Thursday, June 30, 2011

ராஜபக்சே ஒரு உலக மாகா பொய்யன் - தங்கபாலு திடீர் தாக்கு.


ராஜபக்சேவைக் கண்டித்தோ, திட்டியோ, விமர்சித்தோ, கடுமையாக தாக்கியோ இதுவரை ஒரு வார்த்தையைக் கூட உதிர்த்திராத தங்கபாலு இன்று திடீரென ராஜபக்சே ஒரு உலக மகா பொய்யன் என்ற உண்மையைக் கண்டறிந்து நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்காரர்கள், இலங்கை அரசையும், இலங்கை அரசு செய்த ராணுவ அட்டூழியத்தையும், ஈழத் தமிழ்ப் பெண்களை கொடூரமாக கற்பழித்த செயலையும், கொலை செய்து புதைத்த கொடூரத்தையும் வன்மையாக கண்டித்தோ, வியர்க்க விறுவிறுக்க போராட்டம் நடத்தியோ தமிழக மக்கள் பார்த்ததில்லை. அப்படி இருக்கையில் திடீரென ராஜபக்சே ஒரு உலக மகா பொய்யன் என்று கூறி அதிரடியாக பேசியுள்ளார் தங்கபாலு.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்தவர் தங்கபாலு என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். ஈழப் பிரச்சினையில் பலப் பல நாடகம் போட்டு நீலிக் கண்ணீர் வடித்த ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் கட்சியை தமிழக மக்கள் சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் குழி தோண்டிப் புதைத்தனர். இதைத் தொடர்ந்து தனது மாநிலத் தலைவர் பதவியை உதறினார் தங்கபாலு. அவருக்கு அடுத்த தலைவரைக் கூட தேர்வு செய்ய முடியாமல் பெரும் குழப்பத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

இந்த நிலையில் இன்று தங்கபாலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுவும் நீண்ட அறிக்கை. ராஜபக்சேவை வன்மையாக கண்டித்து நீளுகிறது அந்த அறிக்கை.

அதில் தங்கபாலு கூறியிருப்பதாவது...

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசிடமிருந்து நிர்ப்பந்தம் ஏதும் வரவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே உலகமகாப் பொய்ச் செய்தியை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சனை மிகவும் உக்கிரம் அடைந்த 1983ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் காலத்திலும், சோனியா வழிகாட்டுதலில் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான இன்றைய மத்திய அரசின் காலத்திலும் இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு அந்த நாடு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை பல்வேறு நடவடிக்கைகளால் இந்திய அரசு பிரயோகித்து வந்துள்ளது வருகிறது என்ற விபரங்களை வரலாறு விரிவாகக் கூறும்.

இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான்.

அன்றைய வெளியுறவுச் செயலாளர் ஜி. பார்த்தசாரதியை அந்நாட்டுக்கு அனுப்பி அன்றைய அதிபர் ஜெயவர்த்தனேவிடம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தச் செய்ததும் இந்திராவே.

1985 ஜூலை 7ந் தேதி திம்புவில் இலங்கை அரசையும், அந்நாட்டு விடுதலை முன்னணி தலைவர்களையும் இந்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேச வைத்தவர் ராஜீவ்காந்தி.

மேலும் ராஜீவ்காந்தி இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு சிறந்த கடுமையான நிர்ப்பந்தமாக அமைந்தது. தமிழர்களுக்கு சுயஅதிகாரம் கொண்ட மாநிலம் உருவாகும் வகையில் சட்டத் திருத்தத்தை ஒப்பந்தம் வலியுறுத்தியது.

இலங்கை தமிழர்களுக்கு உரிமை தரும் அந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் சிங்கள ராணுவ வீரர் ஒருவர் ராஜீவ்காந்தியை இலங்கையில் அந்நாட்டு ராணுவ மரியாதை ஏற்று வரும் நேரத்தில் துப்பாக்கியால் தாக்கினார் என்பதும், அக்கொள்கைக்கென்றே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு ஆளானார் என்பதும் வரலாற்றின் சோக அத்தியாயங்கள்.

கடந்த 1984 89ஆம் ஆண்டுகளில் நான் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய போது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு" என்று எனது உரையை பதிவு செய்திருக்கிறேன். அப்போது இந்திரா காந்தி பிரதமர்.

இன்றைக்கு சோனியா காந்தி வழிகாட்டுதலில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு சார்பில் பிரதமரும், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா ஆகிய தலைவர்களும் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உட்பட பல்வேறு உயர்மட்ட

இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபட்சேவை பலமுறை நேரில் சந்தித்து இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்த நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் உலகமே அறிந்தவை தான்.

ஒரு நாட்டின் உயர் பதவியிலுள்ள ராஜபட்சே தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்ற பொய் செய்தியை வெளியிட்டதன் மூலம் அவர் உலக மகாப் பொய்யர் என்ற பட்டத்திற்கு உரியவராகிறார். எனவே அவரது இச்செயலை உலகம் ஏற்காது. இதையும் மன்னிக்காது என்று தங்கபாலு கூறியுள்ளார்.

ராஜபக்சே என்றைக்குமே உண்மை பேசியதில்லை என்பது அவர் அதிபராக வந்த அடுத்த சில நாட்களிலேயே உலகுக்குத் தெரிந்து விட்டது. ஆனால் அவரைப் புரிந்து கொள்ள தங்கபாலுவுக்கு இத்தனை காலம் பிடித்துள்ளது வேடிக்கை, வினோதம்தான்.

thatstamil.oneindia.in

No comments: