்து எங்களைப் பாராட்டுவார். நல்லதெல்லாம் சொல்வதற்குப் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

- வளரும். -



No comments: