சென்னை தீவுத்திடல் கொடி மர சாலையில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் மரம் ஏறி பழம் பறித்த 13 வயது சிறுவன் தில்ஷான் சுட்டுக் கொல்லப்பட்டான்.
கொலை செய்யப்பட்ட தில்ஷானுடன் சஞ்சை (11), பெவின் (10) ஆகிய சிறுவர்களும் சென்றனர். நடந்த சம்பவம் குறித்து அவர்கள் கூறியதாவது:-
நேற்று மதியம் தில்ஷானும் நாங்களும் வாதாம்பழம் பறிப்பதற்காக ராணுவ குடியிருப்புக்குள் சுவர் ஏறி குதித்து சென்றோம். தில்ஷான் மரத்தில் ஏறி வாதாம் பழங்களை பறித்து போட்டான். நாங்கள் 2 பேரும் அதை பொறுக்கிக் கொண்டு இருந்தோம்.
அப்போது அங்கு நின்ற ராணுவ வீரர் எங்களை சத்தம் போட்டார். உடனே கீழே நின்ற நாங்கள் சுவர் ஏறி வெளியே குதித்தோம். தில்ஷான் மரத்தில் இருந்து இறங்கி சுவரில் ஏறினான். அப்போது காரில் வந்த ராணுவ அதிகாரி ஒருவர் தில்ஷானை நோக்கி சுட்டார். “டுமீல்” என்று சத்தம் கேட்டது.
தில்ஷான் அலறியபடி விழுந்தான். அவன் காதின் அருகே புகை வந்தது. ரத்தமும் வழிந்தது. அதை பார்த்ததும் மிகவும் பயந்து நடுங்கினோம். உடனே ஓடிச் சென்று தில்ஷான் அம்மாவிடம் நடந்ததை சொன்னோம். உடனே அவர் அழுதபடி தில்சனை பார்க்க வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் நடந்ததை கேள்விப்பட்டு அங்கு வந்தார்கள்.
நாங்கள் எத்தனையோ முறை விளையாட்டாக அங்கு சென்றிருக்கிறோம். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு சிறுவர்கள் கூறினார்கள்.
அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-
நாங்கள் 20 வருடமாக இங்கு குடியிருக்கிறோம். சிறுவர்கள் மாம்பழம், வாதாம்பழம் பறிப்பதற்காக ராணுவ பகுதிக்குள் விளையாட்டாக செல்வது வழக்கமானதுதான். தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தாலும் சிறுவர்கள் என்பதால் அங்கு நிற்கும் ராணுவத்தினர் எச்சரிக்கை செய்து அனுப்புவதுதான் வாடிக்கை. இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை.
சிறுவனை இரக்கம் இல்லாமல் ராணுவ அதிகாரி ஒருவர் இப்படி நடந்து கொண்டதை ஏற்க முடியாது. இந்த பகுதியில் சிறுவர்களுக்கு விளையாட தனி இடம் இல்லை. சிறுவர்கள் விளையாட்டாக இதை செய்து இருக்கிறார்கள். காரில் வந்த ராணுவ அதிகாரி ஒருவர்தான் சுட்டு இருக்கிறார். அவரை உடனே கைது செய்ய வேண்டும். கைது ஆகும் அதிகாரி யார்? என்பதை பொதுமக்களிடம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
குண்டு பாய்ந்த முறை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சிறுவன் தில்ஷான் காது அருகே குண்டு பாய்ந்து வெளியே வந்திருக்கிறது. குண்டு பாய்ந்துள்ள முறையை பார்த்தால் கீழே இருந்து தான் யாரோ சுட்டு இருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment