Thursday, June 23, 2011

தங்கம் விலை 5 ஆண்டுகளில் விலை 160% அதிகரிப்பு.



கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை 160 சதவீதம் அதிகரித்துள்ளது.

சீனா உள்ளிட்ட பல நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கம் கையிருப்பை அதிகரித்து வருவதாலும், தேவைக்கு ஏற்ப தங்கத்தின் உற்பத்தி இல்லை என்பதாலும் விலை மேலும் தொடர்ந்து உயரும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவி்ல் நிலத்தின் விலை, பங்குத் சந்தை வளர்ச்சியை விடவும் தங்கத்தின் விலை தான் மிக பயங்கரமாக உயர்ந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இன்று ரூ.2.60 லட்சமாகும். அதாவது ஆண்டிற்கு 32 சதவீத ஆதாயத்தை அள்ளி்த் தந்துள்ளது தங்கம்.

மேலும் கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அளவில் பல்வேறு நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகளும் தங்கத்தை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளன. இந்த காலாண்டில் மட்டும் 129 டன் தங்கத்தை இந்த வங்கிகள் வாங்கியுள்ளன.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல நாடுகள் தங்களது அன்னியச் செலாவணி கையிருப்பில், டாலர் போன்ற இதர செலாவணிகளை குறைத்துக் கொண்டு, தங்கம் கையிருப்பை அதிகரித்து வருகின்றன. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது.

கிரீஸ் உள்ளிட்ட கடன் சுமையில் சிக்கி தவிக்கும் வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகள் தங்களது நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் கரன்சி நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டுள்ளன. இதனால் யூரோ, டாலர் உள்ளிட்ட கரன்சிகளின் மதிப்பு மேலும் சரிவடைய வாய்ப்புள்ளதால், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாகக் கருதி பணத்தை அதில் முதலீடு செய்து வருகின்றன.

இதனால் உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சீனாவிடம் இப்போது 3 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது. இதில் தங்கத்தின் அளவு 1.8 சதவீதமாகும்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியில் தங்கத்தின் பங்கு 11 சதவீதமும்.

சீனாவும் 11 சதவீதம் அளவுக்கு தங்கத்தை வாங்கி வைக்க முடிவு செய்தால், அந்த நாடு 6,000 டன் தங்கத்தை வாங்க வேண்டியிருக்கும். இது ஓராண்டில் சர்வதேச அளவில் உற்பத்தியாகும் தங்கத்தைவிட இரண்டு மடங்காகும்.

இதனால் சீனா தங்கம் வாங்க ஆரம்பித்தால், அதன் விலை பல மடங்கு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ரூ.13.95 லட்சம் கோடி அளவுக்கு அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது. இதில் தங்கத்தின் பங்கு 8.2 சதவீதமாகும்.

தங்கம் உற்பத்தியில் உலக அளவில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலக அளவில் தங்கம் உற்பத்தி ஆண்டிற்கு 0.7 சதவீதம் மட்டுமே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் தங்கத்தை வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது சீனா. இந்த இரு நாடுகளும் உலகத்தில் விற்பனையாகும் தங்கத்தில் 33 சதவீதத்தை வாங்குகின்றன.

உலக அளவில் தங்கத்துக்கு ஏற்பட்டுள்ள டிமாண்டைப் பார்த்துவிட்டு சில ஆஸ்திரேலிய சுரங்க அதிபர்கள், ஏதோ கொஞ்சமாவது கிடைக்காதா என்ற ஆசையில், காலியான தங்க சுரங்கங்களைக் கூட விடாமல் மீண்டும் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.

No comments: