Wednesday, September 21, 2011

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் மட்டுமல்ல – கார்ப்பரேட் பகற்கொள்ளை !!!

ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?

படம் - www.thehindu.com


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பிரம்மாண்டமான ஊழலை மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. நாமோ அப்போதே இதை வெறும் ஊழல் மட்டுமல்ல – கார்ப்பரேட் பகற்கொள்ளை என்றோம். மட்டுமல்லாமல், இந்த ஊழல் தனியார்மய தாராளமயக் கொள்(ளை)கை எனும் அடித்தளத்தில் நிற்கிறது என்பதை எமது பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சுட்டிக் காட்டி எழுதினோம். தனியார்மயத்தை ஆதரித்துக் கொண்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஊழல் என்று தனியாக பிரிக்க முடியாது என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.

கடந்த மாதத்தில் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணைகளில் நடந்துள்ள சில முக்கியமான விஷயங்கள் ஏற்கனவே நாம் வைத்த வாதங்களை மெய்பிப்பதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் தேசிய அளவிலான ஒரு விவாதப் பொருளாக ஆனபின் உச்சநீதிமன்ற உத்திரவின் கீழ் விசாரணையைத் துவக்கும் சிபிஐ, இதில் சுமாராக முப்பதாயிரம் கோடிகள் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று ஒரு குத்துமதிப்பாக தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டது.

பின்னர், இந்த ஊழலில் குறிப்பாக ஏற்பட்ட இழப்பின் அளவு என்ன என்பதை தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜனவரி 19-ம் தேதி சி.பி.ஐ கேட்டது. இதற்காக ஒரு ‘நிபுணர்’ குழுவை தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைத்தது. சி.பி.ஐயிடம் செப்டெம்பர் முதல் வாரத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்த அக்குழு, அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏதும் இல்லையென்றும், நியாயமாகப் பார்த்தால் மூவாயிரம் கோடியில் இருந்து ஏழாயிரம் கோடிகள் வரை லாபம் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் ஏதும் நடக்கவே இல்லை என்று ஆ.ராசாவைத் தொடர்ந்து தொலைதொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல் தெரிவித்து வருகிறார். இதே பாட்டை மன்மோகன் சிங்கும் பாராளுமன்றத்தில் பாடியிருக்கிறார்.

ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடவில்லை என்றும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற கொள்கையைக் கடைபிடித்தார் என்றும், இதனால் தான் ஊழலுக்கு வழியேற்பட்டது என்றும் ஆங்கில ஊடகங்கள் எழுதி வந்த நிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதியிட்ட தனது கடிதம் ஒன்றில், ட்ராய் செயலாளர் ஏ.கே. அர்னால்ட், “ஸ்பெக்ட்ரமை ஏலம் விடக்கூடாது என்பது தான் தமது கொள்கை, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பொருத்தமட்டில் அதை ஒரு வருமானம் ஈட்டும் வகையினமாகக் கருதக் கூடாது என்பதே ட்ராயின் கொள்கை முடிவு” என்றும் தெரிவித்திருந்தார்.

ஆக, இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தேசத்திற்கு பாரதூரமான இழப்பை ஆ.ராசா ஏற்படுத்தி விட்டார் எனும் குற்றச்சாட்டை தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமே காலாவதியாக்கி விட்டது. அடுத்து, ‘இதையே ஏலம் விட்டிருந்தால்….’ எனும் கேள்விக்கும் மடையடைத்து விட்டது. மேலும், ஒரு பொருளைக் களவு கொடுத்தவனின் குற்றச்சாட்டு தான் குற்றவியல் விசாரணைக்கே மிக அடிப்படையான ஆதாரம் – இங்கோ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை யாருக்கு சொந்தமோ – அதாவது அரசு – அவரே, இதில் இழப்பு ஏதும் இல்லை என்பதை பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் பட்டவர்த்தனமாக சொல்லியாகிவிட்டது.

மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த டாடா குழுமத்துக்கு சி.பி.ஐயே முன்வந்து தனது குற்றப்பத்திரிகையில் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல், ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையே..’ என்கிற கணக்கில் மன்மோகன் சிங் நெம்ப நல்லவராக்கும்‘ என்றும் குற்றப்பத்திரிகையில் சொருகியிருக்கிறது.

