Tuesday, March 1, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-1.

ராஜீவ் காந்தி மறைந்து 19 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.

பிரபாகரன் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசால் கொல்லப்பட்டு விட்டார் என்று இந்திய அரசே சொல்லுகிறது. (எவ்வளவு பேர் இதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது வேறு செய்தி) இரண்டு பேரும் மறைந்து விட்டதாகக் கருதப்படும் இன்றைய நிலையில் பல வருடங்களுக்கு முன்னர் அவர்கள் இருவரையும் சார்ந்து நிகழ்ந்த பல சம்பவங்கள் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்ச்சிகள் ஆகின்றன.

ராஜீவ் காந்தி மரணத்தைப் பொறுத்த வரையில், மக்களுக்கு, அது ராஜீவ் குடும்பத்திற்கு விடுதலைப்புலிகளால் இழைக்கப்பட்ட கொடிய அநீதி என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இத்தனை ஆண்டுக் காலங்களில் இந்த சம்பவத்தின் ஒரு கோணம் மட்டுமே மக்களின் மனதில் பதிந்து இருக்கிறது. பதியப்பட்டு இருக்கிறது.

சரித்திர நிகழ்வுகளுக்கு எப்போதுமே பல கோணங்கள் உண்டு.ஒவ்வொரு கோணத்திலும் வித்தியாசமான பார்வைகளும் காட்சிகளும் கிடைக்கும். இது வரை இந்த சம்பவத்தைப் பற்றி ஒரே கோணத்தில் அனைவரும் பேசி வந்ததால், இது விஷயத்தில் மாறுபட்ட கோணங்களும் இருக்கக்கூடும் என்பதே பலருக்கு தோன்றவில்லை. சிலருக்கு அப்படித் தோன்றினாலும், அதைப்பற்றி பேசவோ, எழுதவோ தயங்குகிறார்கள்.

எல்லாரும் பேசத் தயங்கும் இந்த விஷயத்தைப் பற்றி விவரமாகப் பேச வேண்டும் எழுத வேண்டும் என்று நினைத்தேன். எனவே தான் இந்த தலைப்பு. எப்போது ஒரு சம்பவம் சரித்திரம் ஆகி விட்டதோ அதன் பின்னர் அதை பல்வேறு கோணங்களிலும் அலசிப் பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.

ஏன் இது நடந்தது ? இது எப்படி நடந்திருக்கக்கூடும் ? இதன் பின்னணி என்ன என்பது இன்றைய தமிழ் இளைஞர்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராஜீவ் காந்தி – இந்திராவின் புதல்வர், ஜவஹர்லால் நேருவின் பேரன் – தாயும் பிரதம மந்திரியாக இருந்தவர். தாத்தாவும் பிரதம மந்திரியாக இருந்தவர். பரம்பரை பணக்காரர். born with silver spoon என்று கூறுவார்களே அது போல் சகல வசதிகளுடன் பிறந்தவர் - வாழ்ந்தவர். டேராடூன் பப்ளிக் ஸ்கூலில் படிப்பு. லண்டனில் மேற்படிப்பு. தனக்குப் பிடித்த தொழில் – விமானியாகப் பணி. படிக்கும்போதே இத்தாலி நாட்டுப்பெண்ணுடன் காதல். பின்னர் காதலித்த பெண்ணுடனே திருமணம். பெண்ணும், ஆணுமாக இரண்டு அழகான குழந்தைகள். வாழ்க்கையில் துன்பத்தையே அறியாதவர்.

பிற்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. எனவே சமகால அரசியலைப் பற்றியோ, இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றியோ தற்செயலாக அரசியலுக்கு வரும் வரை ஏதும் அறியாதவர். நல்ல புத்திசாலி. ஆனால் பிடிவாதக்காரர். தான் நினைப்பது நடந்தே தீர வேண்டும் என்று விரும்புபவர்.

அன்னை இந்திராவின் திடீர் மரணத்தால், மக்களிடையே பெருத்த அனுதாபத்தையும், அதன் காரணமாக தேர்தலில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை பெரும் அளவிற்கு மக்களின் ஆதரவையும் பெற்றவர். மிக இளைய வயதிலேயே 110 கோடி மக்களின் முழு ஆதரவைப்பெற்ற தலைவனாக உருவாகி 5 வருடங்கள் இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்தவர். இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப புரட்சி ஏற்படக் காரணமாக இருந்தவர்.

பிரபாகரன் – திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் புதல்வர். தந்தை யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு உத்தியோகத்தில் இருந்த, மிக மிக எளிமை யான நேர்மையான மனிதர். பிரபாகரன் -சிறு வயதிலிருந்தே சிங்களஇனவெறி யர்களின் அட்டூழியத்தைப் பார்த்துக் கொண்டே வளர்ந்தவர்.துன்பப்படும் மக்களிடையே வாழ்ந்தவர்.அவர்களின் துன்பத்தைப் பகிர்ந்து கொண்டவர். தமிழர்கள் இந்தக் காடையர்களின் கொடுமையிலிருந்து விடுபடும் நாள் எப்போது வருமோ என்று துடித்தவர் - தவித்தவர்.

