Wednesday, June 22, 2011

ராமேசுவரத்தில் 25 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் : 23 மீனவர்களை விடுவிக்க போராட்டம்.

ராமேசுவரத்தில் 25 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் : 23 மீனவர்களை விடுவிக்க போராட்டம்

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்து ஜெயிலில் அடைப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் ராமேசுவரம் பகுதியில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையை சேர்ந்த வீரர்கள் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கி காட்டி மிரட்டி இங்கிருந்து சென்று விடுங்கள் என்று மிரட்டினர்.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர். ஆனாலும் இலங்கை கடற்படையினர் 5 படகுகளை சுற்றி வளைத்து அதிலிருந்த அழகேசன், கணேசன், முத்துக்காளை, ராமகிருஷ்ணன், ராமசாமி, விஜயன் உள்பட 23 பேர்களை சிறை பிடித்து தலைமன்னாருக்கு படகுகளுடன் கொண்டு சென்றனர்.

தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1-ம் தேதி மீண்டும் அவர்களை ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தற்போது 23 மீனவர்களும் வவுனியா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக யாழ்பாணத்திற்கான இந்திய தூதர் மகாலிங்கம் கூறும்போது, சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களும் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும், விரைவில் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யும், அடிக்கடி தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அனைத்து மீனவர்கள் சங்கங்களின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மீனவர்கள் சங்க தலைவர்கள் ஜேசுராஜா, போஸ், தேவதாஸ், அந்தோணி, எவரேட், மெரீஸ்மகத்துவம், தட்சிணாமூர்த்தி உள்பட 13 சங்கங்களின் தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதன்படி மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம், பாம்பன், தங்கச்சிமடம் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.1 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி தொழில் தொடர்பான லேத் பட்டறை, ஐஸ் கம்பெனி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகளும் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் ராமேசுவரம் மீனவர்கள் கைதை கண்டித்து இன்று மீன்படிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 275 விசை படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வேலை நிறுத்த போராட்டம் குறித்து கோட்டைபட்டினம் விசைபடகு மீனவ சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:-

கடந்த மாதம் வரை விசை படகு மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தால் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்படைந்த இருந்தனர். இந்நிலையில் சிங்கள படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்துள்ளனர். சிங்கள படையினர் தொடர் அட்டூழியத்தை நிறுத்த ஒரே ஒரு வழிதான் உள்ளது. உடனடியாக கச்சத்தீவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

மேலும் ராமேஸ்வரம் மீனவர்களை, சிங்கள படையினர் உடனே விடுதலை செய்ய, மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டைபட்டினம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பிரபாகரன் மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள் : இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி. தகவல்.

பிரபாகரன் மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள் : இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி. தகவல்

இலங்கையில் தனி ஈழம் நாட்டை உருவாக்க போராடி வந்தது விடுதலைப்புலிகள் இயக்கம்.

இந்த நிலையில் சில வெளிநாடுகள் துணையுடன் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மீது உச்சக்கட்ட தாக்குதல்களை சிங்கள ராணுவம் நடத்தியது.

2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நந்திக்கடல் பகுதியில் நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை விடுதலைப்புலிகள் இயக்கம் மறுத்தது. பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், மீண்டும் அவர் ஈழப்போரை நடத்த வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இறுதிக்கட்ட ஈழப்போரின் போது சுமார் 1 1/2 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்டவர்களில் ஏராளமானவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. பிரபாகரனின் மனைவி மதிவதனியும் என்ன ஆனார் என்பது மர்மமாக இருந்தது.

பிரபாகரன்-மதிவதனி தம்பதியருக்கு சார்லஸ், பாலசந்திரன் என்ற 2 மகன்களும், துவாரகா என்ற மகளும் பிறந்தனர். இவர்களில் சார்லஸ், பாலசந்திரன் இருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. என்றாலும் மதிவதனி, துவாரகா, பாலசந்திரன் மூவரும் உயிருடன் இருப்பதாக முன்பு பல தடவை கூறப்பட்டது.

இறுதிக்கட்ட போர் நடந்தபோது அவர்கள் இலங்கையில் இருந்து பத்திரமாக வெளியேறி விட்டதாகவும், வெளிநாடு ஒன்றில் பாதுகாப்புடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் வெளியாக வில்லை.

இந்த நிலையில் பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலசந்திரன் மூவரும் உயிருடன் இருப்பதாக இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி. ஒருவர் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த எம்.பி.யின் பெயர் ஏ.எச்.எம். அஸ்வர். இவர் இலங்கை ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆவார். அஸ்கரிடம் மற்ற எம்.பி.க்கள் இது தொடர்பாக மேலும் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர், பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் இருப்பது எனக்கு உறுதியாக தெரியும் என்றார். ஆனால் பிரபாகரன் மனைவி, மகள், மகன் எந்த நாட்டில் உள்ளனர்? இந்த தகவல் எப்படி கிடைத்தது? என்பன போன்றவற்றுக்கு அஸ்கர் பதில் சொல்லவில்லை.

தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி.

