Monday, October 24, 2011

வாய் கிழியப் பேசும் காங்கிரஸின், பலம் - வாயைப் பிளந்தது. - தட்ஸ் தமிழ்.



நாங்கள் இல்லாவிட்டால் ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது, எதையும் செய்ய முடியாது என்று வாய் கிழியப் பேசி வந்த காங்கிரஸாருக்கு இப்போது உள்ளாட்சித் தேர்தலில் சம்மட்டி அடி கிடைத்துள்ளது. இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம். காமராஜரோடு காங்கிரஸ் கரையறி விட்டது என்பதை மக்கள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர் தேர்தல் முடிவு மூலம்.

தமிழகத்தில் ஓசியிலேயே உடம்பேற்றி வந்த ஒரே கட்சி எது என்றால் அது காங்கிரஸ்தான் என்பதை கருவில் இருக்கும் சிசு கூட கரெக்டாக சொல்லி விடும். ஆனால் இதை காங்கிரஸார் மட்டும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். மாறாக, நாங்கள் யாருடன் இருக்கிறோமோ அவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் ஆதரவு தரும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கோஷ்டி கோஷ்டியாக கானம் பாடி வருவார்கள்.

ஆனால் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையாகி விட்டது தமிழக காங்கிரஸின் நிலை. ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பிடிக்கத் திராணியில்லாத கட்சியாக கிழிந்த வேட்டி போல காட்சி தருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது இதுவரை நடந்திராத ஒன்று என்றே கூறலாம். காரணம், திமுக அல்லது அதிமுக என யாருடைய முதுகிலாவது ஏறி, ஓசி சவாரி செய்வதுதான் அந்தக் கட்சிக்கு வசதியானதாக இருந்தது. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கதர்ச் சட்டை கசங்காமல் பாலிட்டிக்ஸ் செய்து பழக்கப்பட்டவர்கள் காங்கிரஸார் (காங்கிரஸார் என்று இங்கு நாம் கூறுவது தலைவர்களை -தொண்டர்களை அல்ல).

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி, கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்று கூறிக் கூறியே வேண்டிய சீட்களைப் பெற்று ஓசி பலத்தில் ஊறுகாய் போட்டு வந்தவர்கள் இவர்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில், திமுகவிடம், 2ஜி விவகாரத்தைக் காட்டிக் காட்டியே சீட் கறந்த காங்கிரஸின் பிடிவாதப் பேரத்தைப் பார்த்து மாற்றுக் கட்சியினரும் கூட கொந்தளித்துப் போனார்கள். இப்படி நீ சோறு கொடு, நீ குழம்பு கொடு, நான் உட்கார்ந்து சாப்பிடுகிறேன் கதையாக படு சோம்பேறித்தனமாக அரசியல் செய்துவந்த காங்கிரஸ் இன்று உள்ளாட்சித் தேர்தலில் தலை முதல் பாதம் வரை படு அடியை வாங்கி பம்மிப் போய்க் கிடக்கிறது.

இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம் என்பதைமக்கள் காட்டி விட்டார்கள். பத்து மாநகராட்சிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட 2வது இடத்தைப் பிடிக்கவில்லை. பல இடங்களில் 3வது இடத்தைக் கூடப் பி்டிக்கவில்லை. மொத்தமே 17 கவுன்சிலர்கள்தான் இக்கட்சிக்குக் கிடைத்துள்ளனர்.

அதை விடக் கேவலமாக கொடிகாத்த குமரனைத் தந்த திருப்பூரில் ஒரு கவுன்சிலர் கூட காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. இது நிஜமான காங்கிரஸாருக்கு பெரும் வேதனை தரும் செய்தியாகும். காங்கிரஸுக்கென்று ஒரு தொண்டர் வட்டம் உள்ள மதுரையிலும் முட்டைதான். சேலத்திலும் ஒன்றும் இல்லை.

அதே போல 125 நகராட்சிகளில் தேர்தல் நடந்த 124 நகராட்சிகளில் ஒரு இடத்தில் கூட தலைவர் பதவியைப் பிடிக்கவில்லை காங்கிரஸ். காங்கிரஸின் பாரம்பரியப் பகுதிகளான ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் கூட அந்தக் கட்சியால் தனித்து வெல்ல முடியாமல் போனது கேவலத்திலும் படு கேவலமாகும்.

சரி பேரூராட்சியிலாவது ஏதாவது பெயருமா என்று பார்த்தால் மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி கிடைத்துள்ளது.

இப்படி எங்குமே காங்கிரஸுக்கு சிறப்பு கிடைக்கவில்லை. மாறாக போன இடங்களில் எல்லாம் மக்களிடமிருந்து பட்டை நாமம்தான் கிடைத்துள்ளது.

வாழ்ந்தால் வாழை மரம் போல வாழ வேண்டும் என்பார்கள். வாழை மரத்தில்தான் அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன்படும். ஆனால் காங்கிரஸோ, பார்த்தீனியம் செடி போலத்தான் இத்தனை நாளாக இருந்துள்ளது. அதாவது மற்ற கட்சிகளின் பலத்தைப் பெற்று இது வாழ்ந்து வந்துள்ளது. இந்த கட்சியால் எந்தக் கட்சிக்கும் உண்மையில் லாபம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் கூட காங்கிரஸார் உண்மையில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதை காங்கிரஸாரே ஒத்துக் கொள்வார்கள்.

இந்தத் தேர்தலின் மூ்லம் திராவிடக் கட்சிகளான திமுகவுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி கிடைத்துள்ள முக்கியப் பாடம் என்னவென்றால் -இத்தனை காலமாக, அடிப்படையே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான இடம் கொடுத்து வி்ட்டோம் என்பதுதான்.

தமிழர்கள் பாடுபட்டபோதெல்லாம், பரிதவித்த போதெல்லாம், துடித்து துவண்டபோதெல்லாம், உயிரை இழந்து உருக்குலைந்து போனபோதெல்லாம் உதவாமல் போனதுதான் காங்கிரஸின் கை. தமிழகத்திலும் கூட தமிழகத்தின் எந்தப் பிரச்சினைக்கும் காங்கிரஸ் உதவிக்கு வந்ததில்லை. மாறாக தமிழகத்தின் பிரச்சினைகளிலெல்லாம் நழுவிப் போனது அல்லது இரட்டை வேடம் போட்டு ஏமாற்றியது.

தமிழகத்தின் நதி நீர்ப் பிரச்சினையாகட்டும், வேறு எந்தப் பிரச்சினையாகட்டும் காங்கிரஸ் உதவியது என்பது வரலாற்றிலேயே கிடையாது. கூட்டணி சேர வேண்டும், கூட்டாஞ்சோறு ஆக்கி நாம் மட்டும் நாம் மட்டும் நன்றாக சாப்பிட வேண்டும். இதுதான் காங்கிரஸின் ஒரே குறிக்கோளாக இருந்தது.

இந்தப் படு தோல்வி இப்படியே நின்று விடக் கூடாது. பொறுப்பான, தமிழகத்திற்கு உதவக் கூடிய தமிழர்களுக்கு உறுதுணையான உண்மையான அரசியல் கட்சியாக காங்கிரஸ் மீண்டும் மாறும் வரை மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.

இதுதாம்ப்பா காங்கிரஸ் என்பதை மக்கள் காட்டி விட்டார்கள். இனியாவது திராவிடக் கட்சிகள் விழிப்புடன் இருந்து, காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Wednesday, October 12, 2011

ஊர்த்துவ பத்மாசனம், பர்வதாசனம், குப்த பத்மாசனம்.

ஊர்த்துவ பத்மாசனம்.
ஊர்த்துவ பத்மாசனம்

செய்முறை:

முதலாவதாக, பத்மாசன நிலையில் அமரவும். இரண்டு முழங்கால்களையும், மார்பு வரையில் தூக்குங்கள். அப்போது உங்களின் கரங்கள் கும்பிட்டநிலையில், கால் மூட்டுக்களை ஒட்டினாற்போல இருக்கட்டும். அடுத்தபடியாக, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, ஒட்டுமொத்த உடம்பையும் பத்மாசன நிலையில், அப்படியே தூக்கவும்.

பயன்கள்:

தோள்பட்டை வலுப்பெறும். உடல் எடை குறையும். கைவிரல்கள் உறுதியாகும். விரல் நடுக்க நோய் நீங்கும். எழுத்து-தட்டச்சு துறையில் இருக்கும் அத்தனை பேருக்கும், ஊர்த்துவ பத்மாசனம், மகத்தான பலன்களை அள்ளித்தரும்.


