Wednesday, January 4, 2012

பெண் டாக்டரை கொலை செய்த ஆட்டோ டிரைவர் - கொன்றது ஏன்?



தூத்துக்குடியில் இரவு சிகிச்சை அளித்து கொண்டிருந்த பெண் டாக்டர் ஒருவர் வாளால் வெட்டியும், குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் துப்பு துலங்கியது.

கர்ப்பிணி மனைவி இறந்ததால் ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களுடன் வந்து இந்த வெறியாட்டத்தை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாகி விட்ட அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெண் டாக்டரை வெட்டிக் கொலை செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி 3வது மைல் காமராஜர் நகரை சேர்ந்த பேராசிரியர் திருஞானசம்பந்தம் மனைவி சேதுலட்சுமி. இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் தலைமை டாக்டராக பணியாற்றினார். மேலும் தனியாக மருத்துவமனையும் நடத்தி வந்தார். இவரது மகள் பூரணசந்திரிகா அமெரிக்காவில் டாக்டராக உள்ளார். மகன் கோபிநாத் டெல்லியில் ஐஏஎஸ் படித்து வருகிறார்

தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த மகேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நித்யா. 6 மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 30ம் தேதி மதியம் திடீரென்று கை, கால் வீக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டார். உடனே அவரை மகேஷ் டாக்டர் சேதுலட்சுமியிடம் அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் சேதுலட்சுமி நித்யா வயிற்றில் உள்ள குழந்தை இறந்து விட்டது. உடனே ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாயின் உயிருக்கு ஆபத்து என்றார். இதற்கு மகேஷ் சம்மதிக்கவே ஆபரேசன் செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். அதன்பிறகு நித்யாவுக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து தனது மனைவியை வேறு மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்வதாகக் கூறிய அவர் நித்யாவை பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு நித்யா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனால் ஆத்தரிமடைந்த மகேஷ் தனது மனைவி சாவுக்கு டாக்டர் சேதுலட்சுமி தான் காரணம் என்று கருதினார். இதனால், ஆத்திரமடைந்த மகேஷ், டாக்டர் சேதுலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மகேஷை எச்சரித்து அனுப்பினர்.

கடந்த 31ம் தேதி மனைவி உடலை அடக்கம் செய்த பிறகு தனது நண்பர்களை சந்தித்த மகேஷ் அந்த டாக்டரை சும்மா விடக்கூடாது, எனது மனைவி எப்படி துடிதுடித்து இறந்தாளோ அதே போன்று டாக்டரை சாகடிக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார். அவரது நண்பர்கள் குருமுத்து, அப்பாஸ் மற்றும் ராஜாவும் இதற்கு சம்மதித்தனர்.

இதை தொடர்ந்து நேற்றிரவு 10.30 மணி அளவில் மகேஷ் தனது நண்பர்கள் இருவருடன் ஆட்டோவில் டாக்டர் சேதுலட்சுமி மருத்துவமனைக்கு சென்றார். நண்பர்கள் இருவர் வெளியில் நின்று கொள்ள, டாக்டர் சேதுலட்சுமி அறைக்குள் நுழைந்த மகேஷ் நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் சேதுலட்சுமியை அரிவாளால் கொடூரமாக வெட்டினார். இதில் துடிதுடித்து சேதுலட்சுமி இறந்தார். தடுத்த ஊழியர் வள்ளிக்கும் வெட்டு விழுந்தது. அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

தகவல்அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். தனிப்படையினர் நேற்று காலை குருமுத்து, அப்பாஸ் மற்றும் ராஜாவை கைது செய்தனர்.

மேலும் மதுரைக்கு தப்ப முயன்ற மகேஷையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பிரபல ரவுடியான மகேஷ் மீது 2006ல் ஒரு கொலை வழக்கு, 2008ல் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன .என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறில் புது அணை கட்டத் தேவையில்லை - நிபுணர் குழு. - புதிய அணை, கேரள காங்கிரஸ் பின்வாங்காது.



முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போதைய 136 அடி என்பதிலேயே நீடிக்கும் என்றும், 120 அடியாக குறைக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு திட்டவட்டமாக கூறி விட்டது.

மேலும், நிலநடுக்கத்தால் அணைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் ஐவர் குழு விட்டது.