தன் முன்னோடிகளாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும், பகத் சிங்கையும் ஏற்றுக்கொண்டவர். இனவெறி சிங்கள அரசாங்கத்திடமிருந்து விலகி தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ ஒரே வழி - தனித் தமிழ் ஈழம் அமைவது தான் என்று உறுதியாக நம்பியவர். தன்னை நம்பி வந்த இளைஞர்களுடன் சேர்ந்து தமிழீழ விடுதலை இயக்கத்தைத் தொடங்கியவர். சிங்கள அரசை எதிர்த்து, பல போர்முனைகளில் வென்று, கணிசமான அளவிற்கு ஈழ மண்ணை மீட்டு, சுதந்திர தமிழ் ஈழம் கனவல்ல – நனவு தான் என்று கண்ணில் காட்டியவர். ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் கால சரித்திரத்தில் மட்டுமே நாம் பார்த்த தமிழனின் வீரத்துக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர். எதற்கும், யாரைக்கண்டும் அஞ்சாதவர்.

மிகச்சிறந்த கட்டுப்பாடுடைய ஒரு இயக்கத்தை உருவாக்கியவர். எந்தவித தீய பழக்கங்களும் இல்லாத ஒரு கட்டுக்கோப்பான இளைஞர் சமுதாயத்தை தன் வழி காட்டுதலில் உருவாக்கியவர். வன்முறைத் தாக்குதல் அவரது வழி முறைகளில் ஒன்றாக இருந்தபோதும், அவர் மேற்கொண்டசெய்கைகளில் எதுவுமே சுயநலத்திற்காக இருந்ததில்லை. தமிழீழத்தை தன் உயிருக்கும் மேலாக நேசித்தவர். தன் தாய் மண்ணிற்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் சகலவித தியாகங்களையும் செய்தவர்.

இவர்களில் யார் ஹீரோ ? யார் வில்லன் ? இவர் தான் ஹீரோ என்று சிலரும் அவர் தான் ஹீரோ என்று வேறு சிலரும் கூறுவார்கள்.

இந்த இரண்டு பேரும் மட்டும் இணைந்து செயல் பட்டிருந்தால் - தமிழர்களின் கனவு என்றோ நனவாகி இருக்கும் ! ஐக்கிய நாடுகள் சபையில் தனித் தமிழீழத்தின் கொடி பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருக்கும் !

இவர்கள் இரண்டு பேரையும் மோதவிட்டு தான் நினைத்ததை எல்லாம் சாதித்துக்கொண்ட வில்லன் வேறு ஒரு ஆள். கிழட்டு சிங்கள நரி ஜனாதிபதி ஜெயவர்த்தனே !

அனுபவம் இல்லாத , அரசியலில் முதிர்ச்சி பெற்றிராத, இளைஞரான ராஜீவ் காந்தியின் ஈகோவைப் பயன்படுத்திக்கொண்டு, ராஜீவ் காந்தியைத் தன் சதியில் சிக்கவைத்து - பிரபாகரனுக்கும், தமிழீழ மக்களுக்கும் விரோதியாக்கிய நயவஞ்சகன் ஜெயவர்த்தனே !

இந்த விரோதம் உருவானது எப்படி ?

பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ் காந்தி உத்திரவு இட்டார் – இப்படி ஒரு செய்தியை கேள்விப்பட்டால் விசித்திரமாக இல்லை ?

ராஜீவ் காந்தியின் இறப்பிற்கு பிரபாகரன் தான் முக்கிய காரணமாக இருந்தார் என்கிற செய்தி இருக்கும்போது, மேற்கண்ட தலைப்பு மிகவும் விசித்திரமாகத் தானே இருக்கும் ?

பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ் காந்தி உத்திரவு போடும் அளவிற்கு அவர் களிடையே எத்தகைய விரோதம் இருந்தது என்பது ராஜீவ் காந்தி மறைந்து பல வருடங்களுக்குப் பின்னர் தான் தெரிய வந்திருக்கிறது. ஒரு வேளை இந்த விவரங்கள் முதலிலேயே வெளியாகி இருந்தால் – ராஜீவ் கொலையின் பரிணாமமே மாறி இருக்கலாம் – பின்னால் நிகழ்ந்த பல அவலங்கள் கூட நிகழாமல் இருந்திருக்கலாம்.