பர்வதாசனம்.
பர்வதாசனம்

செய்முறை:

முதலாவதாக, படத்தில் உள்ளபடி பத்மாசனநிலையில் அமரவும். இரு கைகளையும் அப்படியே தலைக்கு மேல் தூக்கி, கும்பிட்டநிலையில், கால்மூட்டுகளின் பலத்தில், மெல்ல எழுந்திருக்க முயலவும். ஆழ்ந்த சுவாசத்தில் 15 விநாடி இருந்து மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

நுரையீரல்-இதய நோய்கள் அணுகாது. மாரடைப்பு வராது. ரத்தக்குழாய் அடைப்பை தவிர்க்கலாம். ஆஸ்துமா தொந்தரவுகள் நீங்கும். தோள்பட்டைகள் வலிவும், வனப்பும் பெறும்.


குப்த பத்மாசனம்.
குப்த பத்மாசனம்

செய்முறை:

முதலாவதாக, பத்மாசனநிலையில் அமரவும். வலதுகையை முன்புறமாகவும், இடது கையை பின்புறமாகவும் ஊன்றிய நிலையில், இடுப்பை தூக்கி உடலை முன்னே கொண்டு வந்து குப்புறபடுங்கள். முகம் நேராக இருக்குமாறு செய்ய வேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேல் கொண்டு போய் கும்பிட்ட நிலையில் கையை ஒன்றிணைக்கவும். உங்களின் மோவாய், தரையை பார்த்திருக்கட்டும். ஆசனத்தின்போது, சுவாசம் இயல்பாக இருக்கவேண்டியது முக்கியம்.

பயன்கள்:

முதுகு தண்டு வலுப்பெறும். முதுகு வலி, பிடரி வலிக்காரர்களுக்கு `கண்கண்ட' மருந்து, தொந்தியும் குறையும்.

Monday, October 10, 2011

எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு வகுப்பு தொடக்கம் ஒத்திவைப்பு.



சென்னை, அக்.9: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடங்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு முடிவு சர்ச்சைக்குள்ளாகி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதையடுத்து இரண்டாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்குவது காலதாமதமாகியுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் (2010-11) சேர்ந்த எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆகஸ்ட்டில் தேர்வு நடைபெற்றது. எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு பாடங்களான "அனாடமி', "ஃபிஸியாலஜி', "பயோகெமிஸ்ட்ரி' ஆகியவற்றின் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்ச மதிப்பெண் 50 எடுத்தால்தான் தேர்ச்சி என தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு புதிதாக நிர்ணயித்தது.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த வாரம் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டது. குறைந்தபட்ச மதிப்பெண் காரணமாக பல மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை, முதலாம் ஆண்டு பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெறாவிட்டால், 2-ம் ஆண்டுக்கு செல்ல முடியாத அளவுக்கு "பிரேக் சிஸ்டம்' நடைமுறையில் உள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு முடிவு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாத பல மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இணையதளத்திலிருந்து நீக்கம்: தேர்வு முடிவு சர்ச்சையானதைத் தொடர்ந்து, இணையதளத்தில் வெளியிட்ட தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் நீக்கி விட்டது. மேலும் தேர்ச்சி பெற்றதை உறுதிப்படுத்தும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களையும் மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் இதுவரை அனுப்பவில்லை.இதனால், எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற்று 2-ம் ஆண்டுக்குச் செல்லும் மாணவர்கள் யார், தேர்ச்சி பெறாமல் முதலாம் ஆண்டிலேயே தொடரும் மாணவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே திட்டமிருந்தபடி எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு வகுப்புகளை திங்கள்கிழமை (அக்டோபர் 10) தொடங்குவதை ஒத்திவைக்க அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர்.

நன்றி
தினமணி, 10-10-2011

Sunday, October 9, 2011

மாமியார் கொடுமை : மருமகன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது.



சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்காரர் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். நெசவு தொழிலாளியான இவருக்கும், சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் மீனாட்சிக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த வாரம் சென்னையில் அவரது மனைவி மீனாட்சிக்கு பெண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்ததும் குணசேகரனும், அவரது தாயாரும் குழந்தையை பார்க்க சென்றனர்.