மேலும், முல்லைப் பெரியாறு அணையை நவீனத் தொழில்நுட்பம் மூலம் பலப்படுத்தினால் போதும். புது அணை கட்ட வேண்டிய அவசியமே இல்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள நிதியமைச்சர் கேஎம் மாணி, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது கேரளாவின் உரிமை. அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையில் சமீபத்தில் நேரடியாக ஆய்வு நடத்திய தொழில்நுட்ப உறுப்பினர்கள் சி.டி.தத்தே, டி.கே.மேத்தா ஆகியோர் அடங்கிய குழு அளித்த ஆய்வறிக்கை நேற்று ஐவர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழக, கேரள வக்கீல்களின் வாதங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதன் முடிவில் கேரள அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட அனைத்து வாதங்களும் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் அறிவித்தார்.

அப்போது நீதிபதி கூறுகையில், தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் சி.டி.தத்தே மற்றும் டி.கே. மேத்தா ஆகியோர் ஆராய்ந்து அளித்த அந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், இடுக்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அணைக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

மேலும், முல்லைப் பெரியாறு, வைகை, சிறுதோணி உள்ளிட்ட அணைகள் சமீபத்திய நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டனவா என்று பார்த்த போது, எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. மேலும், முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது. இக்கருத்தை ஐவர் குழுவும் ஏற்கிறது.

தத்தேயும், மேத்தாவும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டனர் என்று கூறி, அவர்களை நீக்க வேண்டுமென்று கேரளா சார்பில் கூறிய புகாரில், உண்மையில்லை. எனவே இரு உறுப்பினர்களையும் குழுவிலிருந்து நீக்க முடியாது. கேரளாவின் புகார் நிராகரிக்கப்படுகிறது.

மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போதைய 136 அடி என்பதிலேயே நீடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அணையின் நீர்மட்டத்தை குறைப்பதா, வேண்டாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது தொடர்பாக கேரள எம்.பிக்கள் பிரதமருக்கு அளித்த மனு விவரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையில் உடைப்போ, விரிசலோ இல்லை என்று கேரள அரசின் வக்கீல்களே தெளிவாக கூறியுள்ளனர். எனவே இதையும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் ஐவர் குழு தனது அறிக்கையை தாக்கல்செய்ய கால அவகாசம் கேட்கப் போவதில்லை. பிப்ரவரி 28ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை குழு தாக்கல் செய்யும். அடுத்த கூட்டம் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் நடைபெறும். அதன் பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

தமிழகத்திற்குப் பெரும் சாதகம்

ஐவர் குழுவின் இந்த முடிவு தமிழகத்திற்கு பெரும் சாதகமானதாக கருதப்படுகிறது. கேரளா கூறிய அனைத்துப் புகார்களும், குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என்பது அம்பலமாகி விட்டதாலும், அதன் குற்றச்சாட்டுக்கள், கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டதாலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழகத்திற்குச் சாதகமாகவே தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முல்லைப் பெரியாறில் புது அணை கட்டத் தேவையில்லை - நிபுணர் குழு.

முல்லைப் பெரியாறு அணையை நவீனத் தொழில்நுட்பம் மூலம் பலப்படுத்தினால் போதும். புது அணை கட்ட வேண்டிய அவசியமே இல்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதையடுத்து சமீபத்தில் தொழில்நுட்ப நிபுணர்கள் சி.டி.தத்தே மற்றும் டி.கே. மேத்தா ஆகியோர் அடங்கிய குழு அணைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கையை நேற்று முன்தினம் அவர்கள் ஐவர் குழுவிடம் வழங்கினர். நேற்று இந்த ஆய்வறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஐவர் குழுத் தலைவர் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த்திடம் உறுப்பினர் தத்தே கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது. அதில் நிலநடுக்கத்தால் எந்த வகையான பாதிப்பும் ஏற்படவில்லை.

தற்போதைய அணையை மேலும் பலப்படுத்தினால் போதுமானது. அதற்கு நவீனத் தொழில்நுட்பங்கள் பல உள்ளன. அதைக் கடைப்பிடித்தால் போதும். உச்சநீதிமன்றம் கூறிய பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

தற்போதைய நிலையில் புதிய அணை கட்டுவதற்கான தேவையும் இல்லை, அவசியமும் இல்லை என்றார்.