அடுத்து, ஊழல் நடந்திருப்பதற்கு சான்றாக குறைந்த விலையில் வாங்கிய அலைக்கற்றை உரிமத்தை, வேறு பன்னாட்டு கம்பெனிகளுக்கு அதிக விலைக்குக் கைமாற்றி விட்டதை குறிப்பிட்டார்கள். இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கிய ஆ.ராசா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் எனும் வகையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தான் எடுத்த முடிவுகளால் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், இதில் ஊழல் நடைபெறவில்லை என்றும், தனது முடிவுகள் அனைத்தும் பிரதமருக்கும் பா. சிதம்பரத்துக்கும் ஏற்கனவே தெரியுமென்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆ.ராசா மன்மோகன் சிங்கின் டவுசரை அவிழ்த்ததும், ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தோன்றிய சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று ஏற்கனவே கபில் சிபலும் பிரதமரும் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு நிறுவனம் தனது பங்குகளை விற்பதோ அல்லது முதலீடுகளை வெளிச்சந்தையில் இருந்து கோரிப் பெறுவதோ சட்டப்படி தப்பே இல்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தனது ஆகஸ்ட் 29-ம் தேதியிட்ட அறிக்கையில், ஆ.ராசாவுக்கும் யுனிடெக்குக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனையையோ, ரிலையன்ஸால் போலியாக உருவாக்கப்பட்ட ஸ்வான் டெலிகாமுக்கும் அதனால் ரிலையன்ஸ் அடாக் குழுமத்துக்கு கிடைத்த ஆதாயத்தையோ நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல், மாக்ஸிஸ் நிறுவனத்திடம் இருந்து தயாநிதி மாறனும் சன் டிவி குழுமமும் லஞ்சம் பெற்று, ஏர்செல்லின் பங்குகளை அடாவடியாக மாக்ஸிஸ் நிறுவனம் கைப்பற்ற வகைசெய்தார்கள் எனும் குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதுமான ஆதாரம் ஏதும் இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆக, இந்த விவரங்களில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், சிபிஐயே ஊழல் பெருச்சாளிகள் புகுந்து புறப்படுவதற்கான அத்தனை ஓட்டைகளையும் தனது குற்றப்பத்திரிகைகளிலும் விசாரணை அறிக்கைகளிலும் செய்து முடித்துள்ளது என்பதைத் தான். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது அனைத்தும் அண்ணா ஹசாரே நாடகம் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொருத்தளவில், அரசுக்குச் சொந்தமான அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லிடம் அளிக்காமல் தனியாருக்கு விற்பது என்று முடிவெடுத்த இடத்தில் தான் இந்த மோசடியின் மையம் உள்ளது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை முடக்கி வைப்பது என்கிற ‘கொள்கை’ முடிவின் ஆரம்பம் காட் ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆக, பொதுச் சொத்தை கூறு கட்டி தனியாருக்கு தாரை வார்ப்பதை கொள்கையாக வைத்திருப்பதில் தான் ஊழலின் அச்சு இருக்கிறது. ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால், தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்க வேண்டியிருக்கும். ஒன்றை விட்டு ஒன்றைப் பேசுவதும், ஒன்றை ஆதரித்துக் கொண்டு இன்னொன்றை எதிர்ப்பதும் அடிப்படையிலேயே முட்டாள்தனமானது.

ஆனால், இந்த முட்டாள்தனம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த சமயத்தில் தேசிய ஊடகங்களில் இருந்து நம் தமிழ் வலைப்பதிவு உலகம் வரையில் நடந்து வந்தது. இந்த ஊழலைக் குறித்து வலைப்பதிவுகளில் எழுதியவர்களில் பெரும்பாலானோர் இந்த அமைப்பு முறையை மனதார நம்புகிறவர்கள். இந்த ஊழல் நீதிமன்றத்தில் வைத்து முறையாக விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுவிடும் என்று இன்னமும் நம்புபவர்கள். இதோ, இந்த வழக்கையே ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்யும் சி.பி.ஐயின் சதிகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையிலும் அவர்களது நம்பிக்கையின் தரமென்ன என்று கேட்கிறோம்.

முக்கியமாக இவர்கள் தான் ஊழலுக்கும் தனியார்மய கொள்கைகளுக்கும் தொடர்பே இல்லை என்றும், தனியார்மயம் தான் போட்டியை ஊக்குவித்து தரமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய வல்லது என்றும் பேசினார்கள். ஊழலுக்கும் லஞ்சத்துக்குமான அடிப்படை வேறுபாடு கூட தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தரகர்கள் பெரும் லஞ்சத்தையும் ஸ்பெக்ட்ரம் போன்ற கார்ப்பரேட் பகற்கொள்ளையையும் இணைவைத்துப் பேசினார்கள்.

ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அளித்த அதிர்ச்சி மயக்கத்திற்கு இப்போது சி.பி.ஐ விசாரணையின் பித்தலாட்டங்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும், அதை பங்கு வைத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பரிமாற வேண்டும் என்கிற இந்தக் கைக்கூலிகளின் துரோகத்தனங்களிலிருந்துமே ஊழலுக்கான ஆரம்ப விதை தூவப்படுகிறது. அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது தான் சி.பி.ஐ, போலீசு, நீதிமன்றம் போன்ற அரசு அலகுகளின் நடைமுறையாக உள்ளது.

இதில் எரியும் அடிக்கொள்ளியான மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் போது, அதற்கு இசைவாய் ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் இந்த அரசு இயந்திரங்களின் கொதிப்பு தானே அடங்கிப் போகும்.

நன்றி - வினவு

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர் ! உஷார் !!

இந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை செம்மைப்படுத்த வேண்டும், அது பன்னாட்டு கல்வி நிறுவனங்களினால் மட்டுமே சாத்தியம் என்ற முழக்கத்தோடு எஞ்சியிருக்கும் அரசு கல்வி நிறுவனங்களையும் அடியோடொழிக்க, கல்விக்கான மசோதாக்களை நமக்குத் தெரியாமல் அமல்படுத்தப் போவதை அம்பலப்படுத்தவே இக்கட்டுரை.

மைய அரசின் நேரடிக் கண்காணிப்பால் இயக்கப்படும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில அரசால் நடத்தப்படும் அறிவியல், கலை, பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி நிறுவனங்கள், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகள், தனியார் ஆராய்ச்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், திறந்த நிலைப் பல்கலைக் கழகங்கள் போன்ற அனைத்தும் உயர்கல்வி நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் அடங்கும்.

47க்குப் பிந்தைய இந்தியாவில் சில நூறு உயர்கல்வி நிறுவனங்களே இருந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் கல்வி தனியார்மயமானதன் முலமாக அவற்றின் எண்ணிக்கை புற்றீசல்களைப் போல முளைத்து ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் வளர்ந்துள்ளது. மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக் கழகங்களே தரங்கெட்டுப் போயுள்ள நிலையில், மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே பல தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, அனைவருக்கும் இலவசக் கல்வியளித்தல் என்ற தன் அடிப்படைக் கடமையிலிருந்து இவ்வரசு விலகியுள்ளதை அதன் நடைமுறையிலிருந்து நாமறிவோம்.