அப்போது மீனாட்சியின் பெற்றோர் அவர்களை மதிக்காமல் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையுடன் சேலம் வந்த குணசேகரன் கடந்த 6-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உருக்கமான கடிதம் சிக்கியது

அப்போது குணசேகரனின் எழுதி வைத்திருந்த 13 பக்க உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில்,’’நான் எட்டாம் வகுப்பு வரை படித்து இருக்கிறேன். தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் டி.டி.பி. கோர்ஸ் படித்து முடித்து இருக்கிறேன்.

இதை தெரிந்துதான் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணம் நடந்த நாளில் இருந்தே என்னிடம், ’உனக்கு அவசரப்பட்டு திருமணம் செய்து வைத்து விட்டோம். அதிகமாய் படித்து பணக்கார ஆண் மகனாய் பார்த்து எனது மகளை திருமணம் செய்து இருக்க வேண்டும்’ என்று கூறி எனது மாமியார் என் மனதை காயப்படுத்தினார்.

ஒருநாள் குடும்பத்தகராறு காரணமாக எனது மனைவியை குமாரபாளையத்தில் உள்ள அவரது அக்காள் வாணி வீட்டில் விட்டுவிட்டனர். இதை அறிந்து என் நண்பர் மூலம் எனது மாமனாரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்கு அவர்,

’நான் நினைத்தால் 5 நிமிடத்தில் வரதட்சணை கொடுமை என்ற பெயரில் உன்னையும், உன் குடும்பத்தினரையும் உள்ளே தள்ளி விடுவேன். நீ ஒருத்தியை வைப்பாட்டியாக வைத்து இருக்கிறாய் என்று கூறி வெளியே வரமுடியாதபடி செய்து விடுவேன்’ என்று கூறி மிரட்டினார்.

எனது மனைவியை சந்தித்து பேசியபோது, நீ எனக்கு தேவையில்லை. எனது தாய், தந்தையர்தான் எனக்கு முக்கியம் என்று கூறிவிட்டாள். பின்னர் கர்ப்பிணியான என் மனைவியை சென்னைக்கு அழைத்துச்சென்று விட்டனர். நானும் அங்கு சென்று 5 நாட்கள் தங்கி இருந்தேன்.

அப்போது என் மனைவியின் எதிரிலேயே என்னை ஜாடை, மாடையாய் திட்டினார். மேலும் என் மனைவி இல்லாதபோது, நீ ஊருக்கு போ. இங்கே இருக்க வேண்டாம். குழந்தை பிறந்தால் நாங்களே சொல்கிறோம். நீ இங்கே இருந்தால் என் மகளின் மனதை மாற்றி உன்னோடு அழைத்து சென்று விடுவாய் என்று என் மாமியார் கூறினார். நானும் ஊருக்கு வந்து விட்டேன்.

சென்ற 4-ந் தேதி காலை 8.11 மணிக்கு என் மனைவி பெண் குழந்தை பெற்றெடுத்தாள். எனக்கு மதியம் 3.30 மணிக்கு தகவல் தந்தனர். நானும், என் அம்மாவும் அன்று இரவே சென்னைக்கு சென்றோம்.

என் குழந்தையை பார்த்து நான் மிகவும் சந்தோஷமடைந்தேன். இந்த சந்தோஷம் சில நிமிட நேரம்தான். என்னிடம் தனியாக பேசிய மீனாவின் அம்மா, ’குழந்தையை பார்த்துவிட்டு உடனே நீ செல்லவேண்டும். என் பெண்ணிடம் நீ எதுவும் பேசக்கூடாது.

உன் குழந்தை எங்கள் பெண்ணுக்கு தேவையில்லை. அதை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறோம்’ என்றார்.மேலும், என் மனைவிக்கும், எனக்கும் விவாகரத்து வாங்கிவிட்டு அவளுக்கு வேறு திருமணம் செய்ய போவதாக மிரட்டினார்.

நான் என்ன செய்வேன்.ஐயா, நான் ஒரு ஏழை, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் மனைவியுடன் வாழ மிகுந்த ஆசை. ஆனால் அவளது தாய், தந்தையர் எங்களை வாழவிட மாட்டேன் என்கிறார்கள். என் மனைவியும் என்னை புரிந்து கொள்ளவில்லை. என்னுடைய இந்த தற்கொலைக்கு முழுக்க, முழுக்க எனது மாமனாரும், மாமியாரும்தான் காரணம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பத்த பத்மாசனம், கர்ப்பாசனம், வாமதேவ ஆசனம்.

