கிருஷ்ணகிரியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் மீது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இன்று அதிகாலை நடந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி தாலுகாவில் போக்குவரத்துப்பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார்(52). இவர் இன்று அதிகாலை சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கிரானைட் கற்களை ஏற்றிய லாரி ஒன்று வேகமாக வந்தது. அந்த லாரியை நிறுத்துமாறு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சைகை காட்டினார். ஆனால் லாரியை ஓட்டிய டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக வந்து சிவக்குமார் மீது மோதினார்.
இதில் சம்பவ இடத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். இப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை சிறிது தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் சிவப்பா என்பதும் ஆந்திரா மாநிலம் குப்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையுண்ட சப்-இன்ஸ்பெக்டரின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கொலையுண்ட சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு மகன் டாக்டருக்கு படித்து முடித்து விட்டார். இன்னொருவர் டாக்டருக்கு படித்து வருகிறார். 3-வது மகன் அங்குள்ள கல்லூரி பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
No comments:
Post a Comment