இதற்கெல்லாம் மேலாக உலக வர்த்தகக் கழகம் மற்றும் உலக வங்கியின் ஆணையின் பேரில் கடந்த ஆண்டில் (2011) உயர்கல்விக்கான பல சட்ட முன்வரைவுகளைக் கொண்டுவந்துள்ளது மைய அரசு. அவற்றில் புத்தாக்கத்திற்கான பல்கலைக்கழக சட்டமுன்வரைவு – 2010 (Universities for innovations Bill – 2010), கல்வித்தீர்ப்பாயங்களுக்கான சட்டமுன்வரைவு (Educational tribunals Bill – 2010), பன்னாட்டுக் கல்விநிறுவனங்களுக்கான சட்டமுன்வரைவு (Foreign educational institutions bill – 2010) அகிய மூன்று உட்பட மொத்தம் 16 வகையான உயர்கல்விச் சட்டமுன்வரைவுகளைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக மேற்சொன்ன மூன்று சட்டமுன்வரைவுகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு வந்து சந்தை போடவும், அதன் மூலம் அமைக்கப் பெறும் கல்வித் தீர்ப்பாயங்களுக்கு நிகரில்லா அதிகாரம் கொடுக்கவும் ஒட்டுமொத்தமாக உயர்கல்வியில் மாணவர்களை முடமாக்கப் பார்க்கவும் வந்துள்ள திட்டங்களாகும்.

உலக அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் கிளைகளை இங்கு கொண்டு வந்து நமது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் புத்துயிரூட்டலாம் மேலும் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை உலகத்தரத்திற்கு கொண்டுவரலாம், என்ற நோக்கத்திற்காக, 2010 ஆம் ஆண்டின் மத்தியில் புத்தாக்கத்திற்கான பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதை வரைவுத்திட்டத்தின் மூலமாக இச்சட்டமுன்வரைவுகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கொண்டு வந்தது. இவ்வகையான பல்கலைக்கழகங்கள் இந்தியாவை அறிவுத் துறைக்கான மையமாக மாற்ற வழிவகுக்கும் என்றும் மத்திய மாநில பல்கலைக் கழகங்களில் தனித் தன்மையான சிறப்புத்துறைகள் ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவில் காணப்படும் குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைகளுக்காக ஆராய்ச்சிகள் மேம்படுத்தப்படும் எனவும் இவ்வறிக்கைகள் கூறுகின்றன.

காட் ஒப்பந்தத்தின் மூலம் வரி மற்றும் வணிகத்துறையில் நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள், வணிகம் தொடர்பான சேவைத்துறைகளின் பொது ஒப்பந்தத்தின் மூலம் (GATS – General agreement of trade on services) சேவைத்துறகளான தொலைபேசி, மின்சாரம், வங்கி, காப்பீட்டு நிறுவனம், மருத்துவம், ஆராய்ச்சி, நீதிமன்றங்கள், ஊடகங்கள், கல்வி போன்ற அனைத்திலும் தனது தனியார்மயமெனும் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி காவு வாங்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு நீட்சியாகவே இந்த சட்ட முன்வரைவுகள் உயர்கல்வி நிறுவனங்களிலும் தனது அமெரிக்க விசுவாசத்தின் மூலம் பல பன்னாட்டு உயர்கல்வி நிறுவனங்களை கல்லா கட்ட கூவி அழைக்கின்றன. கரும்பு தின்னக் கூலியா என்பது போல வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களும் தனது கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் அனைவரையும் அடிமையாக்க திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.

அந்நிய நேரடி முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் இவை, மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதிலிருந்து இப்பல்கலைக்கழகங்களில் சேர அவர்கள் கட்டவேண்டிய கட்டணம், செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம்,தேவையான துறைகளை ஆரம்பிப்பது, புதிய பாடத்திட்டங்களை அமைப்பது, ஆசிரியர்களை நியமிப்பது, நிர்வாகத்தின் மற்ற வேலைகளுக்கு ஆட்களை நியமிப்பது, அவர்களின் சம்பளம், அவர்களுக்குள் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற அனைத்தையும் குறிப்பிட்ட பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களே கவனித்துக்கொள்வதற்கான முழு அதிகாரத்தையும் இச்சட்ட முன்வரைவு கொடுக்கிறது. மேலும் இக்கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளுக்காகப் பெறும் காப்புரிமையும் அந்தந்த நாட்டைச் சேர்ந்த பல்கலைகழகங்களே உரிமை கோரும் என்பது உட்சபட்சம்.

ஏற்கனவே எய்ம்ஸ், ஐ.ஐ.டிக்கள் போன்ற மத்தியக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தாமல் தனது ஆதிக்க சாதி மனபான்மையை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டிய இவ்வரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப்பல்களைக் கழகங்கள், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்க அனுமதியளித்ததன் மூலம் அங்கும் இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்தது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அக்கல்விநிறுவனங்களில் நுழையாத அளவிற்குச் சவக்குழிவெட்டி நவீனத்தீண்டாமையைக் கடைபிடித்து வருகிற நிலையில், அது மேலும் புற்றுநோய் போல இப்புதியப் பல்கலைக் கழகங்களிலும் பரவவிருக்கிறது.

தற்போதைய உயர் கல்வி நிறுவனங்களில் இருப்பது போல மாணவர்களுக்கு இடையில் தேர்தலோ, மாணக்க உறுப்பினர்களை முக்கிய முடிவெடுக்கும் சிண்டிகேட் கூட்டங்களில் நுழையவோ இப்பல்கலைக்கழகங்களில் அனுமதி இல்லை. இவ்வாறு ஆரம்பிக்கப்படும் புத்தாக்கப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளை யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை, இன்னும் சொல்லப் போனால் இப்பல்கலைக் கழகங்களை நடத்துபவர்கள் மீது ஏதேனும் ஊழல் நடந்திருக்கிறது போன்ற நம்பகத்தகுந்த தகவல்கள் வந்தால் கூட அதை சி.பி.ஐ அல்லது மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் (CAG) தலையிட்டு அதன் நிதி விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் கிஞ்சித்தும் இல்லை.

கல்விக்கானத்தீர்ப்பாயச் சட்டமுன்வரைவு – 2010, இது மாநிலத் தீர்ப்பாயம், மற்றும் தேசியத் தீர்ப்பாயம் என இரண்டு படிநிலைகளைக் கொண்டுள்ளது, இவை முறையே மூன்று மற்றும் ஆறு பேர் கொண்ட கமிட்டியை உள்ளடக்கியதாகும். பல்கலைக்கழகத்தின் பங்குதாரர்களான மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் போன்றவர்களுக்குள் எழும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கவும், இத்தீர்ப்பாயம் குற்றவாளி என்று கருதுபவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டிக்கவும் வரைமுறையில்லா அதிகாரத்தைக் கொடுக்கிறது இம்மசோதா. தீர்ப்பாயங்களின் முடிவே இறுதியானது, வேண்டுமானால் சிறப்பு அனுமதியுடன் உச்சநீதிமன்றம் அனுகலாம்.

இவ்வாறு பல்வேறு சட்டங்களின் மூலம் அனைவரது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறித்துள்ள அரசு, இத்தீர்ப்பாயத்தின் மூலம் குறைந்தபட்சம் எஞ்சியிருக்கும் ஜனநாயகத்தையும் பறித்துக்கொண்டு, நம்மை அம்மணமாக்கும் நிலையும் வரப்போகிறது. இச்சட்டமுன்வரைவைக் கொண்டுவரபோவதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினரையும் கூட்டி கருத்துக்கணிப்பு கேட்டுள்ள நிலையில் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எஸ்.யு.சி.ஐ, தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளும் இப்பகாசுர 16 சட்டமுன்வரைவுகளை எதிர்க்கவோ, அதைப் பற்றி வாய்த்திறக்கவோ, குறைந்தபட்சம் தன்னுடைய கட்சித் தொண்டர்கள் அல்லது கீழ்க்கமிட்டிகுக் கூட தெரிவிக்காதது ஆச்சரியப்படத்தக்கதல்ல.

உயர்கல்வி விஷயத்தில் கொண்டுவரப் போகிற இந்த சட்டமுன்வரைவுகள் மூலம் கடைசியாக மீதமிருக்கும் அரசுக் கல்லூரிகளையும் ஒழித்துவிட்டு பணம் இருப்பவர்கள் மட்டுமே இனி கல்வி கற்கலாம் என்கிற நிலை இன்னும் கூடிய விரைவில் வரப்போகிறது என்பதுடன் இடஒதுகீட்டை முற்றிலுமாக ஒழிப்பது, கோடிகளில் கொள்ளையடிப்பது, தீர்ப்பாயங்களின் ஏகபோக அதிகாரம், மிச்ச சொச்ச சமூக நீதியை ஒழிப்பது போன்ற அபாயங்களும் நிகழவுள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக்கி வரும் நிலையில், உயர்கல்விகான இச்சட்ட முன்வரைவுகள் சேவைத்துறையில் சோரம் போக வழிவகுப்பதுடன், நமது அறிவு வளத்தையும் திருடிக்கொண்டு போகப்போவது, வெகுதொலைவில் இல்லை. மேலைநாட்டு கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் பரப்புவதன் மூலம் இன்று இருக்கும் அந்நிய மோகத்தை மேலும் வெறியாக்கி வளர்க்கவும், மாணவர்களை அதிக விலைபோகக்கூடிய பண்டமாக மாற்றவும் இறுதியில் கிஞ்சித்தும் சமூக அக்கறை இல்லாத, முடமாக்கப்பட்ட சமூகமாக மாற்றும் அபாயமும் உள்ளது.

தீவிர நிதி நெருக்கடியால் பாதிக்கப்படுள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தங்கள் கல்விச் சந்தையைத் திறக்கவே இச்சட்டத்தை இங்கு அமுல் படுத்த நெருக்கடியைக் கொடுக்கின்றன என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஏதோ நமது குழந்தைகளின் எதிர்காலத்தில் பெரிய அக்கறை இருப்பது போலவும் அதற்காகத்தான் இக்கழிசடை மசோதாக்கள் வரவிருப்பதாகவும் ஒரு போலி பிம்பத்தை இவ்வரசு உருவாக்கி வருகிறது. இந்த அபாயச் சங்கைக் குறிப்புணர்ந்து போராடப் போகிறோமா அல்லது மேலும் இருளில் மூழ்கிச் சாகப்போகிறோமா என்பது நமது கையில்தான் உள்ளது.

நன்றி - வினவு

Tuesday, September 20, 2011

மகனுக்காக சோனாவிடம் சமரசம் பேசிய எஸ்பி பாலசுப்பிரமணியன் !



கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கவர்ச்சி நடிகை சோனாவை, பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் சந்தித்துப் பேசியிருப்பதுதான்!

மங்காத்தாவுக்காக நடிகர் வைபவ் வைத்த மதுவிருந்தில் பங்கேற்ற நடிகை சோனாவின் ஆடைகளைக் களைந்து, பலாத்காரம் செய்ய முயன்றார் என எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் மீது நடிகை சோனா பகீர் புகார் கூறினார். இதனை போலீசில் புகாராகப் பதிவு செய்தார் சோனா. இதனைத் தொடர்ந்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போலீசார் எந்த நேரமும் சரணை கைது செய்யலாம் என்ற நிலையில், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சரண். அதில் இந்தப் பிள்ளையும் பீர் குடிக்குமா என்கிற மாதிரி, 'சோனாவை நான் தொடவே இல்லை. குடித்துவிட்டு என் மேல் விழுந்த சோனாவை பாலுணர்வை தூண்ட வேண்டாம் என எச்சரித்தேன்,' என்று கூறியிருந்தார். அவரது இந்த ஸ்டேட்மெண்ட்டைப் பார்த்து சினிமாக்காரர்களே சிரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்னொரு பக்கம், அந்த மானபங்க சம்பவம் நடந்த நேரத்தில் அருகிலிருந்து சண்டையை விலக்கிவிட்டதாகக் கூறப்படும் மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்களையும் விசாரிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். இந்த மூவரும் இப்போது இருக்குமிடமே தெரியவில்லையாம்!

மருத்துவமனையில் சந்திப்பு...

இந்த நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த சரணின் தந்தை எஸ்பி பாலசுப்பிரமணியன், கைது, வழக்கு என தொடரவிருக்கும் அவமானங்களைத் தவிர்க்கும் பொருட்டு, சமாதானம் பேச முயன்றுள்ளார்.

நேற்று மாலை, சோனா தங்கி சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்ற அவர், சோனாவை நலம் விசாரித்துள்ளார். உடம்பை பாத்துக்கோம்மா என்று அக்கறையாகச் சொன்ன எஸ்பிபி, நடந்த சம்பவங்களை முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். மேலும் சரண் தன்னிடம் அத்துமீறியதற்கு ஆதாரமாக தன்னிடம் உள்ள வீடியோ மற்றும் படங்களையும் சோனா காட்டியதாகவும், அவரது மோசமான நடத்தை மற்றும் மிரட்டல் தந்த மன உளைச்சல்தான் இந்த மாரடைப்புக்கு காரணம் என்றும் சோனா உருக்கமாகத் தெரிவித்தாராம்.

மகன் மீதுள்ள தவறைப் புரிந்து கொண்ட எஸ்பிபி, விரைவில் சரணை நேரில் அனுப்பி மன்னிப்பு கேட்க வைப்பதாகவும், பகிரங்கமாக மன்னிப்புக் கடிதம் தர வைப்பதாகவும் உறுதியளித்துள்ளாராம்.

ஏற்கெனவே எஸ்பிபி சரண் படம் தயாரித்து நஷ்டமடைந்ததன் விளைவாக, தனது ஸ்டுடியோவையே விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் எஸ்பி பாலசுப்பிரமணியம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்போது சோனாவைச் சந்தித்து சமாதானம் பேசும் நிலைக்கு அவரைத் தள்ளியுள்ளது சரணின் செயல் என்கிறார்கள் திரையுலகினர்.

இதற்கிடையே, சரணின் முன்ஜாமீன் மனு இன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில்.


Justify Full

இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா கடந்த ஆண்டு அரசு முறை பயணமாக அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக்கோரி சிறை கைதிகள் உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபர் 1986-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். இவர் மீதான வழக்கு சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் 1994-ல் டக்ளசுக்கு எதிராக தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அவரை உடனடியாக கைது செய்யுமாறு சென்னை போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவுக்கு மத்திய அரசு சார்பில் இலங்கைக்கான வெளியுறவு துறை சார்பு செயலாளர் கே.எம்.பி.சர்மா பதில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் கைதிகள் பரிமாற்றம் சட்டத்தின்கீழ் இரு நாடுகளுக்கு இடையே 1978-ல் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா அந்நாட்டு அமைச்சராக உள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரை கைது செய்ய முடியாது. அவரை கைது செய்வது என்பது இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுக்கு எதிரானதாகும்.

ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் அடுத்தக்கட்ட விசாரணையை 4 வார காலத்துக்கு தள்ளி வைத்தனர்.

திருக்குறள் தான் எனது வாழ்க்கையின் வழிகாட்டி: அப்துல் கலாம் எழுச்சி உரை.



முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இங்கு அனைத்து மாணவர்களையும் சந்திக்கும் போது நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பள்ளி நூற்றுக்கணக்கான அறிஞர்களை உருவாக்கும் ஊற்றாக விளங்குகிறது. உங்களை எல்லாம் பார்க்கும்போது பல விஞ்ஞானிகள் வருவார்கள், பல என்ஜினியர்கள், பல் துறை வல்லுனர்கள், ஆசிரியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வருவார்க்ள், ந்ல்ல அரசியல் தலைவர்கள் வருவார்கள், அதைவிட முக்கியம் நல்ல சான்றோர்களையும் உருவாகுவார்கள் என்று நம்புகிறேன். அதற்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பகுதியில் உள்ள மாணவர்களை சந்தித்து உரையாடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியாகும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்க்ள்.

உங்களிடம் நீ... நீயாக இரு என்ற தலைப்பில் உரையாட வந்திருக்கிறேன்.

எண்ணங்கள் செயலாகின்றன. மேகம் இல்லாத நாட்களில் தென் வானத்தை அன்னாந்து பாருங்கள், அங்கு பிரகாசமாகத் தெரிவது தான் மில்கி வே என்ற நம் அண்டம். அந்த மில்கி வேயில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்தை சுற்றிலும் பல்வேறு விண்மீன்கள் உள்ளன. நமது பூமி சூரியனை சுற்றுகிறது.

சூரியன் நம்து கேலக்ஸியான மில்கி வேயை சுற்றுகிறது. மில்கி வேயே பிரபஞ்சத்தை சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. நமது மில்கி வேயைப்போல் ஆயிரக்கண க்கான மில்கி வேக்கள் உள்ளன. இதைப் பார்க்கும் போது ஒரு பெரும் சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது என்று தெரிகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி சந்திராயன் -1 திட்டத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நாசா, ஜேபிஎல், இஸ்ரோ விஞ்ஞானிகளோடு நானும், இஸ்ரோ தலைவர் மாதவன் நாயரும் கலந்து கொண்டோம். இஸ்ரோவும், நாசாவும் சேர்ந்து உருவாக்கிய எம்3(மூன் மினராலஜிமேப்பர்) என்ற சென்சார் உபகரணம் எப்படி HO/H2O தண்ணீர் படிகங்களை கண்டுபிடித்தது என்பதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்து விவாதித்தோம்.

அப்போது நாசா ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஒரு சிறப்பைப் பற்றி கூறினார். அதாவது கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு நாடுகள் (அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான்) தனித் தனியே செய்த முயற்சியால் கண்டுபிடிக்கப்படாதது, இந்தியாவின் சந்திராயனால் சாத்தியப்பட்டது, இந்திய-அமெரிக்க கூட்டு முயற்சியால் எம்3 தண்ணீரை கண்டறிந்தது என்ற ஆராய்சி முடிவுகளை அறிந்த போது இந்தியாவை நினைத்து மிக்க மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தேன்.

எனவே, மாணவர்களே இந்தியாவின் அறிவியல் மாட்சிமையை உலகிற்கு பரைசாற்றும் விதமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது.

அது எப்படி சாத்தியமாகிறது. நீ நீயாக இரு.

தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நிணைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் யார் வருகிறார்கள்? ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும்போது அலெக்சாண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார்.

ஏன் கடலின் நிறமும், அடி வானத்தின் நிறமும் நீலமாக இருக்கின்றது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும்போது ஒரு விஞ்ஞானியின் மனதில் அந்த கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கான பதில் தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான் சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது.

அஹிம்சா தர்மம் என்ற ஆயுதத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று உலகிற்கே அஹிம்சா தர்மத்தை போதித்தவர் மகாத்மா காந்தியடிகள். எனவே, ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது. ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம் என்பது தான் அதன் அர்த்தம்.

60 கோடி இளைஞர் சமுதாயம்

மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும். இந்த திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர்.

நமது நாடு, நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டிற்கேற்ற வளர்ச்சி முறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பழக்க வழக்கங்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு, இந்தக்கால முறைக்கு ஏற்றாற் போல் நம்மை நாம் அறிவுப்பூர்வமாக மாற்றி அமைக்கவேண்டும். நாம் நமது முகவரியை இழக்காமல் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மாறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த சமயத்தில் நான் ஓரு முறை இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றிப் பாடிய கவிதை வரிகள் என் நினைவுக்கு வருகிறது.

அந்தக் கவிதையின் தலைப்பு இலட்சியம்.

இலட்சியம்.

நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா

நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா

இறைவா, இறைவா, நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும்,
அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக.

இந்த கவிதையின் கருத்து என்ன?

நாம் வாழ் நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும் போது நமக்கு வாழ்வில் ஒரு இலட்சியம் வேண்டும்.

அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.

இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்களை பார்க்கிறேன். நீங்கள் எல்லோரும் வெற்றியடைய, வளமான வாழ்வு பெற ஒரு சிறு கவிதை மூலம் என் கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த கவிதையின் தலைப்பு, "வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்" என்பதாகும்.

நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன்,
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்.
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை உன்னால் வெற்றியடைய முடியும்.

நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய். நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன், வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும், கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால் வெற்றியடைய முடியும். என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது நானும், என் இனிய நண்பன் ராமசாமியும் பக்கத்தில் உட்கார்ந்து இருப்போம். அவரது வீட்டில் தான் மின்சாரம் இருந்தது, பரீட்சைக்குப் படிக்கும் போதெல்லாம் அவரது வீட்டுக்கு சென்று தான் படிப்பேன்.

எங்கள் இருவரது குடும்பத்திற்கும் பல்வேறு நிலையில் வேற்றுமைகள் இருந்தாலும், ஓர் ஒற்றுமை இருந்தது. அது எங்களுடைய பெற்றோர்கள் நண்பர்கள் என்பது தான். எனவே, நாங்களும் நண்பர்களாக இருந்தோம். நானும், என் நண்பனும் படிப்பிலும் எண்ணங்களிலும் ஒரே விதமாக செயல்பட்டோம்.

1936-40-ம் வருடங்களில் பரீட்சை சமயத்தில் பகல் நேரங்களில் என்னுடைய வீட்டில் நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்போம். இரவில் அவரது வீட்டில் சேர்ந்து மின்சார ஒளியில் ஒன்றாக படிப்போம். படித்து, படித்து முன்னேறினோம். பல தடைகள் எங்கள் முன்னேற்றத்தை தடு்க்கவில்லை. அது எவ்வாறு முடியும்.

பினாச்சியோ என்ற பிரஞ்சு கவிஞர் சொல்கிறார்.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்

என்னுடைய கருத்து என்னவென்றால் உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய உழைப்பு முக்கியம், உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.

மாணவ நண்பர்களே, உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன? எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், கலெக்டர், ஆசிரியர், தொழில் அதிபராக கனவு காண்கிறீர்கள்? எத்தனை பேர் விண்வெளியில் நடக்கவும், சந்திரனிலும், செவ்வாய் கிரகத்திலும் நடக்க விரும்புகிறீர்கள்?

கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை நான் 1.2 கோடி இளைஞர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இருக்கிறேன், அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன்.

சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் இளஞர்கள் கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்களாகப் போகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு 100 இளைஞர்கள் கையைத் தூக்கினார்கள்.

எத்தனை பேர் சந்திரனுக்கும், வியாழன் கிரகத்திற்கும் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன், அனைவரும் கையைத் தூக்கினார்கள்.

எத்தனை பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். 50 இளைஞர்கள் நாங்கள் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறோம் என்றார்கள்.

அதில் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஒரு மாணவன் இந்தியாவை 10 ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றுவேன் என்று சொன்னார். லஞ்சத்தை ஒழிப்பேன் என்று ஒரு மாணவி கூறினார். இன்னொரு மாணவன் - இளைய சமுதாயத்தை என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பேன், அப்படியென்றால் இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன் என்ற நம்பிக்கையை கொடுப்பேன் என்றார். எங்கு சென்றாலும் இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, லட்சியத்தை, கனவைப் பார்க்கிறேன்.

எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள் தான்.

எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும்.

பூமிக்கு கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் மனஎழுச்சி கொண்ட இளைஞர்கள் தான் மிகப் பெரிய சக்தி.

இந்தியா 60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. இளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியா. ஒரு வகையில் மக்கள் தொகை இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.

மாணவர்களே! உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. கனவு காண்பது ஒவ்வொரு குழந்தையின், இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவைப்பெற அதை தேடிச் சென்றடைய வேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.

அறிவைப் பெற்று அறிவார்ந்த சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்றால் அதற்கான அறிவின் இலக்கணம் என்ன என்று பார்ப்போம்.

அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா. அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அது என்னவென்றால், அதற்கு ஓரு சமன்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அறிவு = கற்பனை சக்தி + மனத்தூய்மை + உள்ள உறுதி

கற்பனை சக்தி

கற்றல் கற்பனைச் சக்தியை வளர்க்கிறது
கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது
சிந்தனை அறிவை வளர்க்கிறது
அறிவு உன்னை என்ன ஆக்குகிறது? தெரியுமா?..........
மகானாக்குகிறது.

கற்பனை சக்தி உருவாவதற்கு குடும்ப சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும் தான் மிக முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலை உருவாவதற்கு என்ன வேண்டும், ஒவ்வொருவரது உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும்.

மனத்தூய்மை

எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை இருந்தால்
உலகத்தில் அமைதி நிலவும்.

எல்லாவற்றிக்கும் அடிப்படை மனத்தூய்மை என்பதை இச்சிறு கவிதை மூலம் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.

மனத்தூய்மை எங்கிருந்து வரும். மூன்றே மூன்று பேர்களிடம் இருந்து தான் இதை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யார்? அவர்கள் தான் தாய், தந்தை மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்.

உள்ள உறுதி

புதிய எண்ணங்களை உருவாக்கும் உள்ள உறுதி இன்று என்னிடம் உள்ளது. எனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன். முடியாது என்று எல்லோரும் சொல்வதை என்னால் முடியும் என்ற மன உறுதி என்னிடம் உருவாகிவிட்டது. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்ய முடியும் என்ற உள்ள உறுதி என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது.

இந்த உள்ள உறுதிகள் எல்லாம் இளைய சமுதாயத்தின் சிறப்புகளாகும், அஸ்திவாரம் ஆகும். இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான் என் கடின உழைப்பாலும், உள்ள உறுதியினாலும், தோல்வியை தோல்வியடையச் செய்து, வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடக்குவேன்.

நண்பர்களே, உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று சொன்னேன். அது எப்படி வரும், யார் மூலம் வரும். நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், ந்ல்ல புத்தகங்கள் இவைகள் உள்ளத்தில் உறுதி பெற வைக்கும்.

அது நாம் எக்காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியும், நம்பிக்கையையும் அளிக்கிறது. மனதில் உறுதி இருந்தால் வெற்றி அடைவீர்கள்.

என்னால் எதைக் கொடுக்க முடியும்

இளைய சமுதாயத்திற்காக ஓர் இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். அதில் தலைவர் என்று யாரும் இல்லை. அது ஒரு இளைஞர்கள் இயக்கம். "என்னால் எதைக் கொடுக்க முடியும்" அல்லது "உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்ற எண்ணத்தை இளஞர்கள் மனதில் உருவாக்குவது தான் அந்த இயக்கத்தின் நோக்கம். 10 இளைஞர்கள் ஒன்று கூடி இந்த உணர்வை வளர்த்து அதை செயல்படுத்துவது தான் இந்த இயக்கத்தின் நோக்கம். எந்த ஊரிலும் இதை ஆரம்பிக்க முடியும்.

எனக்கு வேண்டும் என்ற சுயநல எண்ணம் தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. அந்த எண்ணத்தை மாற்றி நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனதை, வீட்டை, குடும்பத்தை தூய்மையானதாக மாற்றுவோமேயானால் நாடு மாறும்.

