Sunday, June 12, 2011

பாகிஸ்தானில வெடிகுண்டு தாக்குதல் ; 35 பேர் பலி ; 100 பேர் படுகாயம்.

பாகிஸ்தான் மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல்;    35 பேர் பலி;    100 பேர் படுகாயம்

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. கைபர்- பக்துன்கவா மாகாணத்தின் தலைநகரமான பெஷாவரில் கைபர் சூப்பர் மார்க்கெட் உள்ளது. நேற்று நள்ளிரவு அங்கு 2 தடவை குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. கட்டிடங்கள் அதிர்ந்தன. மார்க்கெட் அருகேயுள்ள சில கட்டிடங்கள் இடிந்தன.

இந்த சம்பவத்தில் 35 பேர் பலியானார்கள். 100 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள லேடிரீடிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயம் அடைந்தவர்களில் பலர் பத்திரிகை நிருபர்கள். இதில் டெலிவிஷனின் தலைமை நிருபர் மற்றும் 8 போலீசாரும் அடங்குவர்.

இவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டனர். இந்த தகவலை கைபர்- பக்துனகவா மாகாண செய்தித்துறை மந்திரி மியான் இப்திகார் ஹீசேன் தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு மார்க்கெட்டில் அதிக கூட்டம் இருந்தது. அப்போது, முதலில் ஒரு குண்டு வெடித்தது. அது சக்தி வாய்ந்த குண்டு இல்லை. எனவே, பலருக்கு காயம் மட்டுமே ஏற்பட்டது.

முதல் குண்டு வெடித்த சில நிமிடங்களிலேயே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மற்றொரு குண்டு வெடித்தது. அது அதிக சக்தி வாய்ந்த குண்டு என்பதால் உயிர் இழப்பு மற்றும் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. தற்போது இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: