Saturday, October 1, 2011

தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு - நிலைமை இன்னும் மோசமாகும் !



தமிழகம் முழுவதும் மீண்டும் கடுமையான மின் வெட்டு நிலவி வருகிறது.

இதற்கு வழக்கம்போல காற்றாலைகள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் காற்றடித்தால் தான் மின்சார உற்பத்தி சீராகும் என்று கூறியே 5 வருடத்தைக் கழித்தார் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்வெட்டு சரி செய்யப்படும் என்று வாய் ஜாலம் காட்டப்பட்டது. ஆனால், நிலைமை முன்பை விட மோசமாகியுள்ளது.

காற்று வீசாததால் காற்றாலை மின்சார உற்பத்தியின் அளவு குறைந்து விட்டதாகவும், தமிழகத்தில் மின்சாரத்தின் தேவை பல நூறு மெகாவாட் அதிகரித்துவிட்டதாகவும், இதனால் தான் மின் தட்டுப்பாடு நிலவுவதுமாக மின்வாரியம் கூறுகிறது.

தமிழகத்தில் மின்சாரத் தேவையின் அளவு 11,000 மெகா வாட். ஆனால், உற்பத்தி ஆவதோ 9,500 மெகா வாட் தான்.

மேலும் தினந்தோறும் மின்சாரத் தேவையின் அளவும் கூடிக் கொண்டே போகிறது. இதனால் தடுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதனால் தமிழகம் முழுவதுமே பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை செய்யப்படுகிறது. பகல் நேரத்தில் செய்யப்படும் இந்த மின்வெட்டால், தொழில நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பல தொழி்ற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பும், தொழிலாளர்களுக்கு பணி இல்லாத சூழலும் நிலவுகிறது.

இந் நிலையில் தமிழக அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரியை அளிக்கும் முக்கிய சுரங்கமான ஆந்திர மாநிலம் சிங்க்ரனியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் கோரி இந்தப் போராட்டம் நடக்கிறது. இதனால் அங்கு நிலக்கரி வெட்டி எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், தமிழகத்துக்கு நிலக்கரி சப்ளையும் பாதிக்கப்படலாம். இதனால் தமிழகத்தில் மின் நிலைமை மேலும் மோசமாகும்.

Thursday, September 29, 2011

வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில் இதுவரை 210 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு.



வாச்சாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறை யினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நான்கு இந்திய வனப்பணி அதிகாரிகள் உள்பட 210 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உரிய நேரத்தில் நடத்தி முடிக்கப்படாமல், பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் விசாரணையின்போதே இறந்து விட்டனர்.

யார் யார் குற்றவாளி?

ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப் பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு ஐஎப்எஸ் அதிகாரியான சிங்காரவேலு ஏற்கனவே இறந்து விட்டார்.

என்னென்ன பிரிவுகளில் குற்றச்சாட்டு ?

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி 147, 149, 323, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் அத்தனை பேர் மீ்தும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதேபோல பலர் மீது பாலியல் பலாத்காரத்திற்காக 376வது பிரிவின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதேபோல ஆதாரங்களை மறைத்தது தொடர்பாக ஐஎப்எஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், தாக்கிக் காயப்படுத்தியது, சட்டவிரோதமாக அடைத்து வைத்தது ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

நடந்தது என்ன?

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மலை ஜாதியினர் .

இந்த கிராம மக்கள் காட்டுப் பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து அந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறை 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் ஆகியோர் அடங்கிய கூட்டு குழு இந்த கிராமத்தில் சோதனை நடத்தியது.

வாச்சாத்தி கிராமத்தில் இவர்கள் வீடு, வீடாக சோதனை நடத்தினர். பின்னர் ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்து, 133 பேரை கைதும் செய்தனர்.

ஆனால், இந்த சோதனைகளின்போதும், சோதனைகளைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளின்போதும் ஜெயா, செல்வி, சித்ரா, காந்தி, அபரக்கா, பாப்பாத்தி, காந்தி, மாரிக்கண்ணு, லட்சுமாயி, கம்சலா, முத்துவேதி, பூங்கொடி, மல்லிகா, சுகுணா, பாப்பாத்தி, முத்துவேதி, தேன்மொழி, பழனியம்மாள் உள்ளிட்ட 18 மலை கிராம பெண்களை கூட்டு குழுவினர் கற்பழித்ததாக புகார் எழுந்தது.

விசாரிக்க மறுத்த போலீஸ்

இது தொடர்பாக கிராம மக்கள் கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீஸில் தந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, கூட்டு குழுவினரால் மலைவாழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டதாகவும் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம் கொடுத்த சூடு

இதைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின் போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு அரூர் போலீசாருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிபிஐக்கு மாறிய வழக்கு

ஆனாலும் போலீசார் முறையாக இந்த விவகாரத்தை விசாரிக்காததால் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி 1993ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் கூட்டுக்குழுவினரின் அட்டகாசங்கள் வெளியில் வந்தன. இதையடுத்து அந்தக் குழுவைச் சேர்ந்த 269 பேரையும் சிபிஐ கைது செய்தது. மேலும் கடந்த, 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

2006ம் ஆண்டு இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர், 2008ம் ஆண்டு பிப்ரவரி, 17ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இந்த வழக்கு நடந்து முடிந்துள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் 29 வனத்துறையினர், 24 போலீசார், ஒரு வருவாய்த்துறை ஊழியர் உள்பட மொத்தம் 54 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் அவசரம்.



நாட்டில் முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரச் செய்ய எதிர்க்கட்சிகள் மிகுந்த அவசரப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய அவர் விமானத்தில் நிருபர்களிடம் பேசுகையில், மத்திய அமைச்சரவையில் யாருக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

5 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர். எனவே இன்னும் 2 ஆண்டுகள் காத்திருங்கள் என்று, எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் அரசு பற்றிய சில பலவீனமான அம்சங்களை வைத்துக் கொண்டு, முன்கூட்டியே தேர்தலை திணித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த அரசைக் கவிழ்க்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால், மக்கள் அனுமதி அளித்து உள்ளபடி, 5 ஆண்டுகளுக்கு இந்த அரசு நிச்சயம் நீடிக்கும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர்களுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு நினைக்கிறது. அமைச்சரவையில் எப்போதும் திறந்த மனதுடன் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அமைச்சர்களுக்குள் பல்வேறு எண்ணங்கள், கருத்துகள் இருக்கலாம். இதனால், எங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று அர்த்தமல்ல. கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகி வருவது போல் (பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு) எதுவும் நடக்கவில்லை. ப.சிதம்பரம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாடாளுமன்றத்தில் பல முக்கியமான மசோதாக்கள் விவாதிக்கப்படக் காத்திருக்கின்றன. ஆனால், தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பிக் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி நாடாளுமன்றம் செயல்படாமல் தடுக்கப்படுவதால் அந்த மசோதாக்கள் நிறைவேறாமல் முடக்கப்பட்டுள்ளன.

காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது, பென்சன் சீர்திருத்தம், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு பொது கொள்முதல் கொள்கை மற்றும் லோக்பால் போன்ற முக்கிய பொருளாதார சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

ராணுவத் தலையீடு மூலம் இன்னொரு நாட்டில் உள்நாட்டுப் பிரச்னையைத் தீர்க்க முயல்வது ஆபத்தில் முடியும். லிபியாவில் ஆட்சி மாற்றத்தால் அங்கே அமைதி நிலவிவிடும் என்று நம்ப முடியவில்லை. உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்தால் அதன் விளைவுகள் லிபியாவை ஒரு சோமாலியா போல மாற்றிவிடக் கூடும் என்றார் மன்மோகன் சிங்.

ராஜீவ் கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மூன்று பேருக்கும், அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் காங்கிரஸ் தவிர்த்து இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் கோரிக்கை எழுப்பி வருவது குறித்துக் கேட்டதற்கு, அது குறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் சட்டத்தின் மேலாண்மை நிலைநிறுத்தப்படும் என்பதை மட்டும் தான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து கேட்டதற்கு, இது தொடர்பாக தமிழகத்தில் எழுப்பப்படும் எதிர்ப்புகள் விரும்பத்தக்கதல்ல. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துகள் பற்றித் தெரிந்த பின்னும் அரசு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கூடங்குளம் போன்ற அணு மின் நிலையங்களை அமைக்க முன் வருமா என்பதை அவர்கள் யோசிக்க வேண்டாமா?.

இந்தியாவிலேயே தமிழகம்தான் தொழில் வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மாநிலமாக வளர்ந்திருக்கிறது. இந் நிலையில் தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால் அணு மின் நிலையம் அமைப்பதைத் தவிர வேறு உடனடி மாற்று வழியேதும் இல்லை. சுற்றுச்சூழலை பாதிக்காமல், குறைந்த செலவிலும் எரிசக்தி வேண்டுமானால், நாம் அணு மின் சக்தியை பயன்படுத்தியே தீர வேண்டும் என்றார்.

இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு உலக மயமாக்கல் தான் காரணம் : மன்மோகன்சிங்.



அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பியக் கூட்டமைப்பு போன்ற வல்லரசுகளின் பொருளாதாரப் பிரச்னைகளால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு உலக மயமாக்கல் தான் காரணம். உலகமயத்தால் பல நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும், ஆரம்ப கால நன்மைகளை அதன் பின் விளைவுகள் பாதிக்கத் தொடங்கியுள்ளன.

நான் சோஷலிஸ்டாக இருந்து, உலக மயமாக்கலின் ஆதரவாளனாக மாறி இருப்பவன் என்கிற குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். அந்தந்த சூழ்நிலையில் நாட்டுக்கு எது நன்மை பயக்குமோ, அதை ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். உலக மயமாக்குதல் மூலமும், பொருளாதார சீர்திருத்தம் மூலமும் பல நன்மைகளை இந்தியா அடைந்திருக்கிறது. இதன் பயன் எல்லா தரப்பினரையும் போய்ச் சேர்ந்தாக வேண்டுமென்றால், சில மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும்.

விலைவாசி உயர்வு என்பது உலகளாவிய பிரச்சனை. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. சீனாவில் விலைவாசியால் மக்கள் நம்மைவிட மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, உணவு தானியங்களின் விலைவாசி ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், காய்கறிகள், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றின் விலை தான் மிக அதிகமாக உள்ளது. மக்களின் வருமானம் உயர்ந்திருப்பதும், அவர்கள் இதுபோன்ற ஆரோக்கியமான சத்துணவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதும்தான் இதற்குக் காரணம்

நமது தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால்தான் இந்த விலைவாசி உயர்வே தவிர பணவீக்கத்தால் ஏற்பட்ட விலைவாசி உயர்வாக இதைக் கருத முடியாது என்றார்.

Wednesday, September 28, 2011

சென்னையில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண் ; காதலுக்காக நூதன போராட்டம்.

பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்

பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நேற்று நள்ளிரவு இளம்பெண் ஒருவர் தலைமுடி விரித்த நிலையில் நிர்வாணமாக ஓட்டமும் நடையுமாக வந்தார். இதனை பார்த்தவர்கள் பேய் என்று நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் வெளியே வர பயந்து மறைவான இடங்களில் பதுங்கி இருந்தனர்.

இதனால் அந்த இடமே மயான அமைதியாக காணப்பட்டது. அந்த நேரத்தில் ரோந்து வந்த பல்லாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்த், இளம்பெண் நிர்வாணமாக வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணிற்கு ஆடை அணிவித்தனர். பின்னர் அவரை பல்லாவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

அப்போது அவர் கூறியதாவது:- எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள தென்கல்பாக்கம் கிராமம். கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம். பல இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்தோம். 10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து கேட்டபோது அவர் என்னிடம் பேச மறுத்து விட்டார். எனவே செய்யாறு போலீசில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனவேதனையால் வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்தேன். எனது பெற்றோர் மன மாற்றத்துக்காக பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள எனது அக்காள் வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்.

காதலன் ராமச்சந்திரன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வித்தியாசமாக எதையாவது செய்தால் போலீசார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள். அப்போது நடந்ததை கூறி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க செய்யலாம் என்று நினைத்தேன். இதற்காக நள்ளிரவு நிர்வாணமாக பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை நடந்து வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இளம்பெண் சொல்வது உண்மைதானா? அல்லது மனரீதியாக பாதிக்கப் பட்டுள்ளரா? என்று போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது அவர் பரங்கிமலை பெண்கள் போலீஸ் நிலையத்தில் உள்ளார். இளம்பெண் நிர்வாணமாக நடந்து வந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பெக்ட்ரம் கேஸ் : திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம் !



திருப்பம்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘திடீர் திருப்பம்’ என்றுகூட கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘குபீர் திருப்பம்’ இது! ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்றுவரை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த ஆ.ராசா தரப்பு, இன்று திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றியிருப்பதன் பெயர்தான், குபீர் திருப்பம்!

இன்று சி.பி.ஐ. தனிகோர்ட்டில் ஆஜராகிய ஆ.ராசாவின் வக்கீல் சுசீல்குமார், “அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட வேண்டியது அவசியமில்லை என்று எனது கட்சிக்காரர் கருதுகிறார்” என்றார்.