"நான் என்றென்றைக்கும் கொடுத்துக் கொண்டே இருப்பேன்" என்ற மனநிலை நம் இளைஞர்களுக்கு வருமென்றால், அந்த மனநிலை, "எனக்கு வேண்டும், எனக்குத்தான் வேண்டும்" என்ற எண்ணத்தை சுட்டெரிக்கும். இளைஞர்களே நீங்கள் எல்லோரும் இப்பணிக்கு தயாரா? வாருங்கள் நண்பர்களே!

என் இணையதளத்தில் உங்களை பதிவு செய்து இந்த இயக்கத்தை வலிமையானதாக ஆக்குங்கள். நீங்கள் என்னை www.abdulkalam.com என்ற இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.

கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.

மாணவர்க்களுக்கான பத்து உறுதிமொழிகள்.

1. நான், எனது வாழ்க்கையில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன். நன்றாக உழைத்துப் படித்து என் வாழ்க்கையிலே மேற்கொண்ட லட்சியத்தை அடைய முற்படுவேன்.

2. நான், எனது விடுமுறை நாட்களில், எழுதப்படிக்கத் தெரியாத ஐந்து பேருக்காவது எழுதப்படிக்க கற்றுத்தருவேன்.

3. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதை பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன்.

4. நான், எனது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வேன், எனது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வேன், எனது முதுகுளத்தூரை தூய்மையாக வைத்துக்கொள்வேன். எனது இந்த செயலால் என் தமிழ்நாடு தூய்மையாகும், இந்தியா தூய்மையாகும், மக்களின் மனமும் சுத்தமாகும், வாழ்வு சிறக்கும்.

5. மது, சூதாடுதல் மற்றும் போதைப்பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும் ஐந்து பேரையாவது அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த நான் முயல்வேன்.

6. நான், ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ எந்தவித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன்.

7. நான், வாழ்க்கையில் நேர்மையாக நடந்து கொண்டு ம்ற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.

8. நான், என் தாய் மற்றும் தாய்நாடு இரண்டையும் நேசித்து, பெண்குலத்திற்கு உரிய் மரியாதையையும், கண்ணியத்தையும் அளிப்பேன்.

9. நான், நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாக்ச் சுடர்விடச் செய்வேன்.

10. நமது தேசியக் கொடியை என் நெஞ்சத்தில் ஏந்தி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்.

வீரபாண்டி ஆறுமுகம் இன்று விடுதலை ஆகிறார்


வீரபாண்டி ஆறுமுகம் இன்று விடுதலை ஆகிறார்

சேலம் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு புகாரில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சேலம் அங்கம்மாள் காலனி நில பிரச்சினை வழக்கு, சேலம் 5 ரோடு ரோலர் பிளவர் மில் நில பிரச்சினை, சேலம் தாசநாய்க்கன்பட்டி பாலமோகன்ராஜ் நில பிரச்சினை வழக்குகள் அவர் மீது போடப்பட்டது.

இதன் பின்னர் சேலத்தை சேர்ந்த நகைக்கடை அதிபர் பிரேம்நாத் கொடுத்த புகாரும் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 40 நாட்களுக்கும் மேலாக அவர் ஜெயிலில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சென்னையில் தங்கி இருந்து தினமும் பூக்கடை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து சேலம் வக்கீல்கள் மூர்த்தி, துரைராஜ் ஆகியோர் நேற்று சேலம் 4-வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை ஜாமீனில் எடுக்க ஆவணங்களை தாக்கல் செய்து ஜாமீன் தொகையை கட்டினார்கள்.

ஜாமீன்தாரர்களின் வீட்டு வரி ரசீது, ரேசன் கார்டு ஆகியவற்றை அவர்கள் தாக்கல் செய்தனர். இரண்டு ரசீதுகளிலும் வீட்டு வரி செலுத்திய நாள் 24.7.2011 என்று குறிப்பிட்டு இருந்தது. இதனால் இந்த வீட்டு வரி ரசீதுகள் உண்மையானதுதானா, என்று மாஜிஸ்திரேட்டு ஸ்ரீவித்யா கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வக்கீல்கள் அவை உண்மையான ரசீதுகள் என கூறினர்.

இதைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட்டும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன் உத்தரவை வழங்கினார். இந்த உத்தரவு நகல் தபால் மூலம் திருச்சி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தபால் இன்று காலைதான் திருச்சி சிறைக்கு கிடைக்கும். இதனால் வீரபாண்டி ஆறுமுகம் இன்று பகலில் விடுதலை ஆவார் என்று கூறப்படுகிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் திருச்சியில் இருந்து நேராக சென்னை சென்று சிகிச்சை பெறலாம் என்றும், சிகிச்சை பெற்றுக்கொண்டே பூக்கடை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடலாம் என்றும் நிர்வாகிகள் சிலர் கூறினர்.

சேலம் அ.தி.மு.க.வக்கீல் மணிகண்டன் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது புகார் தெரிவித்து இருந்தார். இதன் மீது சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாஸ்கரன் மற்றும் உயர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த புகார் அல்லது வேறு ஏதும் புகார்களில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் சிலர் தெரிவித்தனர்.

அறிவு முத்திரை, பூமி முத்திரை, நீர் முத்திரை.

பலன் தரும் பத்து முத்திரைகள்.

``முத்திரை (முத்ரா)'' என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும். புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம். தாந்தீரிகத்தில் 108 முத்திரைகள் உள்ளன. அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அறிவு முத்திரை.

பலன் தரும் பத்து முத்திரை


ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.


பூமி முத்திரை.

பூமி முத்திரை


மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும்.

உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும். நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் - மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும்.
காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.


நீர் முத்திரை.
நீர் முத்திரைJustify Full


சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும்.

இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.