Sunday, December 18, 2011

தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் உலகத் தமிழினம் பொங்கி எழும் - கனடா படைப்பாளிகள் கழகம்.



டோரன்டோ, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்கு கனடா படைப்பாளிகள் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் உலகத் தமிழினம் பொங்கி எழும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் உள்ள மிகப் பெரிய மற்றும் மிக முக்கிய தமிழர் அமைப்புகளில் ஒன்று கனடா படைப்பாளிகள் கழகம். இந்த அமைப்பு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இந்த அமைப்பு தற்போது தமிழகம் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சியினையில் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் கனடாவைச் சேர்ந்த 3 லட்சம் தமிழர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தைத் தாண்டி சர்வதேச அமைப்பு ஒன்று தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை தங்கவேலு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், தந்தை செல்வா ஆகியோருக்கு நெருக்கமானவர். தமிழீழத்தின் முக்கிய அரசியல் இலக்கிய விமர்சகருமாவார்.

அறிக்கை விவரம்:

’’தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் உலகத் தமிழினம் பொங்கி எழும்!

ஏழு கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்களையும்பு லம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் கூட்டிப் பார்த்தால் உலகில் 8 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள்.

தமிழனுக்கு ஒரு இறைமையுள்ள நாடு இல்லாத காரணத்தால்தான் தமிழன் உதைபடுகிறான், வதைபடுகிறான். தமிழன் என்றால் ஏதிலி என்று உலகம் நினைக்கிறது.

இந்தியத் திருநாட்டில் தமிழன் கன்னடம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இருந்து அடித்து உதைத்து விரட்டப்படுகிறான். இப்போது தமிழர்களை உதைத்து வெளியேற்றுவதில் பக்கத்தில் உள்ள கேரளாவும் சேர்ந்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணை பலமாக இல்லை என்றும் அது எந்த நேரத்திலும் உடையலாம் என்றும் அதனால் அதனை இடித்துவிட்டு வேறு அணை கட்டப்போவதாக கேரளாக்காரர்கள் சொல்கிறார்கள்.

முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாகவும் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை முடித்த பின் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

அந்த ஆணையை இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அந்தத் தீர்ப்பை செல்லாக்காசு ஆக்கிவிட்டது!

இன்றைய கேரளா பழைய சேர நாடாகும். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் சேரநாட்டவர். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் வீரம், படைத்திறன், ஆட்சி முறை, கொடை, சமுதாயம், பண்பாடு, மன்னர்களின் பண்பு நலன்கள், அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறது.

இடைக் காலத்தில் வடநாட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்களின் குடியேற்றத்தால் மொழிக்கலப்பு ஏற்பட்டு சேரநாட்டுத் தமிழ் மலையாளம் எனத் திரிந்து புது மொழியாயிற்று. அந்த மொழிக்கு வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றி இலக்கணம் எழுதப்பட்டது.

முல்லைப்பெரியார் அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மக்கள் வாழ முடியாத பாலைவனமாக மாறிவிடும். இதில் தலையிட்டு நீதி செய்ய வேண்டிய மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. இதனை நாம் பலமாகக் கண்டிக்கிறோம்.

கேரளாவுக்கு வேண்டிய உணவு தமிழ்நாட்டில் இருந்துதான் போகிறது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது முற்றிலும் தமிழர்கள் வாழும் பீர்மேடு, தேவிகுளம், இடுக்கி மாவட்டங்கள் கேராளாவோடு இணைக்கப்பட்டன.

இந்திய தேசிய மாயையில் இருந்த காமராசர், மேடாவது குளமாவது எல்லாம் இந்தியாவில் இருக்கின்றன என்று வேதாந்தம் பேசியதால் தமிழர்கள் இந்த மாவட்டங்களை இழந்தார்கள்.

தமிழ்நாடு சட்டசபையில் முல்லைப் பெரியாறை இடிக்கக் கூடாது, புதிய அணையை கேரளா கட்டக் கூடாது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அணையின் உயரம் 136 இல் இருந்து 142 ஆக உயர்த்தப் பட வேண்டும் எனக் கேட்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.

இப்போது முல்லைப் பெரியார் அணையை அண்டியுள்ள மக்கள் அரசியல் கட்சிகளை முந்திக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளார்கள். ஆனால் கேரளாவைப் போலல்லாது தமிழக அரசின் காவல்துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது.

மலையாளிகளுக்குச் சொந்தமான கடைகளைத் தாக்கினார்கள் என்ற குற்ச்சாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கேரளவில் உள்ள இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என மாநில அரசு மத்திய அசை வற்புறுத்த வேண்டும். தேவை ஏற்படின் ஒரு நேரடி வாக்கெடுப்பின் மூலம் மக்களது விருப்பத்தை அறிய வேண்டும்.

கேரளாவிலும் தமிழகத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்ளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். உடைமைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்.

தமிழக அரசு தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டு தமிழர் சார்பாகச் செயல் படவேண்டும். கேரளா அரசு மலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போல் தமிழக அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல் படவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் என்பதை இந்த நேரத்தில் கனடாவில் வாழ்கின்ற மூன்று இலச்சம் தமிழர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

மளையாள மத்திய அமைச்சர்களின் நெருக்குதலைத் தொடர்ந்து கேரள இடைத்தேர்தல் பற்றி பேசியதை வாபஸ் பெற்றார் ப.சிதம்பரம்.



கேரளத்தைச் சேர்ந்த மலையாளக் கட்சிகள், அரசியல்தலைவர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தான் கூறிய கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாபஸ் பெற்றுள்ளார். தேவையில்லாமல் தான் பேசி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

உம்மன்சாண்டி, வயலார்ரவி உள்ளிட்ட மளையாள காஙுகிரசார், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த மளையாள மத்திய அமைச்சர்களின் கடும்கண்டனமும், எதிர்ப்பும், நெருக்குதலைத் தொடர்ந்தே ப.சிதம்பரம் பல்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கேரளா முழுவதும் ப.சிதம்பரத்தின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’சென்னையில் 17-12-2011 அன்று நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நான் பேசினேன். எனது பேச்சு சில பத்திரிகைகளில் முழுமையாக வெளியாகி உள்ளன. எனது முழுமையான பேச்சை தமிழக-கேரள மக்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொருவரும், கவுரவம், கட்டுப்பாடு மற்றும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று எனது பேச்சில் கேட்டுக் கொண்டேன். முல்லைப் பெரியாறு அணை குறித்த அச்சம் நியாயமானது அல்ல. அதே சமயம் அணையின் பாதுகாப்பு குறித்த இரு மாநில மக்களின் அச்சத்தை போக்குவதும் மத்திய அரசின் கடமை என்றும் குறிப்பிட்டேன்.

அணையின் பாதுகாப்பு என்பது கேரளாவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் கவலை அளிக்ககூடிய விஷயம்தான். முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

அந்த குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதுவரையில் அனைவரும் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மற்ற பேச்சாளர்கள் தான் சுட்டிக் காட்டியது போல நானும் அங்கு (கேரளாவில்) இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், இந்த பிரச்சினை பெரிதாக்கப்படுவதாக கூறினேன். அந்த கருத்தை திரும்ப பெறுகிறேன்.

அப்படி நான் கூறியது தேவையற்ற கருத்து. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. இரண்டு மாநில மக்களின் ஒத்துழைப்பு, மற்றும் சகோதரத்துவம் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Saturday, December 17, 2011

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை : 13வது நாளாக போராட்டம் நீடிப்பு ; கூடலூரில் பிரமாண்ட பேரணி.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை: 13வது நாளாக போராட்டம் நீடிப்பு; கூடலூரில் பிரமாண்ட பேரணி

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்க வேண்டும். கேரள அரசு புதிய அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக மறியல், பேரணி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடந்து வருகின்றன.

பேரணி - ஆர்ப்பாட்டம் கம்பம், கூடலூர், போடி வழியாக கேரளாவுக்கு பஸ் மற்றும் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கம்பம், கூடலூர் பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

தற்போது அரையாண்டு தேர்வு நடப்பதால் பள்ளிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி ஆகிய பகுதிகளில் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று கம்பம் நகரம் குலுங்கும் வகையில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடந்தது.