பத்த பத்மாசனம்.
பத்த பத்மாசனம்

செய்முறை:

முதலாவதாக, படத்தில் உள்ளபடி பத்மாசனநிலையில் அமரவும். இரண்டு கைகளையும் பின்னால் கொண்டு போங்கள். உங்களின் வலது கை, இடது கை கட்டை விரலை பிடித்திருக்கட்டும். இடது கையால், வலது கை கட்டை விரலை பிடியுங்கள். நேராக நிமிர்ந்து உட்காரவும்.

இரண்டு `பிடி'களையும் மெல்ல இறுக்குங்கள். குறைந்தது 15 விநாடிகள் இருந்து பின்பு பழைய நிலைக்கு வரவும். அடுத்தபடியாக, இதே போல, காலை மாற்றி செய்யவும்.

பயன்கள்:

செரிமான கோளாறு அகலும். நுரையீரல், இதயம் நன்கு இயங்கும். ஆஸ்துமா நோய் தீரும். அகன்ற மார்பு கிட்டும். நுரையீரல்- மார்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும். மார்பு சிறியதாக இருப்பதாக கருதும் பெண்கள் இவ்வாசனத்தை செய்துவந்தால் கவர்ச்சியான மார்பகத்தை பெறலாம். `ஈர்க்கு இடை போகா இளமுலை' என்கிற இலக்கண முறைப்படி வனப்பான, செழிப்பான மார்பகம் உறுதிப்படும்.


கர்ப்பாசனம்.
கர்ப்பாசனம்

செய்முறை:

இடதுதொடை - வலது தொடை இடைவெளியில், முறையே இடது, வலது முழங்கையை செலுத்துங்கள். அப்படியே கைகளை மடக்கி, சற்று குனிந்து காதுகளை தொடுங்கள். இந்த நிலையில் உடல் புட்டபாகத்தின் அடிப்பகுதியை, ஃ எழுத்து போல சமநிலையில் நிறுத்த வேண்டியிருக்கும்.

பயன்கள்:

உடம்பின் அத்தனை நாளமில்லா சுரப்பிகளையும் இயக்குகிற ஆற்றல், கர்ப்பாசனத்துக்கு உண்டு. பிட்யூட்டரி சுரப்பி நன்கு இயங்குவதால் கல்வியறிவு- ஞானத்தை கைவரப்பெறுவீர்கள். சகல நோய்களும் நீங்கும். தீய எண்ணங்கள், கோபம், அதிக காமம் கட்டுப்படுவதோடு, மனசும் பக்கவப்படும்.


வாமதேவ ஆசனம்.
வாமதேவ ஆசனம்

செய்முறை:

வஜ்ராசனநிலையில் அமரவும். இடுப்பை இடப்பக்கமாக கீழே சரிந்து உட்கார்ந்து, மேலிருக்கும் வலதுகாலை, அப்படியே பின்னால் கொண்டு போங்கள். அதாவது, பிருஷ்டபாகம் முழுவதுமாக பின்னால் போகவேண்டும். இடது முழங்காலை தொடையோடு ஒட்டியிருக்குமாறு மடியுங்கள். அடுத்தபடியாக இரண்டு கால் விரல்களையும், கரங்களின் உதவியோடு ஒன்றிணையுங்கள் அடுத்த படியாக, இதுபோல் பக்கம் மாற்றி செய்யவும்.

பயன்கள்:

மூட்டு பிடிப்பு, கால்பாத வலி, குதிகால் வலி மற்றும் முழங்கால் மூட்டு வீக்கம் மறையும். திருமணமான பெண்களுக்கு இடை, தொடையில் அதிக சதை போட்டு பிருஷ்டங்கள் பெரிதாகும். தினந்தோறும் வாமதேவ ஆசனம் செய்துவந்தால், `மெலிய வேண்டிய' அத்தனை உறுப்புகளும் மெலிந்து உடம்பு சிக் அழகோடு திகழும். பருவ பெண்களுக்கு யானையின் துதிக்கை போல, வாளிப்பான கால்கள் அமையும்.

Saturday, October 8, 2011

சென்னை பெண் அதிகாரியை, பெங்களூரில் “லிப்டுக்குள்” படுகொலை செய்த காவலாளி.



பெங்களூர் குமார கிருபா மேற்கு பகுதியில் போலோ கார்டன் எனும் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு 3-வது மாடியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் கிருஷ்ணன் வசித்து வருகிறார். இவரது மனைவி எஸ். அனுசுயா (43). சென்னையைச் சேர்ந்த இவர், பெங்களூரில் சர்பைன்டைன் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு அதிதீ (12), ஆர்த்தி (6) என்று 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று கிருஷ்ணன் தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு மைசூருக்கு சென்றிருந்தார். வீட்டில் அனுசுயா மட்டும் தனியாக இருந்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் அனுசுயா வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினார். கீழ் தளத்தில் இருந்து 3-வது மாடிக்கு செல்ல அவர் லிப்டில் ஏறினார். கூடவே அந்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி அஸ்ரப் அகமது (22)வும் ஏறினான். லிப்ட் 2-வது மாடியை நெருங்கியபோது நடுவழியில் நின்றது. திடீரென லிப்டுக்குள் இருந்து அனுசுயா அலறும் சத்தம் கேட்டது.

பிறகு லிப்ட் 2-வது மாடியில் நின்றது. அனுசுயா அலறல் கேட்டு அருகில் வீடுகளில் இருந்தவர்கள் வெளியில் ஓடிவந்தனர். லிப்டில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட கத்தியுடன் வந்த அஸ்ரப்பை கண்டதும் எல்லோரும் பயந்து ஓடி வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர்.

லிப்டுக்குள் அனுசுயா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தப்படி கிடந்தார். குடியிருப்புவாசிகள் பயந்து ஓடியதால், அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அஸ்ரப், நிதானமாக கீழ் தளத்துக்கு வந்தான். ரத்தக்கறை படிந்த தனது உடையை மாற்றி வேறு சட்டை அணிந்தான். பிறகு 10 நிமிடம் கழித்து தனது உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டான். அதன் பிறகு வெளியில் வந்த குடியிருப்புவாசிகள் சேஷாத்திரிபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

போலீசார் வந்தபோது அனுசுயா லிப்டுக்குள் பிணமாகி கிடந்தார். அவரது கழுத்தை அறுக்க பயன்படுத்தப்பட்ட கத்தி லிப்ட் அருகில் வீசப்பட்டு கிடந்தது.

லிப்டுக்குள் இருந்த கண்ணாடியில் கொலையாளி அஸ்ரப் கை தடயங்கள் பதிவாகி இருந்தன. தடயவியல் நிபுணர்கள் அவற்றை பதிவு செய்தனர். அனுசுயாவை அஸ்ரப், எதற்காக கொலை செய்தான் என்பது தெரியவில்லை. செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றின் மூலம் அஸ்ரப் அகமது அந்த குடியிருப்புக்கு சில மாதங்களுக்கு முன்புதான் காவலாளியாக வேலைக்கு சேர்ந்திருந்தான்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த அவன் அனைவரிடமும் நம்பிக்கையுடையவனாகவும், கடின உழைப்பாளியாகவும் இருந்ததால் அவனுக்காகவே கீழ் தளத்தில் தனி அறை ஒன்றை குடியிருப்பு சங்கத்தினர் கட்டி கொடுத்திருந்தனர். திடீரென அவன் பெண் அதிகாரியை கழுத்தை அறுத்து கொலை செய்தது, அந்த குடியிருப்பு பெண்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத் தேர்வு முறையில் மாற்றம்.



சென்னை : எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவர்களின் தேர்வு முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆனாடமி, பயோகெமிஸ்ட்ரி, பிசியாலஜி என மூன்று பாடங்கள் உள்ளன.

இந்த மூன்று பாடத்திலும் இரண்டிரண்டு பிரிவுகள் உள்ளன. இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் 100 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி அடைந்ததாக கருதப்படுவார்கள்.

இந்த முறையை முற்றிலுமாக மாற்றி, புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஒரு பிரிவில் 44ம், ஒரு பிரிவில் 90ம் எடுத்தால் கூட அந்த மாணவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதிய பல மாணவர்கள் இந்த புதிய முறையால் தோல்வி அடைந்ததாக பதிவு செய்யப்பட்டு இரண்டாம் ஆண்டுக்கான வகுப்பில் அனுமதிக்கப்படவில்லை.

பழைய தேர்வு முறையையே பின்பற்ற வேண்டும் என்றும், புதிய விதிமுறையை ரத்து செய்து எங்களை இரண்டாம் ஆண்டுக்கான வகுப்பில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி மாணவர்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ கவுன்சில் 14ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி
தினமலர், 8-10-2011