சி.பி.ஐ. தனி கோர்ட்டில் தினமும் நடைபெற்றுவரும் வழக்கு இது. இருந்த போதிலும், கடந்த சில தினங்களாக பார்வையாளர்கள் முன்பை விட கூர்மையாக கவனம் செலுத்த தொடங்கியிருந்தார்கள். காரணம், அமைச்சர் சிதம்பரத்தில் பெயர் வழக்கில் கண்ணாமூச்சி காட்டத் தொடங்கியிருந்தது.

தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, சில வாரங்களுக்கு முன்னர்தான், இந்த வழக்கில் முதலில் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் பெயரை உச்சரித்தார்.

“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தெரியும். நான் என்ன செய்யப் போகின்றேன் என்பதை அவர் அறிந்திருந்தார். இது தவறு என்றால், அவர் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? அவரைக் கூப்பிட்டு விசாரியுங்கள்” என்றார் ஆ.ராசா. தனக்காக தானே வாதாடுகிறேன் என்று கூறிக்கொண்டு அவர் நேரடியாக நீதிபதியிடம் கூறிய கூற்று இது.

அதன் பிறது, அவரது வக்கீல் சுசீல்குமார், அதே விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

இதற்கிடையே கனிமொழியின் வக்கீலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயம் பற்றி அப்போதைய அமைச்சரவைக்கு எல்லாமே தெரிந்திருந்தது என்று கொளுத்திப் போட்டார்.

அவர் தனது வாதத்தில், “அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம், மற்றும் பிரதமரின் முன்னிலையில், ராசா இதுபற்றி விலாவாரியாகவே தெரிவித்து விட்டார். ஆ.ராசா செய்தது தவறு என்றால், பிரதமரும், சிதம்பரமும் அதற்கு உடந்தையாக ஏன் இருக்கக்கூடாது?” என்ற ரீதியில் கூறத் தொடங்கினார்.

கனிமொழியும், ராசாவும் சொல்லி வைத்தால்போல சிதம்பரத்தையும், பிரதமரையும் வழக்குக்குள் இழுக்கத் தொடங்கவே, கேஸ் திரும்பப் போகின்றது என்பது விஷயம் அறிந்தவர்களுக்கு புரிந்து விட்டது. மத்திய அரசும் ஓரளவுக்கு அலர்ட் ஆகியது. ஆனால், அதற்குள் காரியங்கள், அனைவரது கைகளையும் மீறிச் செல்லத் தொடங்கிவிட்டன.

இந்த விவகாரத்தில், நிதி அமைச்சகம், பிரதமரின் அலுவலகத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று பற்றிய தகவல் ‘எப்படியோ’ லீக் ஆகியது.

அப்படியொரு கடிதம் இருக்கும் விஷயத்தை, தெரிய வேண்டியவர்களுக்கு தெரியப்படுத்தி விட்டாலே போதும். தகவல் அறியும் சட்டத்தின்படி விண்ணப்பித்து, குறிப்பிட்ட கடிதத்தை வெளியே கொண்டுவந்து விட்டார்கள். அந்தக் கடிதம், அரசியல் ரீதியாக ஒரு உலுப்பு உலுப்பிவிட்டது.

அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த ஊழல் நடக்காமல் தடுத்திருக்கலாம் என்பதுபோன்ற வார்த்தை அமைப்புகளுடன் இருந்தது, நிதி அமைச்சின் கடிதம். அது ஏற்படுத்திய பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக நிற்கின்றன.

நிலைமை மோசமானால், அமைச்சர் சிதம்பரத்தின் பதவி பறிபோகும் (அல்லது அவராகவே ராஜினாமா செய்யலாம்) என்ற நிலையில் வந்து நிற்கிறது அந்த விவகாரம். (இந்தக் கட்டுரையைப் படித்து முடித்தபின், கீழே ‘தொடர்புடையவை’ என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்ட 3 டாபிக்களையும் முடிந்தால் ஒருமுறை படித்து விடுங்கள். வழக்கின் பேக்ரவுண்ட் புரியும்)

இப்படியான சூழ்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஆ.ராசாவின் வக்கீல் கொஞ்சம் வில்லங்கமான விதத்தில் வழக்கைத் திருப்பினார். சிதம்பரம் கோர்ட்டுக்கு இழுக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலையை சாதுர்யமாக ஏற்படுத்தினார்.

ஆ.ராசாவின் வக்கீல், அடி மடியில் எப்படி கையை வைத்தார்? இதோ, இப்படித்தான்:

“ஆ.ராசாவுக்கும், சிதம்பரத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வித கருத்து வேறுபாடும் எழவில்லை என்பதையே நான் அழுத்திக் கூறுகிறேன். அதாவது, அப்போதைய நிதி அமைச்சருக்கு நன்கு தெரிந்திருந்தும், அவரால் தடுக்கப்படாத ஒரு நடவடிக்கையே ஆ.ராசாவால் எடுக்கப்பட்டது. எனவே, செக்க்ஷன் 311 படி சிதம்பரத்தை ஒரு சாட்சியாக கூப்பிட்டு விசாரியுங்கள். இந்த விவகாரத்தில் தனக்குத் தெரிந்ததை அவரே கோர்ட்டில் தெரிவிக்கட்டும். பிரதமரின் முன்னிலையில் வைத்து இந்த விவகாரம் பற்றி பேசப்பட்டதா என்பதை அவர் தெளிவு படுத்தட்டும். அதன் பின்னர் பிரதமரை அழைக்க வேண்டுமா இல்லையா என்பதை கோர்ட்டே முடிவு செய்யட்டும்”

உண்மை, பொய், நேர்மை எல்லாவற்றுக்கும் மேலாக, வக்கீலின் சாதுரியமாக திறமை ஸ்கோர் பண்ணிய இடம் அது.

24 மணி நேரத்துக்குள், பலன் கைமேல் தெரிந்திருக்கிறது! இன்று காலை விடிந்தது. கோர்ட் தொடங்கியது. ஆ.ராசாவின் வக்கீல் சுசீல்குமார், “அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட வேண்டியது அவசியமில்லை என்று எனது கட்சிக்காரர் கருதுகிறார்” என்றார்.

இதற்கு அவர் என்ன காரணம் கூறுகிறார்? “அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்கத் தொடங்கினால், வழக்கு மேலும் இழுத்துச் செல்லும். எனது கட்சிக்காரர் ஜாமீன் பெறுவதில் கால தாமதம் ஏற்படும். அதனால்தான், அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டியது அவசியமில்லை என்று கூறுகிறோம்”

சுருக்கமாகச் சொன்னால், நேற்று நீதிமன்றத்தில், ஆ.ராசா தரப்பு வக்கீல் திறமையாக தூண்டில் போட்டுவிட்டுச் சென்றார். இரவோடு இரவாக தூண்டிலில் போடப்பட்ட இரையை மீன் கவ்வியிருக்கிறது.

கொஞ்சம் தலைகீழாக யோசித்துப் பாருங்கள்.

“நீங்கள் தேவையில்லாமல் ‘அவரை’ கேஸில் இழுக்காமல் விட்டால், உங்கள் ஜாமீன் கோரிக்கை வரும்போது, நாங்களும் பெரிதாக எதிர்ப்பு காட்ட மாட்டோம்” என்பதற்கு மேல், ஒரு வார்த்தைகூட நாங்கள் எழுதக்கூடாது!

விறுவிறுப்பு.காம்.

பள்ளிகளில் இனி மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறை.



2012-13ஆம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ஆம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மாணவர்கள் மொட்டைப் மணப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரேடு முறையை அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,

பள்ளி மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு, நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை விவரம் வருமாறு:-

தற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை.

அரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 3-ம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.

55 முதல் 60 மார்க் வரை - ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)

49 முதல் 54 வரை - ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)

43 முதல் 48 வரை - பி 1 கிரேடு (பாயிண்ட் 8)

37 முதல் 42 வரை - பி 2 கிரேடு (பாயிண்ட் 7)

31 முதல் 36 வரை - சி 1 கிரேடு (பாயிண்ட் 6)

25 முதல் 30 வரை - சி 2 கிரேடு (பாயிண்ட் 5)

19 முதல் 24 வரை - டி கிரேடு (பாயிண்ட் 4)

13 முதல் 18 வரை - இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)

12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் - இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)

மூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்பட வேண்டும். ஒரு பருவத்தில் எடுக்கப்படும் பாடங்கள் அடுத்த பருவத்திற்கு வராது. இதனால், ஆண்டு தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். இதுபோல, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் கல்லூரிகளில் இருப்பதைப் போன்று செமஸ்டர் முறையையே அறிமுகப்படுத்தலாம்.

நிபுணர் குழு அளித்த மேற்கண்ட பரிந்துரைகளை ஆராய்ந்த அரசு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து (2013-14) 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறையை கொண்டுவர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் இருப்பதைப் போல அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ தேர்வு முறை (டிரெமஸ்டர் சிஸ்டம்) நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.