அதே போல குமுளி செல்லும் வழியில் உள்ள கூடலூரில் இன்று பிரமாண்டமான முறையில் அமைதி பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது. 30 ஆயிரம் பேர் திரண்டனர் கூடலூர் பழைய பஸ் நிலையம் முன்பிருந்து பேரணி புறப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆண்களும், பெண்களும் அணி, அணியாக திரண்டு வந்தனர்.

10 மணி அளவில் 20 ஆயிரம் பேர் திரண்டனர். நேரம் செல்ல செல்ல பேரணியில் கலந்து கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கேரள அரசை கண்டித்தும், முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தீர்வு காணும் வரையில் கேரளாவுக்கு செல்லும் 13 எல்லை சாலைகளை மூட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

பேரணி குமுளி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கை அடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த பேரணியில் கூடலூர் பகுதி அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், பாங்கி ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள், அனைத்து தரப்பு மக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்கனவே கூடலூர் பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் இன்று பேரணி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். போராட்டக்காரர்களை குமுளி எல்லைக்கு செல்ல விடாமல் தடுக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே போடியில் அனைத்து மகசூல் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர் நல சங்கத்தினர் திருவள்ளுவர் சிலை அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் இன்று விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் `டேம் 999' படத்துக்கு 6 மாதம் தடை நீடிப்பு.

தமிழ்நாட்டில் `டேம் 999' படத்துக்கு 6 மாதம் தடை நீடிப்பு

முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் தயாரான `டேம் 999' படத் துக்கு தமிழகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது என அனைத்து கட்சிகளும் வற்புறுத்தின. இதையடுத்து தமிழ்நாட்டில் டேம் 999 படத்தை திரையிட அரசு தடை விதித்தது.

இந்த தடைக்கான ஆணை நவம்பர் 24-ல் பிறப்பிக்கப்பட்டது. முதலில் 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டது.

தற்போது இந்த தடை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி `டேம் 999' படத்தின் இயக்குனர் சோஹன் ராய் கூறும்போது, நாங்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு போவதை தவிர வேறு வழியில்லை என்றார்.

முல்லை பெரியாறு விவகாரத்தில் பிடிவாதம் : கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: இளங்கோவன் ஆவேச பேச்சு.

முல்லை பெரியாறு விவகாரத்தில் பிடிவாதம்: கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: இளங்கோவன் ஆவேச பேச்சு

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பிறந்த நாள் விழா, கூடங்குளம் - முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்த விளக்க கூட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் இளங்கோவன் பேசியதாவது:-

இங்கே பேசிய தலைவர்கள் முல்லைப்பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சினைகள் குறித்து பல்வேறு கண்ணோட்டத்துடன் பேசினார்கள்.

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது வரை எந்த பிரச்சினையும் இல்லை.

1967-ம் ஆண்டுக்கு பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சி நடந்தபோதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினை உருவாகி 146 அடியில் இருந்து 136 அடியாக நீர்மட்டத்தை குறைத்தனர்.

எம்.ஜி.ஆர். ஆட்சியின் போதுதான் இது உருவானது.

எனவே முல்லைப் பெரியாறு விஷயம் பிரச்சினை ஆனதற்கு திராவிட கட்சிகள்தான் காரணமாகும். அது 3 எழுத்து கட்சியாகவும் இருக்கலாம், 4,5 எழுத்து கட்சியாகவும் இருக்கலாம். அதில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. மொத்தத்தில் இன்று கேரள அரசுக்கு இளிச்சவாயராக நாம் காட்சி அளிக்கிறோம்.

அங்கு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசாங்கம்தான் பிரச்சினையை உருவாக்கி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேட்க மறுக்கிறார்கள் எனவே இதில் மத்திய அரசு தலையிட வேண்டும். மத்திய அரசுக்கும் கேரளா அரசு பணியாது. எனவே கேரள அரசை “டிஸ்மிஸ்” செய்ய வேண்டும். “டிஸ்மிஸ்” செய்வது நமக்கு புதிதல்ல. கேரளாவுக்கும் புதிதல்ல.

மேடையில் இருக்கிற மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசனுக்கு இக்கட்டான சூழ்நிலையை நான் உருவாக்க விரும்பவில்லை.