புதிய அணைக்கான போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் - கேரள அமைச்சர் பேச்சு

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது கேரளாவின் உரிமை. அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று கேரள நிதியமைச்சர் கேஎம் மாணி கூறினார்.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கடந்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. அப்போது புதிய அணைக்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு சொந்தமான இடத்தில்தான் புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது கேரளாவின் உரிமை. தார்மீக அடிப்படையில் இதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.

உச்சநீதிமன்றத்தின் உயர்நிலை குழுவுக்கு கூட புதிய அணை கட்ட கூடாது என்று கூற உரிமை இல்லை. புதிய அணைக்கான போராட்டத்தில் இருந்து கேரள காங்கிரஸ் பின்வாங்காது.

தற்போது உள்ள அணை மிகவும் பலகீனமாக உள்ளது. இதனால் தான் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா வலியுறுத்தி வருகிறது. அணை பகுதியில் வசிக்கும் மக்களின் பீதியை போக்க ஓரே வழி புதிய அணை கட்டுவதுதான். கேரள மக்களின் அச்சத்தை தமிழ்நாடும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாணி கூறினார்..

Friday, December 30, 2011

உத்தான பாதாசனம், மகராசனம், புஜபாத பீடாசனம்.

உத்தான பாதாசனம்.
உத்தான பாதாசனம்

செய்முறை:

விரிப்பில் மல்லாந்து படுத்தநிலையில் இரு கைகளையும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டி வைக்கவும். உள்ளங்கைகள் இரண்டும் தரையோடு படியுமாறு வையுங்கள். முழங்கால் மடங்காமல் பாதங்களை தரைக்கு மேல் ஓரடி உயரம் மட்டும் தூக்கி, அப்படியே 15 வினாடிகள் நிலைநிறுத்துங்கள். அதற்குபிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வரவும். இயல்பான சுவாசத்தில் 2-3 தடவைகள் வரை தொடக்கத்தில் செய்தாலே போதுமானது.

பயன்கள்:

அடிவயிற்று உள்ளுறுப்புகளான மூத்திரக்காய்கள், பெண்ணின் கர்ப்பப்பை, சூலகங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றின் செயல்கள், விறுவிறுப்பாகும். தொந்தி, தொடைசதைகள் குறையும்.

பருவ வயதின் விளிம்பில் இருக்கும் மாணவர்களுக்கு `சொப்பன ஸ்கலிதம்' ஏற்படாது.


மகராசனம்.

மகராசனம்

செய்முறை (நிலை-1):

விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் சேர்த்து தலைக்கு பின்னால் பிடரியில் வைக்கவும். இரு முழங்கைகளையும் தரையோடு படிய வைத்து, இரு கால்களையும் முழங்கால் அளவு மடக்கி குத்திட்டு வையுங்கள். இரு பாதங்களையும் 2 அடி தூரம் பக்கவாட்டில் அகட்டிவைக்கவும்.

இரு முழங்கால்களும் வலப்பக்கமாக தரையில் படுமாறு பக்கவாட்டில் கொண்டு செல்லுங்கள். அதே சமயத்தில் தலையை இடதுபக்கமாக திருப்பவும். இதேநிலையில் இடுப்பு-புட்டப் பகுதியை வலப்பக்கம் தூக்கக்கூடாது. அடுத்தபடியாக-இதை அப்படியே, இயல்பான சுவாசத்தில் பக்கம் மாற்றி செய்யவும்.

செய்முறை (நிலை-2):

விரிப்பில் குப்புற படுத்த நிலையில் கால்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து நீட்டவும். இடுப்பு, மார்பை தரையோடு படுமாறு வைத்து முகத்தை நிமிர்த்தி மோவாயை கீழேவையுங்கள். வலதுகையை மடக்கி, இடது தோள் பட்டை- இடதுகையையும் மடக்கி, வலது தோள்பட்டையை தொடவும். இந்த நிலையில் இரு கைகளின் முழங்கையும், முதலையின் வாய் போல சேர்ந்திருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து பின்பு சாதாரண நிலைக்கு வரவும்.

பயன்கள்:

சிறுநீரக பிரச்சினைகள் அகலும். முதுகுதண்டில் வலி இராது.


புஜபாத பீடாசனம்.
புஜபாத பீடாசனம்

செய்முறை:

விரிப்பில் தலை வைத்து மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் உடலோடு ஒட்டி தரையில் வைக்கவும். இரு கால்களையும் முழங்கால் அளவு மடக்கி குதிகால்களை பிருஷ்ட பாகத்தில் படுமாறு வையுங்கள். கரங்களால் அந்தந்த பக்கத்து கணுக்கால்களை பிடித்து-பாதம், தலை, பிடரி, தோள்களை சற்று தரையில் அழுத்தவும்.

இடுப்பு, முதுகு தண்டு பகுதியை முடிந்தவரை மேல்நோக்கி தூங்குங்கள். இந்த நிலையில் இடுப்பு பகுதியை, முழங்கால் உயரத்துக்கு கொண்டு வரவும். இயல்பான சுவாசத்தில் இருந்து, பழைய நிலைக்கு வந்து ஆசனத்தை கலைத்து விடுங்கள்.

பயன்கள்:

புட்டப் பகுதியில் எடை குறையும். முதுகுவலி இராது. கால் நோய்கள் அணுகாது. மூத்திரக்காய், விந்துப்பை-கர்ப்பப்பை கோளாறுகள் அகலும்.

Wednesday, December 28, 2011

பகவத் கீதைக்கு தடை விதிக்கக் கோரும் மனு : ரஷ்ய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக பகவத் கீதைக்கு தடை விதிக்கக் கோரி சைபீரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தி லும் இது தொடர்பாக அமளி ஏற்பட்டது.

இதையடுத்து ரஷ்ய தூதரை தொடர்புகொண்ட வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த பிரச்னையை தீர்க்க இந்தியாவுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரும் உதவிசெய்வதாக உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து சைபீரிய நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

லோக்பால் மசோதா வாக்கெடுப்பின்போது அவையில் இல்லாத 20 காங். எம்.பிக்கள் - ராகுல் காந்தி அதிர்ச்சி !



லோக்பால் மசோதா ஒருபக்கம் நிறைவேறினாலும் காங்கிரஸுக்கு நேற்று ஷாக் கொடுத்தது, அரசியல்சாசன அந்தஸ்து தரும் மசோதா தோல்வி அடைந்ததுதான். இதை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. 273 உறுப்பினர்களைக் கூட திரட்ட முடியாமல் போனது ஒருபக்கம் இருந்தாலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் அவைக்கு வராமல் இருந்தது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று லோக்சபாவில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அந்த அமைப்புக்கு அரசியல்சாசன அந்தஸ்து தர வகை செய்யும் மசோதாவை அரசால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. இதற்குக் காரணம் அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லாமல் போனதே.

குறைந்தபட்சம் 273 உறுப்பினர்களாவது அவையில் இருக்க வேண்டும். ஆனால் நேற்று வெறும் 250 பேர்தான் இருந்தனர். இது காங்கிரஸை கடும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டது. அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. எனவே ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக கொடி தூக்க ஆரம்பித்து விட்டது.

லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து தரலாம் என்று ஐடியா கொடுத்ததே ராகுல்காந்திதான். அவரது ஐடியா எடுத்த எடுப்பிலேயே புஸ்வாணம் ஆனதால் அவரும் கடும் அதிருப்தியில் உள்ளார்.

நேற்று நடந்த வாக்கெடுப்பின்போது பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. அதேசமயம், காங்கிரஸ் எம்.பிக்களில் கிட்டத்தட்ட 20 பேர் அவையில் இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தும் கூட இந்த 20 பேரும் அவையில் இல்லாமல் போனது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

அரசியல் சட்ட திருத்த மசோதா தோல்வி - இது ராகுல் காந்திக்கு கிடைத்த படுதோல்வி !



மக்களவையில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு அரசியல் சாசன அந்தஸ்து தருவதற்காக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இதன் மூலம் அன்னா ஹசாரேவுக்கு கிட்டத்தட்ட அத்தனை அரசியல் கட்சிகளுமே எதிராக உள்ளதும் அம்பலமாகிவிட்டது.

லோக்பால் அமைப்புக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து தரும் திருத்த மசோதாவுக்கு 3 பிரிவுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்றால் அவையின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் அவையில் இருக்க வேண்டும். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரிப்பது கட்டாயமாகும்.