IPKF - சமாதானத்தை நிலை நிறுத்த இலங்கைக்கு இந்தியா அனுப்பியிருந்த படைக்கு முதல் கமாண்டராக பொறுப்பேற்று இலங்கைக்கு சென்றிருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் என்கிற நேர்மையான, வெளிப்படையான இந்திய ராணுவ தளபதி – அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கொடுத்துள்ள பேட்டியைப் படிக்கும்போது இது வரை நமக்குத் தெரியாத பல செய்திகள், புதிய கோணங்களில் கிடைக்கின்றன !

அவர் கூறியுள்ள செய்தி தான் இது. பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ்காந்தி உத்திரவு இட்டார்.

இந்தத் தலைப்பில் தொடர்ந்து எழுதும் முன்னர் சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.

ராஜீவிகாந்தியின் இறப்பிற்கு பின் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவலங்களும் சொல்லொண்ணாத் துன்பங்கள் எப்பேற்பட்டவை ? இதற்கான காரணங்கள் என்ன ?

எண்பதுகளில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்து மக்களிடையே பெருத்த ஆதரவும், உணர்வுபூர்வமான கொந்தளிப்பும் இருந்தது. தமிழ்நாடு கொடுத்த அழுத்தத்தில் செயல்பட வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.

ஆனால் ராஜீவின் மரணத்திற்கு பிறகு சூழ்நிலை முற்றிலுமாக மாறி விட்டது.

ஈழத்தமிழர்களைப் பற்றி பேசவே தமிழக மக்கள் அஞ்ச ஆரம்பித்து விட்டார்கள் ஏன் இந்த அவல நிலை ?

இந்தியாவிற்கு என்று எழுதப்பட்ட சட்டங்கள் (Indian penal code, Crimininal Procedure code etc.) இருக்கின்றன. நீதிமன்றங்கள் இருக்கின்றன. குற்றம் ஏதேனும் நிகழ்ந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வாங்கித் தருவது அரசாங்கத்தின் பொறுப்பு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த பெண் அந்த விபத்திலேயே மாண்டு போனார். அதற்கு துணையாக இருந்தவர்கள் என்று கருதப்பட்ட பலர், போலீஸாரின் கைகளில் சிக்க விரும்பாமல், தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள். மிச்சம் மீதி இருந்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டு, கடந்த 19 வருடங்களாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு மேலும் இதில் யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று அரசாங்கம் நினைத்தால், சம்பந்தப்பட்ட வர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தட்டும். யார் இதைத் தடுக்கிறார்கள் ?

அதை விட்டு விட்டு, ராஜீவ் காந்தி கொலைக்கு பழி வாங்கும் விதத்தில், ஒரு இனத்தையே, ஒட்டு மொத்த தமிழினத்தையே அழிக்க முற்படுவது எந்த விதத்தில் நியாயம் ?

காந்திஜியைக் கொன்றவர் ஒரு மராத்தியர் என்பதற்காக அத்தனை மராத்தியர் களையும் யாரும் கொடுமைப் படுத்தவில்லையே.

பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலராக இருந்த சீக்கியரே சுட்டுக் கொன்றபோது, உடனடியாக தில்லியில் காங்கிரஸ்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டு கண்ணில்பட்ட சீக்கியர்களை எல்லாம் கொன்று குவித்தனர். .உண்மையே. ஆனாலும், வேகம் தணிந்த பிறகு அதே சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஒருவரையே பிரதமராக இந்த நாடு ஏற்றுக்கொள்ளவில்லையா ?

மகாத்மா காந்தியின் கொலைக்கு காரணம் அவர் முஸ்லிம் இனத்தவர்க்கு ஆதரவாகவும், இந்துக்களுக்கு பெருத்த இழப்புகள் ஏற்படக் காரணமாகவும் இருந்தார். என்று இந்துக்களில் ஒரு பிரிவினர் கருதியது தான்.


இதேபோல் இந்திரா அம்மையாரின் கொலைக்கு காரணம் பொற்கோயிலுக்குள் அவர் ராணுவத்தை அனுப்பி களங்கப்படுத்தினார் என்று சீக்கியர்களில் ஒரு பிரிவினர் கோபப்பட்டது தான்.

இதே போல் ராஜீவ் காந்தியின் இறப்பிற்கான காரணம் என்ன என்பதையும் நாம் வெளிப்படையாக விவாதித்து ஒரு தெளிவுக்கு வந்திருக்க வேண்டாமா ?

அதை விட்டு விட்டு, ராஜீவ் காந்தியின் இறப்பிற்கு தண்டனை வழங்குவதாக நினைத்துக் கொண்டு – பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை, இன்னமும் தொடர்ந்து ஈடுபடுவதை – எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்

இவர்களது பழிவாங்கும் போக்கால் - லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் எப்பேற்பட்ட அவலத்தை அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியது, இயன்ற விதங்களில் எல்லாம் அவர்களுக்கு ஆன உதவிகளைச் செய்வது மனசாட்சி உள்ளவர்களின் கடமை.

89,000 விதவைகள், ஒன்றரை லட்சம் உடல் ஊனமுற்றவர்கள், சொந்த நாட்டிலேயே அநாதைகளாக அலையும் மூன்று லட்சம் - பெண்கள், முதியவர்கள் – குழந்தைகள் !

ஈழத்தமிழர்களின இத்தனைத் துன்பங்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருந்தவர்களை, சட்டம் தண்டிக்காவிடினும், சமுதாயம் தண்டிக்காவிடினும், என்றேனும் ஒரு நாள் அவர்களின் சொந்த மனசாட்சியே தண்டிக்கும் என்பது நிச்சயம். இந்த மாபெரும் அவலத்தை மாற்ற வேண்டும் – இந்த பாவப்பட்ட மக்களின் துயரைப் போக்க அனைத்து விதங்களிலும் செயல்படவேண்டும் என்று சொல்வது முழுக்க முழுக்க மனிதாபிமானம் சம்பந்தப்பட்டது.

ராஜீவ் காந்தியின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான்.

ஆனால் மேற்கண்ட செய்தி தலைகீழாக இருக்கிறதே - ஜெனரல் ஹர்கிரத் சிங் சொல்வது போல் பிரபாகரனை சுட்டுக் கொல்ல ராஜீவ் உத்திரவு போட்டாரா ? ஏன் அப்படி ? எத்தகைய சூழ்நிலையில்,ஏன் இது நடந்தது. ஈழப்போராளி களுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையே அப்படி என்ன விரோதம் ?

தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு, முக்கியமாக 30 -35 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினருக்கு இந்த விரோதத்தின் பின்னணி தெரியாது.அரசியலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உன்னிப்பாக கவனித்து வருகிற எனக்கு கூட இந்த இடுகைக்காக தகவல்களைத் தேடும் போதுதான் சில செய்திகள் புதிதாகத் தெரிய வந்தன.

இந்த பின்னணிக்குப் போகும் முன் - ஒரு பழைய தமிழ்ப்படம் பற்றி ஒரு சுருக்கம்.

1954ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த, பாடல்களே இல்லாத, ஒரு சீரியஸான தமிழ்த் திரைப்படம் “அந்த நாள். இன்றைய தலைமுறையினர் அதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஜாவர் சீதாராமன் எழுதி எஸ்.பாலசந்தர் இயக்கிய படம்.

மிகவும் புரட்சிகரமான கதையம்சம் உள்ள அந்த படத்தின் துவக்கத்தில்முதல் சீனிலேயே பிரபல விஞ்ஞானியாக நடிக்கும் சிவாஜி சுட்டுக கொல்லப்படுவார். படம் பார்ப்பவர் நெஞ்சம் பதை பதக்கும். அய்யோ – இவ்வளவு பெரிய விஞ்ஞானியை சுட்டுக் கொன்று விட்டார்களே என்று. சுடுவது யார் - சிவாஜி எதற்காகச் சுடப்பட்டார் என்பதைக் காட்ட மாட்டார்கள். அது தான் கதையே !

இவராக இருக்குமா – இல்லை இவராக இருக்குமோ என்று சிவாஜி கதாபாத்தி ரத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவரும் கொலை செய்திருக்கக்கூடிய வாய்ப்புகளை யூகித்து, சித்தரித்து படம் நகரும். அந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் சிவாஜியைக் கொலை செய்வதற்கு தேவையான அளவிற்கு தகுந்த காரணங்கள் இருக்கும்.

கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில், சுடுவது அவரது மனைவியே தான் என்று காட்டுவார்கள். படம் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் – அடிப்பாவி ! சண்டாளி -கணவனையே கொன்று விட்டாளே என்று திட்டுவார்கள்.

ஆனால் – அதற்கும் உச்ச கட்ட க்ளைமாக்ஸாக அந்த மனைவி ஏன் கட்டிய புருஷனைக் கொன்றாள் என்பதையும் காட்டுவார்கள். கணவனை விட, தன் தாய் நாட்டை அதிகமாக நேசிக்கும் பெண் அவள். கணவனால் தாய் நாட்டுக்கு ஆபத்து வரும்போது, நாட்டைக் காக்க வேறு வழி இல்லாத நிலையில் கணவனையே சுட்டுக்கொன்று விடுகிறாள். படம் இங்கு முடிவடைந்து விடுகிறது.


(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)


வளரும்.

நன்றி. விமரிசனம் – காவிரிமைந்தன்

1 comment:

Jayakumar Chandrasekaran said...

தமிழ் மக்கள் ஈழமக்களுக்கு எதிரல்ல. அதே சமயம் விடுதலைப் புலிகளுக்கும் ஈழத் தமிழர்க்கும் உற்ற துணையும் அல்ல. எழத்தமிழர் பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்பதே அவர்களுடைய மனப்பான்மை.