தமிழ்நாட்டுக்கு கேரளா கேடு விளைவிக்கும்போது உம்மன்சாண்டியை அங்கே முதல்- அமைச்சராக உட்கார வைக்க கூடாது.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து அல்ல. இதை அவர்கள் ஏற்கவும் மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.


எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வு முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், தேர்வில் மதிப்பெண் பெறும் முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது.

புதிய விதிமுறையின்படி, ஜெனரல் சர்ஜரி, என்ற பாடப்பிரிவை கிளினிக்கல் சர்ஜரி, ஆர்த்தோ கிளினிக்கல் என்று இரு பிரிவாக பிரித்து, கிளினிக்கல் சர்ஜரியில் குறைந்தபட்சம் 100க்கு 50 மதிப்பெண்ணும், ஆர்த்தோ கிளினிக்கல் பாடத்தில் குறைந்தபட்சம் 50க்கு 25 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பெற்றால்தான் அந்த மாணவர் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்றும் மாற்றப்பட்டது.

இந்த புதிய மதிப்பெண் விதிமுறை தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஜோதிமணி, எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வு முறையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வகுத்துள்ள புதிய விதிமுறை செல்லாது என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களை இண்டென்சிப் எனும் பயிற்சி மருத்துவர் பணிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கடந்த ஜீன்மாதம் தீர்ப்பு கூறி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ்.சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் கொண்டு வந்த புதியவிதி முறை செல்லாது என்றும், தனி நீதிபதி பி.ஜோதிமணி, வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும், கடந்த நவம்பர் மாதம் 16ந்தேதி தீர்ப்பு கூறி, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பினை எதிர்த்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வு குறித்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறைகள் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதால் அந்த விதிமுறைகள் செல்லாது என்று, நேற்று டிசம்பர் 16ந்தேதி தீர்ப்பு கூறியது.

மேலும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கொண்டு வந்த விதிமுறைகள் மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும், மாநிலத்துக்கு மாநிலம் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளை மாற்றக் கூடாது என்றும், நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

முன்னதாக நீதிபதிகள் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ்., பொது நுழைவுத் தேர்வு : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டிப்பு.



"எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவதற்கு, நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை, ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, மத்திய அரசு விடுத்த வேண்டுகோளுக்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. நுழைவுத் தேர்வு நடத்துவதில் அரசுக்கு அக்கறையில்லை என்றும் விமர்சித்தது.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர, பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, தமிழகம் உட்பட சில மாநிலங்கள், கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுகலை மருத்துவ படிப்பில் சேர விரும்புபவர்களுக்கு, நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இந்திய மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

இந்த சூழலில், மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "பொது நுழைவுத் தேர்வு முறைக்கு மாற, சில மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன. இந்திய மருத்துவ கவுன்சிலால் வரையறுக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள, மாணவர்களுக்கு அவகாசம் தேவை என நினைக்கின்றன. எனவே, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைத்து, 2013ம் ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டும்' எனக் கோரியது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் டாட்டு மற்றும் சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவதற்கு நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில், மத்திய அரசுக்கு அக்கறையில்லை. ஒன்று மத்திய அரசின் மனுவை நாங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசே மனுவை வாபஸ் பெற வேண்டும். இதில் எதைச் செய்ய அரசு விரும்புகிறதோ அதைச் செய்யலாம். அரசின் முடிவில் ஒரு அங்கமாக நாங்கள் இருக்க விரும்பவில்லை.

மத்திய அரசின் கருத்துக்களைக் கேட்ட பின்னரே, பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டோம். நாங்கள் கருத்து கேட்ட போது, பொது நுழைவுத் தேர்வு தொடர்பான வரைவு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், வரும் 2012-13ம் நிதியாண்டிலேயே அமல்படுத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்தீர்கள். இப்போது வேறு காரணம் சொல்கிறீர்கள். இந்த விவகாரத்தை ஏன், கோர்ட்டிற்கு கொண்டு வருகிறீர்கள். இந்த மனுவை நீங்கள் வாபஸ் பெறுவதே சரியாக இருக்கும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.