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி தலைமை ஆசிரியரை 10ஆம் வகுப்பு மாணவி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் ஹைத்ராபாத் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளிக்கு பந்த் காரணமாக 21.06.2011 அன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதுதெரியாமல் பள்ளிக்கு வந்த மாணவி ஒருவரை, தனது அறைக்கு அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அங்கிருந்து வெளியேறி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பள்ளிக்கு திரண்டு வந்த அவரது உறவினர்கள் தலைமை ஆசிரியரை ஆடைகளை கழற்றி, ஜட்டியுடன் நிற்க வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியும் தனது பங்கிற்கு தலைமை ஆசிரியரை, தனது செருப்பால் அடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கூறப்பட்டதையடுத்து, தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உயர்அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

எம்.பி.பி.எஸ். வகுப்புவாரி அடிப்படையில் உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண்.



தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

இந்த ஆண்டு 3 மதிப்பெண்வரை கட்-ஆஃப் அதிகரித்துள்ளது. தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கான (ஓ.சி.) கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (பி.சி.) கட்-ஆஃப் மதிப்பெண் 197.75-ஆகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களில் பலர், பொறியியல் படிப்பைத் தேர்வு செய்து எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்காத காரணத்தால் அனைத்துப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-லிருந்து 199-ஆகக் குறைந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு கட்-ஆஃப் 197.5, ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அனைத்துப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆக அதிகரித்துள்ளது.

இதே போன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் இந்த ஆண்டு 197.75-ஆக அதிகரித்துள்ளது. - கடந்த ஆண்டு 195.50

தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரி அடிப்படையில் கணக்கிடப்பட்டு கீழே அளிக்கப்பட்டுள்ளது.

ஓ.சி.--199.00

பி.சி.--197.75

பி.சி. (எம்)--196.50

எம்.பி.சி./டி.சி.--196.25

எஸ்.சி.---192.00

எஸ்.சி. (ஏ)--188.50


எஸ்.டி.--188.50

ஓ.சி. - அனைத்துப் பிரிவினர்; பி.சி. - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்; பிசிஎம் - பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர்; எம்.பி.சி. - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்; எஸ்.சி. - தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; எஸ்.சி.ஏ. - தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினர்; எஸ்.டி. - பழங்குடி வகுப்பினர்.


எம்.பி.பி.எஸ். : சென்னை கல்லூரிகளுக்கு கட்-ஆஃப் எவ்வளவு?

http://vaiarulmozhi.blogspot.com/2011/06/blog-post_6095.html

எம்.பி.பி.எஸ். : சென்னை கல்லூரிகளுக்கு கட்-ஆஃப் எவ்வளவு ?



எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற ஆர்வம் மாணவர் களிடையே எழுந்துள்ளது.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அதிக கட்-ஆஃப் மதிப்பெண் (அனைத்துப் பிரிவினர் கட்-ஆஃப் 199) காரணமாக சென்னை கல்லூரிகளில் இடம் கிடைப்பதும் அரிதாகியுள்ளது. எனினும் வகுப்பு வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 எடுத்துள்ள மாணவர்களுக்கு சென்னை கல்லூரிகள் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

சென்னை மருத்துவக் கல்லூரி : 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்ட "எம்எம்சி' எனப்படும் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்பது ஏராளமான மாணவர்களின் கனவாக உள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) 44 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.) 37 இடங்களும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு (பி.சி.எம்.) 5 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி.) 28 இடங்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 21 இடங்களும் தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினருக்கு (எஸ்.சி.ஏ.) 4 இடங்களும் பழங்குடி வகுப்பினருக்கு (எஸ்.டி.) 1 இடமும் உள்ளது. இவ்வாறு சென்னை மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 140 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி : 1838-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) 39 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.) 34 இடங்களும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு (பி.சி.எம்.) 4 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி.) 26 இடங்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 19 இடங்களும் தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினருக்கு (எஸ்.சி.ஏ.) 4 இடங்களும் பழங்குடி வகுப்பினருக்கு (எஸ்.டி.) 1 இடமும் உள்ளது. இவ்வாறு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 127 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி : 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் அனைத்துப் பிரிவினருக்கு (ஓ.சி.) 26 இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.) 23 இடங்களும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கு (பி.சி.எம்.) 3 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி.) 17 இடங்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 12 இடங்களும் தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினருக்கு (எஸ்.சி.ஏ.) 3 இடங்களும் பழங்குடி வகுப்பினருக்கு (எஸ்.டி.) 1 இடமும் உள்ளது. இவ்வாறு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

ரேங்க் பட்டியலில்...எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கான மொத்த இடங்கள் 512. இந்த 512 இடங்களில் இடம்பெற்றுள்ள முற்பட்ட வகுப்பினர் (எஃப்.ஓ.சி.)-45 பேர்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.)-342 பேர்; பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர் (பி.சி.எம்.)-17 பேர்; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (எம்.பி.சி.) சேர்ந்தவர்கள்-91 பேர்; தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.)-14 பேர்; தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர் (எஸ்.சி.ஏ.)-2 பேர்; பழங்குடி வகுப்பினர் (எஸ்.டி.) - 1 மாணவர்;

சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்றிலும் மொத்தம் 352 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அனைத்துப் பிரிவினருக்கும் உரிய இடங்கள் 512-ஐ, சென்னையில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்கள் 352-உடன் ஒப்பிட்டாலே கடும் போட்டி இருப்பது தெளிவாகி விடும்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய பாடங்களில் ஒட்டு மொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200-ஐ 66 மாணவர்கள் பெற்றுள்ளதால், சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள 44 அனைத்துப் பிரிவினர் இடங்களும் ரேங்க் பட்டியல் அடிப்படையில் வரிசையாக நிரம்பி, மீதமுள்ள 22 பேருக்கு வகுப்புவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும்.

ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் 199.75-ல் மட்டும் 69 மாணவர்கள் உள்ளனர்; கட்-ஆஃப் மதிப்பெண் 199.50-ல் 114 பேர் உள்ளனர்; கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ல் மட்டும் 120 பேர் உள்ளனர்; கட்-ஆஃப் மதிப்பெண் 199-ல் 147 மாணவர்கள் உள்ளனர்.

இத்தகைய கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி காரணமாக சென்னையில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகள் ஏதாவது ஒன்றில் வகுப்பு வாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைக்க கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஐ பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


எம்.பி.பி.எஸ். வகுப்புவாரி அடிப்படையில் உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண்.
http://vaiarulmozhi.blogspot.com/2011/06/blog-post_3241.html

அரசியல் தலைவர்களை மிரட்டவே அரசு கட்டுப்பாட்டில் சி.பி.ஐ.



எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை மிரட்டுவதற்காகவே சிபிஐ அமைப்பை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு விரும்பவில்லை என்று தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அரவிந்த் கேஜரிவால் புகார் தெரிவித்துள்ளார்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லோக்பால் வரைவுக் குழுவின் இறுதிக் கூட்டத்துக்கு முன், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் மேலும் கூறியது:

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் சிபிஐ விசாரணை அமைப்பைக் கொண்டு வர மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டவே அந்த விசாரணை அமைப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எப்போதெல்லாம் மத்திய அரசுக்குப் பிரச்னை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மாயாவதி, முலாயம் சிங் யாதவ் போன்ற தலைவர்களை மிரட்டுவதற்கு மத்திய அரசு சிபிஐ விசாரணை அமைப்பை அனுப்பிவைக்கும். சிபிஐ நேர்மையாக செயல்படுவதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவதற்காக சிபிஐ ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு எதிரான விசாரணையை முடக்கவும் சிபிஐ-யை மத்திய அரசு வளைக்கிறது.

பாதுகாப்பு, உளவு தொடர்பான பணிகளில் சிபிஐ ஈடுபடுவதில்லை. எனவே உளவுப் பிரிவு, "ரா' அமைப்பு போன்றவற்றுடன் சிபிஐ-யை சேர்க்கக்கூடாது. தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் இருந்து பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளை நீக்கிவிடலாம் என்று அந்த சட்டமே கூறுகிறது. எனவே சிபிஐ விசாரணை அமைப்பை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கண்டிப்பாகக் கொண்டு வரவேண்டும் என்று அவர் கூறினார்.

மது விலக்கை அமல்படுத்த முடிவு : சத்தீஸ்கர் மாநிலத்தில் மது பானம் குடிக்க தடை; 263 கடைகள் மூடப்பட்டன.

மது விலக்கை அமல்படுத்த முடிவு: சத்தீஸ்கர் மாநிலத்தில் மது பானம் குடிக்க தடை; 263 கடைகள் மூடப்பட்டன

மாநிலத்தில் முழு அளவிலான மது விலக்கை அமல்படுத்த சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது. இம் மாநிலத்தில், உள்ளூரில் தயாராகும் மதுபான வகைகளை விற்பனை செய்யவும், வெளிநாட்டு மது வகைகளை விற்பனை செய்யவும், தனித்தனியே மதுபானக்கடைகள் உள்ளன.

இருவகை மதுபானக் கடைகளையும் உடனடியாக மூடி விடாமல், படிப்படியாக குறைக்க மாநில அரசு தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கிராமங்களில் செயல்பட்டு வந்த 263 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன. இவற்றில், 227 உள்ளூர் மதுபான கடைகளும், 36 வெளிநாட்டு மதுபான கடைகளும் அடங்கும்.

இதுபற்றி, வணிகவரிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநிலத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு, நடப்பு நிதியாண்டில் (2011-12) 263 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கிராமப் பகுதிகளில் செயல்பட்டு வந்தவை.

மதுபானத்துக்கு சிறுவர்கள் கூட அடிமையாவதாக கிராமப்புற பெண்களிடம் இருந்து அரசுக்கு நிறைய புகார்கள் வந்தன. எனவே தான் முதல் கட்டமாக கிராமங்களில் செயல்பட்டு வந்த மதுபான கடைகள் மூடப்பட்டன.

263 கடைகள் மூடப்பட்டுள்ளதால், ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். எனினும் மாநிலத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த, அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.