ஆனால், இந்த திருத்த மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.

ஆட்சியில் நீடிக்க உரிமையில்லை-பாஜக:

அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டதால் ஆட்சியில் நீடிக்கும் உரிமையை மத்திய அரசு இழந்துவிட்டதாக பாஜக மூத்தஸ தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

குறைந்தபட்சம் 273 வாக்குகளை கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து தரும் ஐடியாவைக் கொடுத்தவர் ராகுல் காந்தி என்பது நினைவிருக்கலாம். தேர்தல் ஆணையம் போல ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக லோக்பால் திகழ அதற்கு அரசியல்சாசன அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். அதன்படியே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இது தோல்வி அடைந்து விட்டது.

அதேசமயம், ஊழலை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Tuesday, December 27, 2011

நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் குற்றவாளிகள்- அன்னா கடும் சாடல்.



எனது உண்ணாவிரதத்தை நான் வாபஸ் பெற மாட்டேன். இறுதி வரை போராடுவேன். நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை பேருமே குற்றவாளிகள். எங்களை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. உ.பி. உள்பட சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் நான் பிரசாரம் செய்வேன் என்று கூறியுள்ளார் அன்னா ஹசாரே.

மும்பையில் இன்று காலை தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல், உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஹசாரே. அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டார்.

இன்று பிற்பகல் அன்னா பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாகவே நான் உணவு எதையும் உட்கொள்ளவில்லை. எனக்கு காய்ச்சல் இருப்பதாக இன்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் எனது நாட்டுக்காக எனது உயிரைக் கூட தியாகம் செய்ய நான் முடிவு செய்து விட்டேன். கடந்த 25 வருடமாக ஊழலுக்கு எதிராக நான் போராடி வருகிறேன். நான் மரணத்திற்குப் பயப்படவில்லை.

தேர்தல்கள் வருகின்றன. அந்த ஐந்து மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக நாம் பிரசாரம் செய்ய வேண்டும்.

விவசாயிகளின் நிலங்களைப் பறிக்க அரசுக்கு உரிமை இல்லை. கிராம சபையின் அனுமதியை அவர்கள் முதலில் பெற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை. நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் அத்தனை பேருமே குற்றவாளிகள். குண்டர்கள், ரவுடிகள்தான் இன்று அரசியலுக்கு வருகிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் நாடாளுமன்றம். மக்கள்தான் உயர்ந்தவர்கள். நாம்தான் இந்த நாட்டின் உரிமையாளர்கள். நாம்தான் இந்த நாட்டுக்காக எம்.பிக்களையும், எம்.எல்.ஏக்களையும் தேர்வு செய்கிறோம். அப்படி இருக்கும்போது அவர்களை வேண்டாம் என்று சொல்லவும் நமக்கு உரிமை தரப்பட வேண்டும்.

பண போதை, அதிகார போதையால் மத்திய அரசு பலமுறை நமக்குத் துரோகம் இழைத்துள்ளது. இதை பாபா ராம்தேவுக்கும் முன்பு அவர்கள் செய்தார்கள். எனது போராட்டத்தில் வந்து இணையுமாறு நான் ராம்தேவை அழைத்துள்ளேன். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம். நாளை அல்லது நாளை மறு நாள் அவர் நம்முடன் இணைய வருவார் என்றார் அன்னா.

கிரண் பேடி, கேஜ்ரிவால் கவலை

முன்னதாக தனது காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் தொடங்கியுள்ள அன்னா ஹசாரேவின் உடல் நலம் மோசமடைந்து வருவதால் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.

இதுகுறித்து கிரண் பேடிகூறுகையில், அன்னாவின் உடல் நிலை சரியில்லை. அவருக்கு காய்ச்சல் அடிக்கிறது. அவர்தனது உண்ணாவிரதத்தை மட்டும் நிறுத்திக் கொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

இன்னொரு உறுப்பினரான மனீஷ் சிசோடியா கூறுகையில், அன்னாவின் மோசமடைந்து வரும் உடல் நிலை எங்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்றார்.

அதேபோல அரவிந்த் கேஜ்ரிவாலும், அன்னா தனது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அன்னா தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளோம். தற்போது அன்னாவுடன் நாங்களும் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம் என்றார்.